ஊழியர்கள் சேம வைப்பு நிதி (பிஎஃப்)யில் 1.23 லட்சம் பணக்காரர்கள் ரூ 62,500 கோடி போட்டு வைத்திருக்கிறார்கள். ஒரு கணக்கில் ரூ 103 கோடி ரூபாய் உள்ளது என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது. இது 2018-19ம் ஆண்டுக்கான விபரம்
20 தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்யும் நிறுவனங்களில், ரூ 15,000-க்கு மேல் மாதச் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு பிஎஃப் கட்டாயமாக உள்ளது. ஊழியர்களின் பங்களிப்பாக சம்பளத்தில் 12% பிடிக்கப்பட்டு செலுத்தப்படுகிறது, நிறுவனம் கூடுதலாக 12% செலுத்த வேண்டும்.
சட்டரீதியான இந்த கட்டாய பிடித்தத்துக்கு மேல் தனிப்பட்ட ஊழியர்கள், தாமே முன் வந்து கூடுதல் தொகையை பிஎஃப்-ல் சேமிப்பதற்கு அரசு அனுமதிக்கிறது.
இவ்வாறு பிஎஃப் கணக்கில் சேமிக்கப்படும் பணத்துக்கு உத்தரவாதமான வட்டி வீதத்தை, பிஎஃப் நிதியம் அறிவிப்பதோடு, இதன் மூலம் பெறப்படும் வரிப் பணத்துக்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று விலக்கும் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் மாதச் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு உத்தரவாதமான வருமானம் அளிக்கும் சேமிப்புத் திட்டத்தை அரசு வழங்கி வருகிறது.
தற்போது பிஎஃப் நிதியத்தில் சேமிக்கும் பணத்துக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. இது வங்கிகளில் கிடைக்கும் வட்டி வீதத்தை விட அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வசதியைப் பயன்படுத்தி சிலர், மாதம் ரூ 1 கோடி வரை பிஎஃப் கணக்கில் சேமிக்கின்றனர் என்று திங்கள் கிழமை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
“அத்தகைய நபருக்கு, இந்த சேமிப்புக்காக வரிச் சலுகையும், உத்தரவாதமாக வட்டி வருமானமும் கிடைப்பது பொருத்தமற்றது” என்று அவர் கூறியிருந்தார்.
மொத்தம் உள்ள சுமார் 4.5 கோடி பிஎஃப் கணக்குகளில், 0.27% கணக்குகளில் சராசரியாக தலா ரூ 5.92 கோடி சேமிக்கப்பட்டுள்ளது, அவை ஒவ்வொன்றும் ஆண்டுக்கு தலா ரூ 50 லட்சம் வரி இல்லாத, உத்தரவாதமான வட்டியை ஈட்டுகின்றன என்று தி ஹிந்து தெரிவிக்கிறது.
இந்தப் பட்டியலில் உள்ள 20 பணக்கார ஊழியர்களின் மொத்த பிஎஃப் சேமிப்புத் தொகை ரூ 825 கோடியாக உள்ளது (சராசரியாக தலா ரூ 40 கோடி). 100 பணக்கார ஊழியர்களின் சேமிப்புத் தொகை ரூ 2000 கோடியாக (சராசரி சுமார் ரூ 20 கோடி) உள்ளது.
மிக அதிக அளவில் ரூ 103 கோடி வைத்திருக்கும் கணக்கு ஒன்றும், அதனைத் தொடர்ந்து தலா ரூ 83 கோடி வைத்திருக்கும் இரண்டு கணக்குகளும் உள்ளன என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.
அதாவது, சாதாரண தொழிலாளர்களுக்கும் பிற ஊழியர்களுக்கும் உருவாக்கப்பட்ட இந்த வரி இல்லாத, உத்தரவாதமான வட்டியுடன் கூடிய திட்டத்தைப் பயன்படுத்தி, கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் உயர் மேலாளர்கள் தமது வரிச் சுமையை குறைத்துக் கொள்கிறார்கள்.
எனவே, 2021-22-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ஆண்டுக்கு ரூ 2.5 லட்சத்துக்கு மேல் பிஎஃப் கணக்கில் சேமிப்பவர்களுக்கு, ரூ 2.5 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு வரி விலக்கு கிடையாது, அவர்கள் வருமான வரி செலுத்தும் போது அந்தத் தொகையையும் சேர்த்து வரி கணக்கிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.