Aran Sei

தனிநபர் வருமானம் – இந்தியாவை முந்துகிறது வங்கதேசம் : ஐஎம்எப்

Credit : www.cnbctv18.com

ந்தியாவின் தனிநபர் (ஒரு நபருக்கான) உள்நாட்டு உற்பத்தி வங்கதேசத்தை விட குறையவிருப்பதாக ஐஎம்எப் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளதாக ஐஎம்எப்  வெளியிட்டுள்ள அறிவிக்கை தெரிவிக்கிறது.

இந்த ஆண்டில் வங்கதேசத்தின் ஒரு நபருக்கான உள்நாட்டு உற்பத்தி 4% அதிகரித்து 2020 க்குள் அமெரிக்க டாலர் மதிப்பில் $1,888 ஐ எட்டவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது என்று ஐஎம்எப்-ன் உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் ஒருநபருக்கான உள்நாட்டு உற்பத்தி 10.5% குறைந்து $1,897 ஐ தொடவிருப்பதாகவும் இது சென்ற நான்கு ஆண்டுகளில் மிகக்குறைவு என்றும் ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஒரு நபருக்கான உள்நாட்டு உற்பத்தி 2021-ல் 8.2% அதிகரித்து $2,030 ஐ தொடவிருப்பதாகவும் ஆனால் வங்கதேசத்தில் அது 5.4% அதிகரித்து $1,990 ஐ தொடவிருப்பதாகவும் ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி, “நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 2021 மார்ச் மாதம் முடியும் காலாண்டில் 9.5% வளர்ச்சியை எட்டிவிடும்” என்று தெரிவித்துள்ளது. ஆனால், ஒரு நபருக்கான உள்நாட்டு உற்பத்தி குறித்து இந்திய ரிசர்வ் வங்கி எதுவும் குறிப்பிடவில்லை.

இந்தியாவின் ஒரு நபருக்கான உள்நாட்டு உற்பத்தி ஐந்தாண்டுகளுக்கு முன்னர் வங்கதேசத்தை விட 40% அதிகமாக இருந்தது. கடைசி ஐந்தாண்டுகளில் வங்கதேசத்தின் தனிநபர் உள்நாட்டு உற்பத்தி ஒவ்வோர் ஆண்டும் 9.1% என்ற சீரான வளர்ச்சி அடைந்து வருகிறது. அதே ஐந்தாண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி ஒவ்வோர் ஆண்டும் 3.2% ஐ மட்டுமே எட்டியுள்ளது.

அமெரிக்க-சீனா வர்த்தகப் போர் மற்றும் இதர உலகளாவிய பிரச்சனைகளுக்கு மத்தியில் வங்கதேசம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் படி தனது சூழலை மாற்றிக்கொண்டதால் அதன் ஒருநபருக்கான உள்நாட்டு உற்பத்தி இந்த வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் வங்கதேசத்தின் சீரான வளர்ச்சி ஒருநபருக்கான உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளவிருப்பதாக ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி குறைந்துகொண்டு இருந்த போது, வங்கதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8% அதிகரித்துள்ளது. 2030-ல் 26 வது மிகப்பெரிய பொருளாதார நாடாக வங்கதேசம் முன்னேறும் என்று எச்எஸ்பிசி கணித்துள்ளது

“வாங்குதிறன் ஆற்றல் சமநிலை” ஐ வைத்துப் பார்த்தால் 2020ல் இந்தியாவின் ஒரு நபருக்கான உள்நாட்டு உற்பத்தி $6,284 ஆகவும் வங்கதேசத்தின் ஒரு நபருக்கான உள்நாட்டு உற்பத்தி $5,139 ஆகவும் இருக்கும் என்று ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தின் மிகபெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா உள்ளது. ஆண்டுக்கு $1500 கோடி (சுமார் ரூ 1.12 லட்சம் கோடி) வர்த்தகம் இருநாடுகளுக்கும் இடையே நடைபெறுகிறது என்றும் இந்தியாவுடன் வங்கதேசத்தின் வர்த்தகம் அதில் மூன்றில் ஒரு பங்கு மட்டும்தான் என்றும் தி வயர் வெளியிட்டுள்ளது.

வங்கதேசம், 2019-ம் ஆண்டு $4,570 கோடி (சுமார் ரூ 3.42 லட்சம் கோடி) மதிப்புடைய சரக்குகளை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்துள்ளது. 2015 உடன் ஒப்பிடும் போது இது 44% அதிகரிப்பாகும். 16.66 கோடி மக்கள்தொகைக்கு $4,570 கோடி ஏற்றுமதி கணக்கீட்டில் இந்த வளர்ச்சியை எட்டியுள்ளது.

இந்தியாவின் சேமிப்பு வீதம் 15 வருட வீழ்ச்சியை எட்டியுள்ளது. 2019-ல் சேமிப்பு வீதம் ஜிடிபியில் 30.1% ஆக இருந்தது. இது 2007-ல் 36% அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக-வின் ஆறு வருட மத தேசியவாதத்தின் நிலையான சாதனையால், வங்கதேசம் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது என்று ராகுல் காந்தி ட்விட்டரில் குற்றம்சாட்டியுள்ளார்.

2019-ல் இந்தியா வங்கதேசத்தை விட 8 மடங்கு அதிக மக்கள்தொகையைக் கொண்டிருந்த போதும் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 11 மடங்கு அதிகமாக இருந்ததாக ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்குப் பாஜக தரப்பில் பதில் அளிக்கப்பட்டிருந்தது.

1930-க்குப் பின்னர் தற்போது உலகம் மீண்டும் இத்தகைய மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாகப் பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சனிடம் அரண்செய் பேசிய போது “கொரோனாவால் இந்தியாவுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி வங்கதேசத்தை விட அதிகம். வங்கதேசத்தின் பொருளாதாரம் ஏற்றுமதி பொருளாதாரம். சீனாவுக்கு உலக அளவில் ஏற்பட்டுள்ள வர்த்தகப் பிரச்சனைகளால் வங்கதேசம் ஏற்றுமதித் துறையில் பயனடைந்துள்ளது” என்று கருத்து தெரிவித்தார்.

“வங்கதேசம் கடந்த சில ஆண்டுகளாக ஏற்றுமதித் துறையில் சீரான வளர்ச்சியை எட்டியுள்ளது. ஆனால், இந்தியா ஏற்றுமதியில் தொடர்ச்சியாகப் பின்னடைந்துள்ளது. குறிப்பாக ஆடை உற்பத்திக்குப் பெயர்போன திருப்பூர் நிறுவனங்களால் கூட வங்கதேசத்துடன் போட்டியிட முடியாத அளவுக்கு அந்நாடு ஏற்றுமதித் துறையில் கவனம் செலுத்தி வருவது இதற்குக் காரணம்” என்றும் அவர் கூறினார்.

“இந்திய அரசு ஏற்றுமதித் துறையில் கவனம் செலுத்தவில்லை என்றால் வங்கதேசத்தால் இந்தியா பின்தள்ளப்படும்” என்றும் ஜெயரஞ்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்