Aran Sei

’நடப்பது அரசா இல்லை சர்க்கஸா’? – நிதி அமைச்சரை கேள்வி எழுப்பிய காங்கிரஸ்

Image Credits: New Indian Express

ர்க்கஸ் நடத்துகிறீர்களா அல்லது அரசை நடத்துகிறீர்களா என்று சிறுசேமிப்புக்கான வட்டி குறைப்பு உத்தரவைத் திரும்பப் பெற்ற விவகாரம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (மார்ச் 31) மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, இன்று (ஏப்ரல் 1) முதல் ஜூன் 30 வரையிலான, 2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டில், பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி வீதங்கள் 0.4விழுக்காட்டிலிருந்து 1.1 விழுக்காட்டை மத்திய அரசு குறைத்துள்ளதாக   அறிவித்திருந்தது.

இந்தச் சுற்றறிக்கையை வெளியிட்ட அத்துறையின் துணை இயக்குனர் ராஜேஷ் பன்வார் அதற்குப் பொருத்தமானவர்களின் ஒப்புதல் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மத்திய அரசின் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி வீதம் 1.1% வரை குறைப்பு – மூத்த குடிமக்களுக்கும் நடுத்தர வர்க்கத்துக்கும் அடி

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 1) மத்திய அரசின் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி வீதத்தை 0.4% முதல் 1.1% வரை குறைத்த அரசு ஆணை கவனக் குறைவால் வெளியிடப்பட்டு விட்டது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்வீட் செய்துள்ளார்.

மேலும், “இந்திய அரசின் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி வீதம் மார்ச் 2021-ல் இருந்த அதே அளவில் தொடரும்” என்று அவர் கூறியுள்ளார்.

சுற்றறிக்கை வெளியாகி சில மணி நேரங்களுக்குள் நிதி அமைச்சர் அந்த அறிவிப்பை ரத்து செய்துள்ளது குறித்து பலத்த கேலிகளும், கடும் கண்டனங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

வட்டிக் குறைப்பு உத்தரவை வாபஸ் வாங்கிய நிர்மலா சீதாராமன் – ” 5 மாநில தேர்தலில் பாதிக்கும் என்பதால் தற்காலிகமாக ரத்து ” என குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், நிதி அமைச்சர் மேடம் அவர்களே, நீங்கள் அரசை நடத்துகிறீர்களா அல்லது சர்க்கஸை நடத்துகிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கோடிக்கணக்கான மக்களைப் பாதிப்படைய செய்யும் இதுபோன்ற உத்தரவுகளை, ஒருவர் கவனிக்காமல் வெளியிடுகிறார் என்றால், எவ்வாறு நாட்டின் பொருளாதாரம் இயங்குமென்று கற்பனை செய்து பாருங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

சுற்றறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ள தகுதிவாய்ந்த அதிகாரி யார் என்று கேள்வி எழுப்பியதோடு, இனி நீங்கள் நிதி அமைச்சராகத் தொடர உரிமை இல்லை என்று  காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்