Aran Sei

” ரூ 12,500 கோடி பணத்தை இந்திய அரசு உடனடியாக தர வேண்டும் ” – வரி வழக்கு தொடர்பாக பிரிட்டனின் கெய்ர்ன் நிறுவனம்

Image - twitter video caputre

ந்திய அரசின் வரி வசூலிப்பு தொடர்பான வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட $120 கோடி (சுமார் ரூ 10,000 கோடி) தொகையையும், அது தொடர்பான வழக்கு செலவுகளையும், இந்தத் தொகைக்கான வட்டியையும் உடனடியாக தர வேண்டும் என்று கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்தின் முதன்மை செயல்பாட்டு அலுவலர் கூறியுள்ளார்.

இந்திய அரசுக்கு எதிராக கெய்ர்ன் எனர்ஜி தொடர்ந்த வரி விதிப்பு தொடர்பான வழக்கில் இந்திய அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் ரூ 12,500 கோடி மதிப்பிலான தொகையை இந்திய அரசு செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

வோடபோனைத் தொடர்ந்து, கெய்ர்ன் வழக்கிலும் தோல்வி – அரசுக்கு ரூ 10,250 கோடி இழப்பு

இந்த வழக்கு, 2006-7-ம் ஆண்டில் யுகேவின் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கச்சா எண்ணெய் நிறுவனமான கெய்ர்ன் நிறுவனம் தனது இந்தியத் தொழிலை மறுவடிவமைப்பு செய்த போது கிடைத்த ரூ 24,500 கோடி மூலதன ஆதாயத்தின் மீதான வரி விதிப்பு தொடர்பானது.

இந்திய அரசு கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திடமிருந்து வரி நிலுவைக்காக வசூலித்த பகுதியளவு தொகையையும் வட்டியுடன் திருப்பிக் கொடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் ட்வீட் செய்துள்ள ஒரு வீடியோவில் அந்நிறுவனத்தின் முதன்மை செயல்பாட்டு அலுவலர் சைமன் தாம்சன், “இந்திய அரசு உடனடியாக பணத்தை திருப்பித் தருவது எங்களது பங்குதாரர்களுக்கு முக்கியமானது. எங்கள் பங்குதாரர்கள் உலகளாவிய நிதி நிறுவனங்கள், அவர்கள் இந்தியாவில் ஒரு சாதகமான முதலீட்டு சூழல் நிலவுவதை விரும்புகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

இந்த ட்வீட்டில், “கெய்ர்ன் எனர்ஜி முதன்மை செயல்பாட்டு அலுவலர் சைமன் தாம்சன், அடுத்த வாரம் இந்திய நிதி அமைச்சரை சந்திக்க ஆவலாக உள்ளார்” என்றும் கெய்ர்ன் எனர்ஜி குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, இந்திய அரசு இந்த வரித்தொகையை தனக்குத் திருப்பித் தரா விட்டால், வெளிநாடுகளில் உள்ள ஏர் இந்தியா விமானங்கள், இந்திய தூதரகங்களின் வங்கிக் கணக்குகள், தூதரகங்கள் அல்லாத வளாகங்கள் ஆகியவற்றை கைப்பற்றப் போவதாக கெய்ர்ன் எச்சரித்திருந்தது.

” வெளிநாடுகளில் இந்தியச் சொத்துக்களை கைப்பற்ற நடவடிக்கை ” – கெய்ர்ன் அச்சுறுத்தல்

இது தொடர்பாக கேட்ட போது, “அடுத்த வாரம் இந்திய அரசாங்கத்தை சந்திக்க ஆவலாக உள்ளோம். ஆனால், எங்கள் சர்வதேச பங்குதாரர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு எல்லா வாய்ப்புகளையும் நாங்கள் பயன்படுத்துவோம்” என்று கெய்ர்ன் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாக தி ஹிந்து செய்தி கூறுகிறது.

இந்த நடுவர் மன்ற தீர்ப்பை பரிசீலித்து வருவதாக மத்திய அரசு திங்கள் கிழமை மாநிலங்களவையில் தெரிவித்திருப்பதாக லைவ் மின்ட் செய்தி கூறுகிறது. சைமன் தாம்சனின் வீடியோ தொடர்பாக கருத்து கேட்டு நிதி அமைச்சகத்துக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் வரவில்லை என்று அது தெரிவிக்கிறது.

நிதி அமைச்சர் சைமன் தாம்சனை சந்திப்பது குறித்தும் அரசு உறுதி செய்யவில்லை என்று தி ஹிந்து செய்தி கூறுகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்