Aran Sei

’தேசியவாத பாடம் நமக்கு; தேசத்தின் வளம் தனியாருக்கு’ – பட்ஜெட் குறித்து மம்தா பானர்ஜி

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் மக்களுக்கு விரோதமானது என்றும் காப்பீட்டுத் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்நிய முதலீட்டால், பொது மக்களுக்கு அவர்களின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்றத்தன்மையை அளிக்கும் என்றும்  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று (பிப்பிரவரி 1) மேற்கு வங்க மாநிலம் உத்தரபங்கா உட்சவத்தின் தொடக்க விழாவில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டுள்ளார். அப்போது, நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து அவர் பேசியுள்ளார்.

’பொதுத்துறை நிறுவனங்களை திவாலாக்கி, அவற்றை தனியார்மயமாக்கும் மத்திய அரசு’ – பட்ஜட் குறித்து காங்கிரஸ் விமர்சனம்

அதில், ”மத்திய அரசு சமர்பித்துள்ள இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மக்களை ஏமாற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. பாஜகவினர் தேசியவாதம் குறித்து மற்றவர்களுக்குச் பாடம் நடத்துகிறார்கள். ஆனால் நடைமுறையில், அவர்கள்தான் நாட்டின் வளங்களைத் தனியாருக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்கள், காப்பீடு, ரயில்வே மற்றும் துறைமுகங்கள் என்று அனைத்தையும் விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.” என்று மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது ஒரு விவசாயிகள் விரோத, மக்கள் விரோத மற்றும் நாட்டுக்கும் எதிரான பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்றும் மத்திய அரசு புதிய விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை நான் மீண்டும் இங்கு முன்வைக்கிறேன்  என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பட்ஜெட் 2021: இந்தியாவின் சொத்துக்கள் முதலாளிகளிடம் விற்கப்பட இருக்கிறது – ராகுல் காந்தி

பல கோடி ரூபாய்க்காக அசையாத சொத்துகளையே தள்ளுபடி செய்ய முடிகிறதென்றால் விவசாயிகளின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய ஏன் தயங்குகிறது என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயணத்திற்குப் பணம் இல்லை என்று கைவிரித்தது மத்திய அரசு. ஆனால், தங்கள் கட்சியில் சேரவரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களையும் மற்ற கட்சி தலைவர்களைப் புதுடெல்லிக்கு வரவழைப்பதற்கு விமானம் அனுப்ப மட்டும் பணம் எங்கிருந்து வந்தது? கொரோனா தொற்றுக் காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்துக்கு நாங்கள் பணம் செலுத்தினோம். ஆனால், மத்திய அரசு அவர்களின் சிரமங்களைக் கண்டுகொள்ளவில்லை.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

’எல்ஐசி உள்ளிட்ட அரசு நிதி நிறுவனங்களின் பங்குகளை ரூ.1.75 லட்சம் கோடிக்கு விற்க இலக்கு’ – நிர்மலா சீதாராமன்

“காப்பீட்டுத் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்நிய முதலீட்டால், பொது மக்களுக்கு அவர்களின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்றத்தன்மையை அளிக்கும். மக்களின் வங்கி கணக்கில் ரூ. 15 லட்சம் செலுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் உண்மையில் அவர்கள் உங்களிடமிருந்து ரூ. 15 லட்சத்தை எடுத்துக்கொண்டு, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை விற்றுவிடுவார்கள்.” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும், “மத்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது வழியாக, அதன் ஊழியர்கள் தங்கள் வேலை பாதுகாப்பை இழக்க வழிவகுக்கும். மாநில நிதியமைச்சர் அமித் மித்ரா என்னிடம், ‘இந்த பட்ஜெட் மாறுவேடமிட்டு, மக்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

Source : PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்