Aran Sei

அலிபாபா – இணைய ஏகபோகத்துக்கு எதிராக சீன அரசின் விசாரணை

Image Credit : reuters

லகின் மிகப்பெரிய இணைய சேவை நிறுவனங்களில் ஒன்றான அலிபாபா மீது ஏகபோக சதி எதிர்ப்பு விசாரணையை சீன அரசு தொடங்கியுள்ளது.

சீனாவில் வேகமாக வளர்ந்து வரும் இணைய சேவைத் துறையில் ஏகபோக ஆதிக்கத்தை எதிர்த்த இந்த நடவடிக்கை அலிபாபா நிறுவனத்தை உருவாக்கிய, உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான, ஜேக்கி மாவுக்கு தனிப்பட்ட பின்னடைவு என்று என்டிடிவி கருத்து தெரிவித்துள்ளது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, அலிபாபா குழுமத்தின் நிதித் தொழில்நுட்ப நிறுவனமான ஆன்ட் நிறுவனத்தை நேரில் வருமாறு ஒழுங்குமுறை அதிகாரிகள் அழைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பில், “ஆன்ட் குழுமம் நிதித்துறை கண்காணிப்பு, நியாயமான போட்டி ஆகியவற்றை அமல்படுத்தி நுகர்வோரின் சட்டபூர்வமான உரிமைகளையும் நலன்களையும்” பாதுகாப்பதற்கு வழிகாட்டப்படும் என்று என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது

ஆன்ட் குழுமம் இணையவழி கடன் கொடுக்கும் தொழிலில் வேகமாக வளர்ச்சியடைந்து இந்த ஆண்டின் முதல் பாதியில் அதன் மொத்த வருவாயில் 40% இணையவழி கடன் கொடுப்பதன் மூலம் ஈட்டப்பட்டிருக்கிறது.

சென்ற மாதம் ஆன்ட் நிறுவனம் திட்டமிட்டிருந்த $3700 கோடி மதிப்பிலான (சுமார் ரூ 2.76 லட்சம் கோடி) முதல் பங்கு விற்பனையை சீனா அதிரடியாக தடுத்து நிறுத்தியது என்று என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது. இந்த பங்கு விற்பனை உலகின் மிகப்பெரிய முதல் பங்கு வெளியீடாக இருந்திருக்கும். இந்தப் பங்குகள் ஷாங்காய் மற்றும் ஹாங்காய் பங்குச் சந்தைகளில் வர்த்தகத்துக்கு பட்டியலிடப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு அது இடைநிறுத்தம் செய்யப்பட்டது.

“ஏகபோகத்தை சகித்துக் கொண்டால், நிறுவனங்கள் ஒழுங்கின்றி, அராஜக முறையில் விரிவடைய அனுமதிக்கப்பட்டால், இந்தத் துறை ஆரோக்கியமான, நீடித்த முறையில் வளர்ச்சியடையாது” என்று சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார பூர்வ நாளேடான பீப்பிள்ஸ் டெய்லி எழுதியிருந்தது.

சென்ற மாதம் சீன அரசு, இணைய வர்த்தக நிறுவனங்கள் ஏகபோகங்களாக நடந்து கொள்வதை தடுக்கும் நோக்கத்துடன் வரைவு வழிகாட்டுதல்கள் வெளியிட்டிருந்தது. இது இந்தத் துறையில் ஏகபோக நடத்தைக்கு எதிரான முதல் தீவிரமான நடவடிக்கை என்று என்டிடிவி கூறுகிறது.

அலிபாபாவின் இணைய வழி வர்த்தக சந்தையில் தமது பொருட்களை விற்க வேண்டுமானால், வர்த்தகர்கள் மற்ற போட்டி சந்தைகளில் அவற்றை விற்கக் கூடாது என்று அலிபாபா நிபந்தனை விதித்தது தொடர்பாக ஒழுங்குமுறை அதிகாரிகள் அந்நிறுவனத்தை எச்சரித்திருந்தனர்.

இது தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளதாக சந்தை ஒழுங்குபடுத்தலுக்கான அரசு நிர்வாகம் வியாழக் கிழமை அறிவித்துள்ளது.

“நியாயமான போட்டி சந்தைப் பொருளாதாரத்தின் மையத்தில் உள்ளது, ஆனால் ஏகபோகமோ வளங்களை ஒதுக்கீடு செய்வதை சீர்குலைத்து, சந்தை போட்டியாளர்களின் நலன்களுக்கும் நுகர்வோர் நலன்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியை ஒழித்துக் கட்டுகிறது” என்று பீப்பிள்ஸ் டெய்லி கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்