Aran Sei

இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் – சில முக்கியமான சொற்கள்

Image Credit : indianexpress.com

ன்று காலை 11 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-22 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்யவுள்ளார்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான சில சொற்கள் கீழே தரப்பட்டுள்ளன (தொகுப்பு – நன்றி : jagranjosh.com)

மத்திய பட்ஜெட்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 112 வது பிரிவின் கீழ், ஒவ்வொரு நிதியாண்டிற்கும் நிதி வருவாய்களும், செலவினங்களும் தொடர்பான மதிப்பீட்டை மத்திய அரசு நாடாளுமன்றத்தின் முன் வைக்க வேண்டும்.

இந்த ஆவணம் ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரையிலான நிதியாண்டில் அரசின் வருவாய்கள், செலவினங்கள் ஆகியவற்றின் மதிப்பீடாகும்

வருவாய் பட்ஜெட்

வருவாய் பட்ஜெட்டில் அரசின் வருவாய் விபரங்களும் செலவுகளும் உள்ளன. வருவாய், வரி வருவாயாகவும் வரி அல்லாத வருவாயாகவும் பிரிக்கப்படுகின்றது.

வரி வருவாய் என்பது வருமான வரி, கார்ப்பரேட் வரி, கலால், சுங்க, சேவை மற்றும் அரசு விதிக்கும் பிற வரிகளைக் கொண்டது.

வரி அல்லாத வருவாய் ஆதாரங்களில் கடன்களுக்கான வட்டி, முதலீடுகளுக்கான ஈவுத்தொகை போன்றவை அடங்கும்.

வருவாய் செலவினம் என்பது அரசின் பல்வேறு துறைகளின் அன்றாட செயல்பாட்டுக்கும், அரசு வழங்கும் சேவைகளுக்கும் செய்யப்படும் செலவு ஆகும்.

அரசின் கடன்களுக்கான வட்டி, கடன்கள், மானியங்கள், மாநில அரசுகளுக்கும் பிறருக்கும் வழங்கப்படும் மானியங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

மூலதன பட்ஜெட்

மூலதன பட்ஜெட்டில் மூலதன வரவுகளும் செலவினங்களும் உள்ளன.

மூலதன வரவுகளில் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட அரசு கடன்கள், ரிசர்வ் வங்கியிடமிருந்து அரசு வாங்கும் கடன்கள், அரசு கடன் பத்திரங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் திரட்டும் நிதி, வெளிநாட்டு அரசுகளிடமிருந்தும் அமைப்புகளிடமிருந்தும் பெறப்படும் கடன்கள், சிறு சேமிப்பு பத்திரங்கள், அரசின் வருங்கால வைப்பு நிதி, சிறப்பு வைப்புத்தொகை ஆகியவை அடங்கும்

மூலதன செலவினங்களில் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்துவதற்கான செலவுகளும், நிலம், கட்டிடங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் போன்ற சொத்துக்களை கையகப்படுத்துவதற்கான செலவினங்களும் அடங்கும்.

பங்குகளில் முதலீடுகளும், மாநில அரசுகள், அரசு நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள் மற்றும் பிறருக்கு மத்திய அரசு வழங்கும் கடன்களும் முன்தொகைகளும் இதில் அடங்கும்.

நிதி மசோதா

புதிய வரிகளை விதித்தல், தற்போதைய வரி கட்டமைப்பில் மாற்றங்கள் அல்லது தற்போதைய வரி கட்டமைப்பை தொடர்வதற்கான அரசு முன்மொழிவுகள் இந்த மசோதாவின் மூலம் பாராளுமன்றத்தின் முன் வைக்கப்படுகின்றன.

வருவாய் பற்றாக்குறை

வருவாய் வரவுகள் வருவாய் செலவினங்களை விட குறைவாக இருந்தால், வருவாய் பற்றாக்குறை உள்ளது.

ஒட்டு மொத்த பட்ஜெட் பற்றாக்குறை

அரசின் தற்போதைய செலவினங்களை விட வரவுகளின் பற்றாக்குறையை இது காட்டுகிறது. மூலதனச் செலவுகளையும் மூலதன வரவுகளையும் சேர்த்து, ஒரு ஆண்டில் வரவுகளுக்கும் செலவுகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடு ஒட்டுமொத்த பட்ஜெட் பற்றாக்குறை எனப்படுகிறது.

இது 91 நாள் அரசுக் கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ஈடுகட்டப்படுகிறது. இந்தக் கடன் பத்திரங்களை பெரும்பாலும் ரிசர்வ் வங்கி வாங்கிக் கொள்கிறது.

