சர்வதேச நடுவர் மன்ற தீர்ப்பில் இந்திய அரசுக்கு எதிரான வரி வழக்கில் $120 கோடி (சுமார் ரூ 10,250 கோடி) இழப்பீட்டை வென்ற கெய்ர்ன் நிறுவனம், அந்தத் தொகையை பெறுவதற்காக, வெளிநாடுகளில் உள்ள இந்திய சொத்துக்களை கைப்பற்றப் போவதாக அச்சுறுத்தியுள்ளது.
தி ஹேக் நகரில் உள்ள மூன்று நீதிபதிகளைக் கொண்ட நடுவர் மன்றம், சென்ற மாதம் 20-ம் தேதி, இந்திய அரசுக்கு எதிராகவும் கெய்ர்ன் நிறுவனத்துக்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்தது. அதன்படி, இந்திய அரசு கெய்ர்ன் நிறுவனம் மீது வரி விதித்தது, ஐக்கிய முடியரசு – இந்தியா இருதரப்பு ஒப்பந்தத்துக்கு விரோதமானது என்று முடிவு செய்தது.
வோடபோனைத் தொடர்ந்து, கெய்ர்ன் வழக்கிலும் தோல்வி – அரசுக்கு ரூ 10,250 கோடி இழப்பு
இந்தத் தீர்ப்பின்படி இந்திய அரசு, கெய்ர்ன் நிறுவனத்தின் பங்குகளை கைப்பற்றி விற்றதற்காகவும், ஈவுத் தொகை வழங்குவதை நிறுத்தி வைத்தற்காகவும், திருப்பித் தர வேண்டிய வரித்தொகையை முடக்கியதற்காகவும், $120 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். கூடுதலாக, இந்தத் தொகை மீதான வட்டியாக $22 கோடி வழங்க வேண்டும்.
இந்தப் பிரச்சினையை இந்திய அரசு தீர்த்து வைக்கா விட்டால், உலகின் பல்வேறு நாட்டு தலைநகரங்களில் உள்ள இந்தியாவுக்குச் சொந்தமான சொத்துக்களை கைப்பற்றுவதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு எழுதிய கடிதத்தில் கெய்ர்ன் கூறியுள்ளது. இந்தக் கடிதம் வெளியுறவுத் துறை அமைச்சகம், பிரதமரின் அலுவலகம், நிதி அமைச்சகம் ஆகியவற்றுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.
கெய்ர்ன் நிறுவனம் குறிப்பிடும் இந்தியச் சொத்துகளில் தூதரகங்களின் வங்கிக் கணக்குகள், தூதரகம் அல்லாத வளாகங்கள், ஏர் இந்தியா விமானங்கள், அரசுக்குச் சொந்தமான கப்பல்கள் ஆகியவை அடங்கும். ஐக்கிய முடியரசு, ஹாலந்து, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த நடவடிக்கையை எடுக்க முடியும்.
ஒரு அயர்லாந்து நிறுவனத்துடனான வழக்கு தொடர்பாக ஒரு பாகிஸ்தான் சர்வதேச விமானம் மலேசியாவில் கைப்பற்றப்பட்டது அல்லது அமெரிக்க நிறுவனமான கான்கோ ஃபிலிப்ஸ் சார்பில் வெனிசுலாவின் கப்பல் ஒன்றை கைப்பற்றும்படி அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது போன்ற நடவடிக்கையாக இது இருக்கும் என்று தி ஹிந்து தெரிவிக்கிறது.
ஆனால், தனது கடிதத்துக்கு இந்திய அரசு பதில் அளிக்கா விட்டால்தான், இந்தத் தீவிர நடவடிக்கையை தான் எடுக்கப் போவதாக கெய்ர்ன் கூறியுள்ளது.
முன்தேதியிட்ட வரி விதித்தல் வழக்கு மூலமாக கெய்ர்ன் நிறுவனத்தின் இந்திய வணிகம் கடந்த ஏழு ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என கெய்ர்ன் எனர்ஜி தலைமை நிர்வாக அலுவலர் சைமன் தாம்சன் கூறியுள்ளார்.
“இந்திய அரசு சட்ட நடைமுறைகளை மதிப்போம் என்று பல முறை கூறியுள்ளது. எங்கள் சர்வதேச பங்குதாரர்களும் இந்தியா இந்த நடுவர் மன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்க்கிறார்கள்” என்று தி ஹிந்துவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்திய வெளியுறவுத் துறை இது தொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், “இந்த விஷயம் பரிசீலனையில் உள்ளது” என்று கெய்ர்ன் நிறுவனத்திடம் இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி ஹிந்து கூறுகிறது.
டிசம்பரில் நடுவர் மன்ற தீர்ப்பு வெளியானதும், இந்தத் தீர்ப்பை ஆய்வு செய்து, பொருத்தமான மன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதையும் பரிசீலிக்கப் போவதாக இந்திய நிதி அமைச்சகம் கூறியிருந்தது.
நடுவர் மன்ற விதிகளின்படி இந்தியா தீர்ப்புக்கு எதிராக சட்டரீதியாக மேல்முறையீடு செய்தாலும், கெய்ர்ன் இந்தத் தீர்ப்பை அமல்படுத்த முடியும் என்று கூறப்படுவதாக தி ஹிந்து தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.