Aran Sei

கடன் வட்டிகள் தள்ளுபடி : மத்திய அரசு

credits : outlook

இரண்டு கோடிகள் வரை பெற்ற கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு.

வழிகாட்டுதலில் உள்ள படி, இந்தத் திட்டத்தைச் சில குறிப்பிட்ட தகுதிகளைக்கொண்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளில் 2020 மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை பெற்ற கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான தடையைப் பெற்றவர்கள் (மொரட்டோரியம்), இதைப் பெறாதவர்கள் என்ற பாகுபாடின்றிப் பண்டிகை காலம் தொடங்குவதால் அனைவருக்கும் பயன்பெறும் வகையில் இது போன்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

உச்சநீதி மன்றம் இதைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை நிதி சேவை துறையிடம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் கருவூலத்திற்கு ரூ.6500 கோடி வரை செலவாகும் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் கொரோனா பெருந்தொற்றின் காலத்தில் ரிசர்வ் வங்கியின் தடை திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி வரை பெற்ற கடன்களுக்கான வட்டி தள்ளுபடியை விரைவில் அமல்படுத்தமாறு உச்சநீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

“ ஒரு சமானியனின் தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டம் அரசாங்கத்தின் கையில் உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தது.

வழிகாட்டுதல்களின் படி, இந்தத் திட்டம் சில குறிப்பிட்ட தகுதிகளைக்கொண்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளில் மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 2020 வரை பெற்ற கடனுக்கான வட்டிகளைத் தள்ளுபடி செய்யும்.

2020 பிப்ரவரி 29ஆம் தேதியிலிருந்து வாடிக்கையாளர் ஒருவர் தன்னுடைய கடன் கணக்குகளின் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறாமலும் (கடன் வழங்கும் நிறுவனங்களுடனான அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி ) இரண்டு கோடிகள் வரை கடன் பெற்றவர்கள் அனைவரும் இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள்” என்று அந்தத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

வழிகாட்டுதலில் குறிப்பிட்டப்பட்டுள்ள தகுதியின் அடிப்படையில் வாடிக்கையாளரின் கணக்குகள் தரமாக இருக்க வேண்டும். அதாவது அவர்களிடம் வாராக் கடன் இருக்கக் கூடாது என்றும் கூறுகிறது.

வீட்டுக்கடன், கல்விக்கடன்கள், கிரெடிட் கார்டு பாக்கிகள், வாகனக் கடன்கள், எம்.எஸ்.எம்.இ கடன்கள், நுகர்வோர் நீடித்த கடன்கள் மற்றும் நுகர்வுக் கடன்கள் ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளன.

இத்திட்டத்தின்படி, ரிசர்வ் வங்கி அறிவித்த கடனைத் திருப்பிச் செலுத்துவதில் கடன் வாங்குபவர் முழு அல்லது ஓரளவு தடையைப் பெற்றாரா என்பதைப் பொருட்படுத்தாமல், அந்தக் காலங்களில் அந்தந்தக் கணக்குகளில் தகுதியான கடன் வாங்குபவர்களுக்குக் கூட்டு வட்டி மற்றும் எளிய வட்டிக்கு இடையிலான வேறுபாட்டைக் கணக்கு செய்து கடன் வழங்கும் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இந்தத் திட்டம் மொராட்டோரியத்தைப் பயன்படுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து கடன் செலுத்திக்கொண்டிருப்பவர்களுக்கும் பொருந்தும்.

இந்தத் தொகையை வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்த பிறகு கடன் வழங்கும் நிறுவனங்கள் மத்திய அரசிடமிருந்து இதைப் பெற்றுக்கொள்ளும்.

பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீனிவாசன் அரண்செய்யிடம்“ மத்திய அரசு இதைச் சுயமாகச் செய்யவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கொடுத்த அழுத்தத்தின் பெயரிலேயே இதைச் செய்திருக்கிறது என்றும் கூறினார். மேலும் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதில் வங்கிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கண்காணிக்க வேண்டும். மக்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டுப் பெற வேண்டும் என்று கூறினார். மேலும் நீதிமன்றம் இன்னும் முழுத் தீர்ப்பையும் தர வில்லை. அதன் பின்னரே இது குறித்து விரிவாகப் பேச முடியும் என்றும் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்