Aran Sei

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட கடனின் வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது – மத்திய அரசு

கொரோனா காலத்தில் கடன் வாங்கியவர்களின் சுமையை குறைக்க கடந்த மார்ச் மாதம் ரிசர்வ் வங்கி கடன் தள்ளிவைப்பை அறிவித்தது. முதலில் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரையிலும் அதன் பிறகு, ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையிலும் கடன் தள்ளிவைப்பு நீடிக்கப்பட்டது.

கடன் தள்ளிவைப்பு மீதான வட்டியை தள்ளுபடி செய்யுமாறு பதிவு செய்யப்பட்ட வழங்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு செப்டம்பர் 3ஆம் தேதி மொத்தமாக விசாரனைக்கு எடுத்துக்கொண்டது.

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சார்பாக தலைமை வழக்குரைஞர் துஷர் மேத்தா வாதாடினார்.  கடன் பெற்றவர்கள் மீது கொரோனா உருவாக்கிய நெருக்கடியை சமாளிக்கவே கடன் தள்ளி வைப்பு அறிவிக்கப்பட்டது என்றும் வட்டியை தள்ளுபடி செய்யும் நோக்கம் இல்லை என்றும் அவர் கூறினார் என்பதை மிண்ட் நாளேடு குறிப்பிடுகிறது.

கடனை திருப்பி செலுத்துவதற்குரிய விதிமுறைகளை துறை வாரியாக வல்லுநர் குழு செப்டம்பர் 6ஆம் தேதி பரிந்துரைக்கும் என்றும் பொது முடக்கம் காரணமாக பாதிப்படைந்த துறைகளுக்கு நிவாரணம் வழங்குவது பற்றியும் வல்லுநர் குழு முடிவு செய்யும் என்றும் துஷர் மேத்தா கூறினார்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையில் வங்கிகளுக்கு திரும்பச் செலுத்தப்படாத கடன்களை, அடுத்த அறிவிப்பு வரும் வரையில் வாராக் கடனாக அறிவிக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

கடன் தள்ளி வைப்பை எடுத்துக்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு கடனைத் திரும்பி செலுத்த இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும் என்று ஏற்கனவே செப்டம்பர் 1ஆம் தேதி ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் கூறியிருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்