Aran Sei

ரூ.20 லட்சம் கோடி – வெறும் வாய் உறுதி : வெங்கடேஷ் ஆத்ரேயா

Image Credits: Reuters

வியாழக்கிழமை, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்), பிரதமர் நரேந்திர மோடியின் “ஆத்ம நிர்பர் பாரத்” (சுயசசார்பு இந்தியா) திட்டத்தை ஒரு முக்கியமான முயற்சி என்று தெரிவித்துள்ளது.

“கொரோனா வைரஸ் தாக்கத்துக்குப் பின்னர் “சுய சார்பு இந்தியா” முன்முயற்சியின் கீழ் அறிவிக்கப்பட்ட தொகுப்பு நிதி, இந்தியப் பொருளாதாரத்தை ஆதரித்துக் குறிப்பிடத்தக்கத் தீங்கு விளைவிக்கும் அபாயங்களைத் தணித்தது, எனவே இந்த முயற்சி முக்கியமானது என்று நாங்கள் நினைக்கிறோம்,” எனச் சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறை இயக்குநர், ஜெர்ரி ரைஸ், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வாஷிங்டனில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

“பிரதமர் கூறியது போல, உலகப் பொருளாதாரத்தில் இந்தியா மிக முக்கியமான பங்கை வகிக்க, பொருளாதாரத்தின் செயல்திறனையும் போட்டித்தன்மையையும் மேம்படுத்தும் கொள்கைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானது,” என்று பிரதமர் மோடியின் திட்டத்தைக் குறித்த கேள்விக்குப் பதிலளித்தார்.

“இந்தியாவில் கூறப்பட்ட ‘உலகத்துக்காக உருவாக்குங்கள்’ என்ற இலக்கை அடைய, வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட உலகளாவிய மதிப்பு சங்கிலியில் இந்தியாவை மேலும் ஒருங்கிணைக்க உதவும் கொள்கைகளில் கவனம் செலுத்துவதுக்கு முன்னுரிமையளிக்க வேண்டும்” என்றும் ரைஸ் கூறியுள்ளார்.

மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அவர், நிதி ஆயோக் மற்றும் நிதி அமைச்சகத்துடனான சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டு ஆய்வின்படி, “சுகாதாரத் துறையில் நிலையான வளர்ச்சியை அடைய அத்துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போதைய 3.7% செலவினங்களைப் படிப்படியாக அதிகரிக்க வேண்டும்”, என்று கூறியுள்ளார்.

“பொதுவாக, சுகாதாரத் துறைக்கு அப்பால், அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான இடைக்கால வளர்ச்சியை அடைய விரிவான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவை” என்றும் அவர் கூறினார்.

“இந்த சீர்திருத்தங்களைப் பற்றி நாங்கள் முன்னரே பேசி இருக்கிறோம் – உள்கட்டமைப்பு, நில சீர்திருத்தங்கள், தயாரிப்புச் சந்தை, தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்கள், பெண் தொழிலாளர் பங்களிப்பை அதிகரித்தல், நிதி அணுகல் மற்றும் மேம்பட்ட வேலைகளைக் குறித்து பேசி உள்ளோம்,” என்றும் ஜெர்ரி ரைஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அரண் செய்யுடன் பேசிய பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா “இது மிகவும் அபத்தமான கருத்து. இதை நான் ஒப்புக்கொள்ளவே இல்லை. இந்திய அரசு அறிவித்த தொகுப்பு நிதி திட்டம் வங்கிக் கடன்களுக்கு ஆதரவாக இருந்தததே தவிர, அதில் அரசின் செலவு என்பது மிக மிகக் குறைவு,” என்று கூறினார்.

“எந்த அழுத்தத்தின் பெயரில் ஐஎம்எஃப் இப்படிக் கூறுகிறது என்று தெரியவில்லை. கொரோனா பொருளாதார முடக்க நிவாரணத்துக்காக இந்திய அரசு அறிவித்த தொகுத்து நிதியில் அரசின் செலவு ஜிடிபியில் 1% கூட கிடையாது. ரூ 20 லட்ச கோடி தொகை எந்த வகையிலும் உதவாது. இவை அனைத்தும் வாயுறுதி மட்டும் தான். இச்சமயத்தில் யாரும் கடன் பெறவோ வழங்கவோ மாட்டார்கள்,” என்றும் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்