2021-22ம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையின் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள வங்கித் துறை தனியார்மயத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த திங்கள் கிழமை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய நிதி நிலை அறிக்கை உரையில்
- ஐடிபிஐ வங்கி தவிர இன்னும் 2 பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்பது
- வாராக் கடன்களை கையாள்வதற்கு தனியான ‘வாராக்கடன் வங்கி’ ஒன்றை ஆரம்பிப்பது
- இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (எல்ஐசி) பங்குகளை விற்பது
- ஒரு பொது காப்பீட்டு நிறுவனத்தை தனியாருக்கு விற்பது
- காப்பீட்டு துறையில் 74% வரை அன்னிய முதலீட்டை அனுமதிப்பது
ஆகிய நடவடிக்கைகளை அறிவித்திருந்தார்.
இந்த வங்கித் துறை தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு மன்றம் அழைப்பு விடுத்திருக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டங்கள் உணவு இடைவேளையின் போது அல்லது வேலை நேரம் முடிந்த பிறகு நடைபெறவுள்ளன என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி எச் வெங்கடாசலம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு மன்றம் பிப்ரவரி 9-ம் தேதி கூடி அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க உள்ளதாகவும் சி எச் வெங்கடாசலத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
எல்ஐசி, பொது காப்பீட்டு நிறுவனங்களின் தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கத்தின் அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.