ரயில்வே துறை, விண்வெளித் துறை உள்ளிட்ட மத்திய அரசின் 50 துறைகள் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ரூ.157.23 கோடியைப் பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளன (பிஎம் கேர்ஸ்) என்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆர்டிஐ மூலம் பெற்ற பதிலில் தெரியவந்துள்ளது.
இந்தப் பட்டியலில் ரூ.146.72 கோடி வழங்கி முதலிடத்தில் உள்ள ரயில்வே தனது ஆர்டிஐ பதிலில், இந்தத் தொகை “ஊழியர்களின் பங்களிப்பு மூலம் பிஎம் கேர்ஸ் நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.
‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பெற்ற ஆர்டிஐ பதில்களின் அடிப்படையில், விண்வெளித் துறை ரூ.5.18 கோடிக்கு மேல் வழங்கி இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில உள்ளது. “அவர்களின் தனிப்பட்ட திறனில் ஊழியர்களின் பங்களிப்பு உள்ளது… அவர்களின் சம்பளத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது,” என்று அத்துறையின் பதில் குறிப்பிடுகிறது.
இருப்பினும், பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ), உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பல முக்கிய துறைகள் மற்றும் தபால் துறை போன்ற பெரிய துறைகள் ஆர்டிஐ கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை.
முன்னதாக, இந்த நிதியை நிர்வகிக்கும் பிரதமர் அலுவலகம், பெறப்பட்ட நிதி குறித்த விவரங்களை வழங்க மறுத்துவிட்டது. “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2 (எச்) கீழ் பிஎம் கேர்ஸ் நிதி நிறுவனம் ஒரு பொது நிறுவனம் அல்ல. இருப்பினும், பிஎம் கேர்ஸ் நிதி தொடர்பான தகவல்களை pmcares.gov.in இணையதளத்தில் காணலாம்,” என்று பதில் அளித்துள்ளது.
கொரோனா தொற்றை தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி பிஎம் கேர்ஸ் உருவாக்கப்பட்டதாகவும், மார்ச் 31 க்குள் ரூ.3,076.62 கோடி சேர்ந்துள்ளதாகவும், அதில் ரூ.3,075.85 கோடி “தன்னார்வ பங்களிப்புகள்” என்று pmcares.gov.in இணையத்தளம் பட்டியலிடப்பட்டுள்ளது.
இதுவரை, குறைந்தது 38 பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் சமூக பொறுப்புணர்வு நிதிகள் மூலம் ரூ.2,105 கோடியை வழங்கியுள்ளன. ஏழு பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களின் ரூ.204.75 கோடி உட்பட பல மத்திய கல்வி நிறுவனங்களும் ரூ.21.81 கோடியை ஊழியர்களின் சம்பளத்திலிருந்து நிதி அளித்தது, ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.
ஆர்டிஐ கேள்விகள் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை அனுப்பப்பட்டன. செவ்வாய்க்கிழமை வரை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசிடமிருந்து பெற்ற தரவுகளின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
உயிர் தொழில்நுட்பத் துறை (டிபிடி), வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை (டிஏஆர்இ) மற்றும் மருந்துவத் துறை ஆகியவை தகவல்களை வழங்க மறுத்துள்ளன. டிபிடி இந்தத் தகவல் “எந்தவொரு பொது நலனுக்கும் உதவாது” என்று கூறியுள்ளது, இது “மூன்றாம் தரப்பு தகவல்” என்று டிஏஆர்இ கூறியுள்ளது, மருந்துத் துறையும் பிஎம்ஓ கூறியது போல் “பிஎம் கேர்ஸ் நிதி நிறுவனம் ஒரு பொது நிறுவனம் அல்ல” என்று கூறியுள்ளது.
சில துறைகள் ஆர்டிஐ கேள்விகளை பிஎம்ஓவுக்கு அனுப்பியது, அது மீண்டும் “பிஎம் கேர்ஸ் நிதி நிறுவனம் சட்டத்தின் கீழ் ஒரு பொது நிறுவனம் அல்ல” என்று வலியுறுத்தியுள்ளது. மற்ற பதில்களில், சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ரூ.1.14 கோடியை வழங்கியதாகக் கூறியுள்ளது.
வெளியுறவு அமைச்சகம் (எம்இஏ) இந்த நிதிக்காக ரூ.43.26 லட்சம் “2020 மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் அமைச்சகத்தின் ஊதிய பட்டியலில் உள்ள அதிகாரிகளின் சம்பளத்திலிருந்து கழிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் (சிவில்) (ரூ.26.20 லட்சம்) கீழ் பாதுகாப்புத் துறை போன்ற பிற துறைகள்; சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (ரூ.18.51 லட்சம்); மற்றும் பணியாளர்கள், பொது குறைகளை மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் (ரூ.16.91 லட்சம்); ஜனாதிபதியின் செயலகத்தின் ஊழியர்கள் (ரூ. 12.05 லட்சம்), பிஎம் கேர்ஸ் நிதிக்கு, ஊழியர்களின் சம்பளத்திலிருந்து, நிதி வழங்கப்பட்டுள்ளது இந்தப் பதில்களின் மூலம் தெரியவந்துள்ளது.
ரூ.157.23 கோடியை வழங்கிய 50 துறைகள் தவிர, மக்களவை (ரூ.52.54 லட்சம்) மற்றும் மாநிலங்களவை (ரூ.36.39 லட்சம்) ஊழியர்கள் தங்கள் சம்பளத்திலிருந்து பிஎம் கேர்ஸ் நிதிக்குப் பணம் அளித்துள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.