Aran Sei

பொது முடக்கத்தில் 60 லட்சம் உயர் ஊதிய வேலைகள் இழப்பு

credit:business-standard.com

ந்த ஆண்டு மே மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதத்துக்குள் 60 லட்சம் மூளை உழைப்பாளர்கள் அதாவது மருத்துவர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இதர துறை சார்ந்த வல்லுநர்கள் வேலை இழந்திருப்பதாக இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) தெரிவித்துள்ளது.

மூளை உழைப்பு வேலைகள் 2016-ம் ஆண்டிலிருந்து அதிகரித்து வந்துள்ளன. 2016-ம் ஆண்டு ஜனவரி-ஏப்ரல் மாதத்துக்கு இடையில் 1 கோடியே 25 லட்சம் மூளை உழைப்பு வேலைகள் இருந்தன; அது 2019-ம் ஆண்டு மே-ஆகஸ்ட் மாதத்துக்கு இடையில் 1 கோடியே 88 லட்சமாக அதிகரித்தது; 2019-ம் ஆண்டின் செப்டம்பர்-டிசம்பர் மாதத்துக்கு இடையில் 1 கோடியே 87 லட்சமாக இருந்தது;  2020-ம் ஆண்டின் ஜனவரி-ஏப்ரல் மாதத்துக்கு இடையில் 1 கோடியே 81 லட்சமாக வீழ்ச்சியடைந்தது.

“2020-ம் ஆண்டில் மே-ஆகஸ்ட் மாதத்துக்கு இடையில் தொழிலில் நிபுணத்துவம் வாய்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை 1 கோடியே 22 லட்சம் ஆக குறைந்துள்ளது. 2016-க்குப் பிறகு மூளை உழைப்பு வேலை வாய்ப்புகளின் மிகக் குறைந்த எண்ணிக்கை இது” என்று பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைமை செயலாளர் மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளார்.

”கடந்த நான்கு ஆண்டுகளாக, மூளை உழைப்பு வேலை வாய்ப்புகளில் ஏற்பட்ட அதிகரிப்புகள் அனைத்துமே பொது முடக்க காலத்தில் இல்லாமல் போனது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் பொது முடக்க காலத்தில் (மே-ஆகஸ்ட்) சுற்றாய்வை நடத்தியது. இது மையத்தின் 20-வது சுற்றாய்வாகும். இந்த சுற்றாய்வில் மிக அதிகமான வேலைவாய்ப்புகள் இழப்பு நடந்த ஏப்ரல் மாதம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று மகேஷ் வியாஸ் கூறியுள்ளார். 19-வது சுற்றாய்வில் ஏப்ரல் மாதம் சேர்க்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

“மாதாந்திர சம்பளம் பெறும் தொழிலாளர்களில் மூளை உழைப்பாளர்கள் மிகப்பெரிய அளவில் வேலை இழந்துள்ளனர். குறிப்பாக பொறியளாளர்கள், மென்பொருள் பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், இதர துறை சார்ந்த வல்லுநர்கள் வேலை இழந்துள்ளனர். இவர்கள் தனியார் துறையில் அல்லது அரசு  துறையில் பணிபுரிந்தவர்கள்”

பி.பி.ஓ போன்ற கடைநிலை மூளை உழைப்பு வேலைகள் மீது பொது முடக்கம் தாக்கம் செலுத்தவில்லை என்று சுற்றாய்வறிக்கை கூறுகிறது. அவ்வேலைகளை செய்தவர்கள் தங்களது பணிகளை வீட்டிலிருந்தே செய்யக் கூடிய சாத்தியம் இருந்ததே இதற்கான காரணமாக இருக்கலாம்.

“கடைநிலை மூளை உழைப்பு வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு 2016-க்குப் பிறகு நின்று விட்டது. சொல்லப்போனால் 2018-ம் ஆண்டில் 1 கோடியே 50 லட்சமாக இருந்த வேலைவாய்ப்புகள் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து 2020-ம் ஆண்டில் 1 கோடியே 20 லட்சமாக குறைந்துள்ளது”.

“தொழில்துறையிலும் பொது முடக்கம் காரணமாக 50 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஆலைத் தொழிலாளர்கள் வேலை இழப்பு பெரும்பாலும் சிறு, நடுத்தர நிறுவனங்களில் நடந்துள்ளது. சமீப காலங்களில் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் மோசமான நிலையை இது காட்டுகிறது” என்று மகேஷ் வியாஸ் கூறியுள்ளார்.

“மூளை உழைப்பு பணியாளர்கள் வேலைவாய்ப்புகளை இழந்திருப்பது வருத்தமளிக்க கூடிய போக்காக இருக்கிறது. பொருளாதாரத்தை மீட்க அரசு தலையீடு செய்ய வேண்டும்” என்பதை இந்தப் போக்கு கோட்டிட்டு காண்பிக்கிறது என்று தி எக்கானமிக்ஸ் டைம்ஸ் நாளிதழின் தலையங்கம் குறிப்பிடுகிறது.

“நிபுணத்துவம் பெற்ற ஊழியர்கள் சமூகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த அங்கத்தினராக உள்ளனர். இவர்கள்தான் வெற்றி மற்றும் சாதனையின் குறியீடாக இருக்கின்றனர். சமூகத்தில் குறைவான வாய்ப்புகளை பெற்றவர்களுக்கான உந்து சக்தியாக திகழ்கின்றனர். இவர்களின் இந்த பாத்திரமானது, பொருளாதாரத்தில் நுகர்வு வேண்டலை அதிகப்படுத்துதல், வரி செலுத்துதல் மற்றும் சேமிப்புகளை முதலீடு செய்தல் போன்ற அவர்களுடைய இதர பணிகளை விட முக்கியமானது” என்றும் தி எக்கானமிக்ஸ் டைம்ஸ் கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்