Aran Sei

கார்ப்பரேட் வங்கிகள் பொருளாதார ஆபத்தை விளைவிக்கும்- நிதி ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை

Image Credits: Indian Money

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி தொடங்க அனுமதி அளிப்பது பாதிப்பை ஏற்படுத்த கூடும் எனும் அச்சத்தை எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் (S&P Global Ratings) நிதி ஆராய்ச்சி நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, பெற்ற கடனை திருப்பி செலுத்தாத கார்ப்பரேட் நிறுவனங்கள், கார்ப்ரேட்டுகளை நிர்வகிப்பதில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் ஆகியவற்றைக் குறித்து எஸ் அண்ட் பி கவலை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு, ஜூன் மாதம் 12-ம் தேதி, இந்திய ரிசர்வ் வங்கி தலைவர் சக்திகாந்த தாஸ் உள்பணிக்குழு ஒன்றை அமைத்தார்.

தனியார் வங்கிகளின் சொத்து உரிமை, தனியார் வங்கிகளின் மீதான கட்டுப்பாடு, கார்ப்பரேட் அமைப்புக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற விஷயங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அந்தக் குழுவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அந்தக் குழுவின் அறிக்கை, நவம்பர் 20-ம் தேதி, ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வங்கிகளைத் தொடங்குவோர் தங்களது முதலீட்டை 15 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எஸ் அண்ட் பி வெளியிட்டுள்ள அறிக்கையில் “எவ்வாறாயினும், கடந்த சில ஆண்டுகளாக, கார்ப்ரேட்டுகளை நிர்வகிப்பதில் இந்தியாவுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி தொடங்க அனுமதி அளிப்பது பாதிப்பை ஏற்படுத்துமோ எனும் சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.

“கூடுதலாக, ரிசர்வ் வங்கி நிதி சாராத நிறுவனங்களை மேற்பார்வையிடுவதில் சவால்களை எதிர்கொள்ளும். இந்தியாவின் நிதித் துறையின் ஆரோக்கியம் பலவீனமாக இருப்பதால் மேற்பார்வையிடுவது கடினமாகிவிடும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கார்ப்பரேட் வங்கிகள் இடைக்குழு கடன் வழங்குதல், நிதியை திசை மாற்றுதல் மற்றும் வங்கியின் நற்பெயருக்குச் சேதம் விளைவித்தல் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. கார்ப்பரேட்டுகள் கடன்களைத் திருப்பி செலுத்தாமல் நிதித் துறையை மேலும் பலவீனமாகும் அபாயத்தையும் இது கொண்டுள்ளது” என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்