Aran Sei

ஜிஎஸ்டி இழப்பீடு : மத்திய அரசு கடன் வாங்க தயங்குவது ஏன்? – கேரள நிதியமைச்சர்

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஜூலை 1ஆம் தேதி 2017ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி வரிக்குள் அனைத்து சரக்கு மற்றும் சேவைகளை கொண்டு வருவதற்கு அதுவரையில் மாநிலங்கள் விதித்து வந்த விற்பனை வரி உட்பட 7 வகையான வரிகள் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்பட்டன.

மாநிலங்கள் தங்களுடைய நிதி ஆதாரங்களை விட்டுக்கொடுத்ததற்காக 14 விழுக்காடு இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதியளித்தது. இந்த வாக்குறுதிக்கு இணங்க மாநிலங்கள் ஜிஎஸ்டி வரி முறையை ஏற்றுக்கொண்டன. கொரோனா தொற்று காரணமாக இந்திய அரசால் போதிய வரி வருவாயை ஈட்ட முடியவில்லை. அதுவும் குறிப்பாக இந்த ஆண்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் சுமார் 3 இலட்சம் கோடி அளவுக்கு பற்றாகுறை ஏற்படும் என்று தி பிரிண்ட் இணையத்தளத்தின் அரசியல் பொருளாதாரம் துறைக்கான மூத்த இணை ஆசிரியர் ரெம்மியா நாயர் குறிப்பிடுகின்றார்.

சமீபத்தில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 41ஆவது கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கடவுளின் செயலினால், இந்த ஆண்டு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். இந்த ஆண்டு மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய 2.35 இலட்சம் கோடியை அல்லது 97,000 கோடி இழப்பீட்டு தொகையை ரிசர்வ் வங்கி மூலம் மாநிலங்கள் கடனாக பெற்றுக்கொள்ளுமாறு நிதி அமைச்சர் அறிவுறுத்தினார். கேரளா, பஞ்சாப், தெலங்காணா, மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்கள் கடன் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை ஏற்க மறுத்துவிட்டன.

கேரள நிதியமைச்சர் தாம்ஸ் ஜசக் சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், “ஜிஎஸ்டி இழப்பீடு பெறுவது மாநிலங்களுக்கு அரசமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படையான உரிமை” என்று கூறியுள்ளார். மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய முழு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையையும் இந்திய அரசு நேரடியாக சந்தையில் கடன் பெற்று மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்ற முன்மொழிவை வைத்துள்ளார். சந்தையில் மத்திய அரசு நேரடியாக கடன் வாங்குவது மிகவும் சுலபம் என்றும் மே மாதம் அறிவிக்கப்பட்ட 21 இலட்சம் கோடி பொருளாதார மீட்பு தொகுப்பு பெரும் அளவில் கடன் வழியில் நிதியை பெறவுள்ள நிலையில், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய 2.35 இலட்சம் கோடி நிதியை திரட்டுவது மத்திய அரசுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று தாம்ஸ் ஜசக் கூறியுள்ளார்.

மத்திய அரசு கடன் வாங்கினால் வட்டி விகிதம் உயரும் என்ற கேள்விக்கு ஐசக் பதிலளிக்கையில், “மத்திய அரசு கடன் வாங்குவதோ அல்லது மாநில அரசு கடன் வாங்குவதோ இந்திய பொருளாதாரத்தின் மீது ஒரே தாக்கத்தையே ஏற்படுத்தும். கொரோனா காரணமாக ஜிஎஸ்டி வரி வருவாய் வீழ்ச்சியடைந்தினால் நாங்கள் இழப்பீடு வழங்க மாட்டோம் என்று மத்திய அரசு கூறுவது கொரோனா தொற்று, பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளுக்கு மத்திய அரசு செலவு செய்யாது என்பதையே குறிக்கிறது. இது போன்ற நடவடிக்கையை உலகில் உள்ள எந்த நாடாவது கடைப்பிடிக்கிறதா? என்று ஐசக் தாமஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை கடன் மூலம்பெற்றுக்கொள்ளலாம் என்ற நிதி அமைச்சரின் ஆலோசனையை தமிழக அரசு நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடித்தில் பிரதமர் தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையாக 12,500 கோடி ரூபாய் நிலுவையில் இருப்பதாக முதலமைச்சர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்