வருவாய் உபரி என்பது வருவாய் செலவினங்களை விட வருவாய் வரவுகள் அதிகமாக இருப்பது ஆகும்.

நிதி பற்றாக்குறை

இது அரசின் மொத்த செலவினங்களுக்கும் அதன் வருவாய் வரவுகள் மற்றும் கடன் அல்லாத மூலதன வரவுகளுக்கும் இடையிலான வேறுபாடு ஆகும்.

அரசு தன் செலவினங்களை முழுமையாக எதிர்கொள்ள தேவையான மொத்த கடன் தொகையை இது குறிக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கூடுதல் கடன் வாங்குதல், அரசுப் பத்திரங்களை வெளியிடுதல் போன்றவற்றின் மூலம் இந்த வேறுபாடு ஈடு கட்டப்படுகிறது.

முதன்மை பற்றாக்குறை

முதன்மை பற்றாக்குறை என்பது நிதி பற்றாக்குறையிலிருந்து வட்டி செலவை கழித்துக் கிடைப்பது ஆகும். அரசின் கடன்களில் எவ்வளவு வட்டி அல்லாத பிற செலவுகளுக்கு பயன்படுகிறது என்பதை அது தெரிவிக்கிறது.

நேரடி மற்றும் மறைமுக வரி

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் வருமானங்களுக்கு நேரடி வரி விதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, வருமான வரி, கார்ப்பரேட் வரி போன்றவை

நுகர்வோர் பொருட்களையும் சேவைகளையும் வாங்கும்போது விதிக்கப்படும் வரி மறைமுக வரி. இதில் கலால் வரி, சுங்க வரி, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), மதிப்புக் கூடுதல் வரி ஆகியவை அடங்கும்.

மத்திய திட்டச் செலவு

இது பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கும் அமைச்சகங்களுக்கும் அரசு நிதி ஒதுக்குவதை குறிக்கிறது.

பொது கணக்கு

வருங்கால வைப்பு நிதி, சிறு சேமிப்பு வசூல் போன்ற நிதிகளைப் பொறுத்தவரை அரசு ஒரு வங்கியாளராக செயல்படுகிறது. இதன் மூலம் அரசு பெறும் நிதிகள் பொதுக் கணக்கில் வைக்கப்படுகின்றன.

இந்த நிதி அரசுக்கு சொந்தமானது அல்ல, அவற்றை டெபாசிட் செய்த நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அரசு இதனை திருப்பிச் செலுத்த வேண்டும்.

அன்னியச் செலாவணி நிலுவை

அந்நிய செலாவணி சந்தையில் ஒரு நாட்டின் நாணயத்திற்கான தேவைக்கும் வழங்கலுக்கும் உள்ள வித்தியாசமே அன்னியச் செலாவணி நிலுவை ஆகும்.

மூலதன வரவுகள்

சந்தையில் இருந்து மத்திய அரசு திரட்டும் கடன்கள், ரிசர்வ் வங்கியிடமிருந்தும் பிறரிடமிருந்தும் அரசு கடன் வாங்குதல், அரசுக் கடன் பத்திர விற்பனை, வெளிநாட்டு அரசுகளிடமிருந்து பெறப்பட்ட கடன்கள் மூலதன வரவுகளில் அடங்கும்.

ஒருங்கிணைந்த நிதி

இதன் கீழ், அரசு அதன் அனைத்து நிதிகளையும் ஒன்றாக இணைக்கிறது.

இதில் அனைத்து அரசு வருவாய்கள், திரட்டப்பட்ட கடன்கள், வழங்கப்பட்ட கடன்களை மீட்டெடுப்பது ஆகியவை அடங்கும்.

அரசின் அனைத்து செலவினங்களும் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து செய்யப்படுகின்றன, பாராளுமன்றத்தின் அங்கீகாரமின்றி எந்தவொரு தொகையையும் ஒருங்கிணைந்த நிதியில் இருந்து அரசு செலவழிக்க முடியாது.

அவசரகால நிதி

இது பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக அரசு காத்திருக்க முடியாத அவசரநிலைகளை சந்திக்க பயன்படுத்தப்படும் நிதி. பின்னர், அரசு செலவினத்துக்கான பாராளுமன்ற ஒப்புதலைப் பெறுகிறது. அவசரகால நிதியிலிருந்து செலவிடப்பட்ட தொகை பின்னர் அந்நிதிக்குத் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.

பணவியல் கொள்கை

பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தின் அளவைக் கட்டுப்படுத்த, வட்டி விகிதங்களை மாற்றுவது போன்ற, ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கைகள்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்