நடுத்தர வர்க்கமும் ஏழைகளும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முற்றிலும் பொருட்படுத்தாது, ஒரு உணர்ச்சியற்ற அரசாக ஒன்றிய அரசு உள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இன்று (ஜூன் 1), செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “எல்லா சமிக்ஞைகளும் நம் பொருளாதாரம் மிகவும் நெருக்கடியான நிலையில் இருப்பதாக காட்டுகிறது. கடந்த நான்கு காலாண்டுகளின் பொருளாதார செயல்திறனை கணக்கில் கொண்டால், நான்கு தசாப்தங்களில் 2020-21 ஆண்டுதான் பொருளாதாரத்தில் இருண்ட ஆண்டு.” என்று கூறியுள்ளார்.
“2021-22 ஆண்டு, 2020-21 ஆண்டைப் போல மாறக் கூடாது என்றால் இப்போதாவது விழித்துக்கொண்டு, தன் பிழைகளை ஒப்புக் கொள்ள வேண்டும். தன் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும். பொருளாதார வல்லுநர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று ஒன்றிய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
“பொருளாதாரத்தின் தற்போதைய நிலைக்கு தொற்றுநோயின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் திறமையின்மையாலும் திறமையற்ற பொருளாதார நிர்வாகத்தாலும் பொருளாதார நிலைமை இன்னும் மோசமாகி நொடிந்துப்போனது. பொருளாதார வல்லுநர்கள் மற்றும் புகழ்பெற்ற பொருளாதார நிறுவனங்களின் ஆலோசனைகளும், உலக அளவிலான பொருளாதாரம்சார் அனுபவங்களும் ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளன.” என்று ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியால் மூடப்படும் 10113 நிறுவனங்கள் – கொரோனா தொற்று எதிரொலி
“நிதி விரிவாக்கம் மற்றும் பணப் பரிமாற்றம் தொடர்பான பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆத்மநிர்பார் போன்ற வெற்று திட்டங்கள் தோல்வியையே அடைந்திருக்கின்றன. நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி பணத்தை அச்சிட வேண்டும் என்றும் மக்களின் செலவிடும் திறனை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியதை நாம் கவனித்திருப்போம். ஆனால், அவற்றைவிடுத்து, நேற்று காலையில் கூட, ஒற்றிய நிதியமைச்சர் தனது தவறான மற்றும் பேரழிவை ஏற்படுத்திய கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்கும் வகையில், சில செய்தித்தாள்களுக்கு நீண்ட நேர்காணல்களை வழங்கி வருகிறார்.” என்று அவர் விமர்சித்துள்ளார்.
“பொருளாதாரத்தை சீர்செய்வதற்கு தேவையானதை நாங்கள் முன்னரே பட்டியலிட்டுள்ளோம். அரசாங்கத்தின் செலவினத்தை அதிகரிப்பது, ஏழைகளுக்கு நேரடியாக பணத்தை கையளிப்பது மற்றும் இலவச ரேஷன்களை தாராளமாக மக்களுக்கு விநியோகம் செய்வது உள்ளிட்ட வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் வழியாகவே நாம் பொருளாதாரத்தை சீர்த்தூக்க முடியும் என்று வேண்டுகோள் விடுத்தோம். ஆனால், அவை செவிட்டு காதுகளில்தான் விழுந்தது. இதன் விளைவாக, எதிர்மறையான வளர்ச்சியை (- 7.3 சதவீதம்) நாம் இப்போது காண்கிறோம்.” என்று பா.சிதம்பரம் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க டாலரின் இடத்தைப் பிடிக்குமா சீன நாணயமான ரென்மின்பி? – மாறி வரும் சர்வதேச பொருளாதார சூழல்கள்
கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறித்த எந்தவொரு முடிவுகளுக்கும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமல் பதிலளிக்காமல், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தையே அவமதித்தார் என்று குற்றஞ்சாட்டியுள்ள அவர், ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என்ற மாநிலங்களின் முடிவு குறித்து பேசுகையில், “எந்த முடிவுகளுக்கும் நிதியமைச்சர் பதிலளிக்கவில்லை. இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தால் நமக்கு ஒரு பலனும் கிடைக்கவில்லை. பூஜியம்தான். மொத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தையுமே நிதியமைச்சர் அவமதிக்கும் விதமாகதான் நடத்தினார் என்று நான் நினைக்கிறேன்.” என்று விமர்சித்துள்ளார்.
நாட்டில் நிலவும் வேலையின்மை குறித்து சுட்டிக்காட்டி பேசிய ப.சிதம்பரம், “வேலையின்மை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போது, 11 சதவீதத்தை தாண்டியுள்ளது. பொருளாதாரத்தில் தொழிலாளர்களின் பங்களிப்பானது குறைந்துக்கொண்டே வருகிறது. அதன் விளைவாக, அதிகமான மக்கள் வறுமையில் தள்ளப்படுகிறார்கள். இவை அனைத்துமே, பொருளாதாரம் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது என்பதற்கான குறியீடுகளாகும். மேலும், இவை அனைத்தும், ஏழைகளிடத்தில் ஆழ்ந்த துயரத்தையே விதைக்கின்றன.” என்று தனது வருத்தத்தை ப.சிதம்பரம் பதிவு செய்துள்ளார்.
இந்தியாவில் வேலையின்மை விகிதம் 14.7 விழுக்காடாக அதிகரிப்பு – பொருளாதார ஆய்வில் தகவல்
“நடுத்தர வர்க்கமும் ஏழைகளும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முற்றிலும் பொருட்படுத்தாது, ஒரு உணர்ச்சியற்ற அரசாக ஒன்றிய அரசு உள்ளது. நாட்டில் நிதிப் பற்றாக்குறை அதிகரித்து வருவது குறித்து நாம் கவலைப்பட வேண்டிய நேரம் இதுவல்ல.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நமக்கு இப்போது முக்கியானது, கடந்த ஆண்டு இழந்ததைப் போல இன்னொரு ஆண்டையும் நாம் இழக்கக் கூடாது. தைரியமாகவும் தீர்க்கமாகவும் செயல்பட வேண்டிய நேரமிது. கடன் வாங்கிச் செலவிடுங்கள். தேவைப்பட்டால் பணத்தை அச்சிட்டு, சுகாதார உள்கட்டமைப்பை மேன்படுத்துவதில் செலவிடுங்கள். நற்பணி நடவடிக்கைகளை பணப் பரிமாற்றங்கள் வழியாக செய்யுங்கள். இப்போது தேவையான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். அப்போதுதான், கொரோனா மூன்றாவது அலை அல்லது நான்காவது அலையின் பேரழிவைத் தடுக்க முடியும்.” என்று ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Source; pti
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.