Aran Sei

‘உலகை அச்சுறுத்தும் கிரிப்டோகரன்சிகளுக்கு தடை வேண்டும்’- ஒன்றிய அரசுக்கு பாஜக எம்.பி கோரிக்கை

கிரிப்டோகரன்சிகள் டார்க் நெட்(Dark Net) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை என்றும், அவை போதைப்பொருள், தீவிரவாதத்திற்கு பயன்படுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ள பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே, ஒன்றிய அரசு கிரிப்டோகரன்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

நேற்று(டிசம்பர் 6), மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின் போது இப்பிரச்சினையை எழுப்பியுள்ள அவர், கிரிப்டோகரன்சிகள் தொடர்பாக நம் நாட்டில் நிலவும் சூழ்நிலையானது, ஹாலாந்து நாட்டில் 1600களில் நடந்த துலிப் மேனியாவோடு ஒப்பிட்டுள்ளார்.

1600களில் ஹாலாந்து நாட்டில் துலிப் என்ற மலர் வகை அதிகம் பிரசித்திப்பெற தொடங்கியது. துலிப் மலர் வணிகம் அதிக லாபம் கிடைக்கும் தொழிலாக உருவெடுத்ததால், வணிகர்கள், விவசாயிகள் அவற்றில் நிறைய முதலீடு செய்தனர். பின் சில ஆண்டுகளிலேயே துலிப் மலர் மீதான மோகம் கரைந்துப்போகவே, அதன் விலை வீழ்ச்சியடைந்து, அவ்வணிகம் முற்றாக மறைந்துபோனது. அந்நாட்டின் பொருளாதாரத்தையே புரட்டிப்போட்டு இக்காலக்கட்டம் துலிப் மேனியா என்று  அழைக்கப்படுகிறது.

“2013-14 ஆம் ஆண்டு முதல், எங்கள் உறுப்பினர் ஷிவ்குமார் உதாசி, கிரிப்டோகரன்சிகளை நிறுத்த வேண்டும், இது டார்க் நெட் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது, இது போதைப்பொருள், பயங்கரவாதம், ஆயுதங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று எச்சரித்து வருகிறார். உலகம் முழுவதுமே இந்த கிரிப்டோகரன்சியால் அச்சத்தில் உள்ளது. இதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தொடர்ந்து கூறி வருகிறது” என்று நிஷிகாந்த் துபே நினைவூட்டியுள்ளார்.

பிளாக்செயின்(blockchain) தொழில்நுட்பத்தை யாரும் சொந்தமாக வைத்திருக்கவில்லை என்றும் உரிமையாளர் இல்லையென்னும் போது, அதன் செயற்பாடுகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிரிப்டோகரன்சி தொடர்பான புதிய மசோதாவை ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்