Aran Sei

போலி என்ஓசியில் 91 பெட்ரோல் நிலையங்கள் : நீதிபதிகள் அதிர்ச்சி

Image Credits: Deccan Herald

போலி இசைவு சான்றிதழின் (என்ஓசி) அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் 91 பெட்ரோல், டீசல் மற்றும் ஆட்டோ எரிவாயு சில்லறை விற்பனை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. நேற்று இதனைக் காவல்துறை இயக்குநர் ஜெனரலிடமிருந்து (டிஜிபி) கேட்டறிந்த மெட்ராஸ் உயர்நீதி மன்றம் இது தொடர்பாக அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இச்சான்றிதழ்கள் பொதுவாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை ஆணையர்களால் வழங்கப்படுகின்றன.

சென்னை மாநகராட்சி ஆணையரின் முத்திரையுடன் போலி என்ஓசிகளை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, தடுப்புக் காவலில் இருக்கும் கே.எல்.சிவகுமார், சி.ஜெயபிரகாஷ் ஆகியோர் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ஆட்கொணர்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் பி.வேல்முருகன் ஆகியோர் அது தொடர்பான தகவல்களைக் கோரியிருந்தனர்.

இந்தக் குற்றங்கள் சென்னைக்குள் மட்டும் நடந்திருக்காது என்று சந்தேகித்த நீதிபதிகள், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பதிவுகளை சரிபார்த்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டனர். அதன்படி, கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆர்.பிரதாப்குமார் ஒரு பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இவ்விசாரணையில் 91 போலி என்ஓக்கசிள் கண்டுபிடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

பெட்ரோலியம் மற்றும் பாதுகாப்பு வெடிமருந்து அமைப்பிடமிருந்து (பிஇஎஸ்ஓ) கடை உரிமம் பெற்று, சென்னை நகர எல்லைக்குள் ஒரு சில்லறை விற்பனை நிலையம் நிறுவப்பட வேண்டுமானால் காவல்துறை ஆணையரிடமிருந்து பெற்ற என்ஓசியை சமர்ப்பிக்க வேண்டும். மற்ற மாவட்டங்களில் நிறுவப்படுவதற்கு ஆட்சியரிடமிருந்து பெற்ற என்ஓசியை சமர்ப்பிக்க வேண்டும்.

அத்தகைய என்ஓசிகளைப் பெறுவதற்கான பொறுப்பு தனிப்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்தது,  ஒரு பெட்ரோலிய நிறுவனத்தின் ஆலோசகராக இருந்த சிவகுமார் என்பவர் அவர்களிடமிருந்து பெரும் தொகையை பெற்றுக் கொண்டு போலி என்ஓசிகளை வழங்கியுள்ளார்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், துணை தலைமை வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயனை இந்த விவகாரத்தை ஆராயுமாறு உத்தரவிட்டனர்.

நீதிபதிகள், டிஜிபியின் அறிக்கையின் நகலை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் நயாரா எனர்ஜி லிமிடெட் (முன்னர் எஸ்ஸார் ஆயில்) ஆகியவற்றின் வழக்கறிஞர் அப்துல் சலீமுக்கு வழங்குமாறு துணை அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

பட்டியலில் உள்ள 91 விற்பனை நிலையங்களில் ஏதேனும் இந்த மூன்று நிறுவனங்களின் முகவர்களால் நிறுவப்பட்டிருக்கிறதா என்பதை அவர் கண்டுபிடித்துத் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பார் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

போலி என்ஓசிக்கள் குறித்து அறிக்கை அளிக்கக் கோரி நீதிபதிகள் பெட்ரோலியம் மற்றும் பாதுகாப்பு வெடிமருந்து அமைப்புக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்