Aran Sei

சந்தையில் விலைக்கு வரும் இந்திய ரயில் தடங்கள்

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மே 17 அன்று வெளியிட்ட அறிக்கையில், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறைகள் தனியார்மயமாக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

ஜூலை மாதம் ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக இந்தியா முழுக்க தனியார் ரயில் சேவைகள் தொடங்கும் என்று அறிவித்திருந்தார். மொத்தம் 151 ரயில்கள் 109 வழித்தடங்களில் தனியாரால் இயக்கப்படும் என்றும் வி.கே.யாதவ் கூறினார்.

இந்திய ரயில்வேயின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி ப.மாணிக்கம் வெளியிட்ட அறிக்கையில் ‘விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் எந்த ஒரு தனியார்மயமாக்கப்பட்ட ரயில்களையும் அனுமதிக்க மாட்டோம். மேலும் திருப்பரங்குன்றம், விருதுநகர் சாத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் தனியார் ரயில்கள் நிறுத்தினால் அந்தந்த ரயில் நிலையத்தில் மக்களை திரட்டி ரயில் மறியலில் ஈடுபடுவேன். மத்திய அரசு ரயில்களை தனியார் மயமாக்கும் இந்த முடிவை உடனடியாக நிறுத்த வேண்டும். எங்கள் பகுதியில் அதிக லாபம் ஈட்டுவதற்கு அம்பானி, அதானி போன்ற பெரும் பணக்காரர்களுக்கு தாரைவார்ப்பதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.’ என குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து DREU உதவி தலைவர் இளங்கோவனிடம் பேசிய போது, “இந்தியன் ரயில்வேயில் மொத்தம் 60,000 பெட்டிகள் உள்ளன. அதில் 5000 பெட்டிகள் தற்போது கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளன. அந்த பெட்டிகள் அனைத்தும் மீண்டும் இயக்கப்படாது. என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் “இந்தியா முழுவதுமாக 500 ரயில்களை தனியாரிடம் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 13 ரயில்கள் தனியாருக்கு விற்கப்பட இருக்கின்றன. டெண்டர் விடுவது போன்ற இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் முழு மூச்சாக எடுக்கப்பட்டு வருகிறது” என்று இளங்கோவன் கூறினார்.

ரயில்வே துறையில் பணிபுரியும் பெயரை வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறும்போது, ”தனியார் ரயில்கள் ஓடும் வழித் தடங்களில், அதற்கு ஒரு மணி நேரம் முன்னும் பின்னும் இந்திய ரயில்வே அவ்வழித்தடங்களில் ரயில்கள் இயக்க கூடாது என்பது ஒப்பந்தம். உதாரணமாக, காலை 4:45க்கு தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் ரயில் தனியாருக்கு விடப்படுகிறது என்றால், காலை 5:15க்கு எக்மோரிலிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் ரயிலின் சேவையை இந்திய ரயில்வே ரத்து செய்யும்.” எனக் கூறினார்.

மேலும் அவர் இதுகுறித்து பேசுகையில், “தனியார் இயக்கப்போகும் ரயில்களில் இதுவரை இருந்துவரும் மகளிருக்கான தனி பெட்டி, அன்ரிசர்வ்ட் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இருக்காது. இவை முற்றிலுமாக நீக்கப்படுவதோடு, ஸ்லீப்பர், இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் அகற்றப்படும். முன்பதிவு செய்து பயணிக்கக்கூடிய பெட்டிகள் மட்டுமே இருக்கும்” என்றார்.

”தனியார் ரயில்களில் 16 பெட்டிகளும் A/C சேர் கார், A/C 3 tier பெட்டிகளாக மட்டுமே இருக்கும். பயண கட்டணத்துக்கும் எந்தவித நெறிமுறைகளும் இருக்காது. டைனமிக் ரேட் முறையில் தேவையைப் பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்.” என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், ”இந்திய ரயில்வே, கொரோனா காரணமாக பெரும்பாலான ரயில்களை ரத்து செய்து குறிப்பிட்ட வழித்தடங்களில் ஒருசில சிறப்பு ரயில்களை மட்டும் இயக்கி வரும் நிலையில், இனி இதுவே தொடரப்பட்டு ரயில் சேவை மிகவும் அவசியமாக இருக்கும் வழித்தடங்கள் தனியார் ரயில்களுக்கு மட்டும் ஒதுக்கப்படும்.” என்று அந்த ரயில்வே துறை அதிகாரி கூறினார்.

இது குறித்து அரக்கோணத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவரிடம் பேசியதில் ”2017ல் இருந்து நான் அதிகமா பயணிச்சது ரயில்ல தான். ரிசர்வ்லாம் பண்ணதே கிடையாது. என்னுடைய வேலை காரணமா இந்தியாவில் பல கிராமங்களுக்கு நான் செல்ல வேண்டி இருக்கும். பெரும்பாலான சமயங்கள்ல உடனடியா முடிவு செஞ்சு போகறதுனால முன்பதிவு சாத்தியம் இல்ல.” என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “ராஜஸ்தான், நாகாலாந்துன்னு எந்த ஊருக்குனாலும் சென்ட்ரல் வந்துட்டா போதும். வெறும் ஆயிரம் ரூவால பல மாநிலங்கள் கடந்து பயணிக்க முடிஞ்சுது. வசதி குறைந்தவர்கள் நெடுந்தூரம் பயணிக்க ரயில்கள நம்பி இருக்காங்க. ஆனா அது பணக்காரங்களுக்கு மட்டுமானதா மாறி வருவது வருத்தமளிக்கிறது” என கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த வினோத் என்பவரிடம் பேசிய போது, ”இங்க ராமநாதபுரத்துல கடல்மீன் ஏலத்துக்கு எடுத்து காலைல முதல் ரயில்ல, மதுரைக்கு கொண்டுபோய் வித்துட்டு வருவாங்க. இப்போ ரயில்கள் ரத்துனால சின்ன யானைல எடுத்துட்டு போறாங்க. சாலை வழியா போக ரொம்ப நேரம் ஆகறதுனால ஐஸ்ல வச்சி எடுத்துட்டு போனாதான் மீன் கெடாம இருக்கு. போக்குவரத்து செலவே இப்போ ரொம்ப அதிகமா இருக்கு.” என்று கூறினார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் செப்டம்பர் 2ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ரயில்வே வாரியத்தை சீரமைக்க மத்திய அமைச்சரவை அளித்த ஒப்புதலின் பேரில், வி.கே.யாதவ் ரயில்வே வாரிய தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு வாரியத்தின் முதல் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்