Aran Sei

தேடிப்பிடித்து பாலிசி தொகையை வழங்கும் எல்.ஐ.சி

 

1956ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி 5 கோடி ரூபாய் அரசு முதலீட்டில் தொடங்கப்பட்டஒரு காப்பீட்டு நிறுவனம் தற்போது 32 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளையும்,கோடி பாலிசிதாரர்களையும் கொண்டு உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இந்த அசாத்திய வளர்ச்சியை சாத்தியப்படுத்தியிருக்கும் அந்த நிறுவனம் இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம் (LIC).

இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனம் என்கிறபெருமையுடன் ‘மக்களின் சேமிப்பு மக்கள் நலனுக்கே’ என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு64 ஆண்டுகளாக இயங்கி வரும் எல்.ஐ.சி நிறுவனத்தின் 65வதுபிறந்த நாள் இன்று.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் செந்தில்குமாரிடம் எல்.ஐ.சியின் இப்பயணம் பற்றிக் கேட்டோம்.

“மிகக்குறைந்த முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இன்றைக்கு இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. மக்கள் எல்.ஐ.சி மீது வைத்திருக்கும் அபாரநம்பிக்கையால்தான் இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டது. எல்.ஐ.சியில் இணைந்தால் காப்பீட்டுப் பணம் உறுதியாகக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. எல்.ஐ.சியின் இத்தனை ஆண்டு கால செயல்பாடுகள் அந்நம்பிக்கையை மேலும் பலப்படுத்தக்கூடியதாக இருந்து வருகிறது. அந்த நம்பிக்கையால்தான் 40 கோடி பாலிசிதாரர்களையும் 12 லட்சம் முகவர்களையும் கொண்டு மிகப்பெரிய நிறுவனமாக திகழ்கிறது எல்.ஐ.சி.

பாலிசி தொகையை வழங்கும் விகிதத்தில் உலகிலேயே முதன்மை நிறுவனமாக எல்.ஐ.சி விளங்குகிறது. அதிகபட்சமாக 99.8 சதவிகித அளவில் பாலிசி தொகையை எல்.ஐ.சி வழங்குகிறது. உலகில் உள்ள மற்ற அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுமே 80-82 சதவிகித அளவில்தான் பாலிசி தொகையை அளித்து வருகின்றன. இந்த ஒப்பீட்டின் மூலம் எல்.ஐ.சியின் நம்பகத்தன்மையை புரிந்து கொள்ள இயலும். இதேபோல் வேறு எந்த காப்பீட்டு நிறுவனமும் செய்யாத பல வியக்கவைக்கும் செயல்களை எல்.ஐ.சி மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தைய உதாரணம் ஒன்றைச் சொல்கிறேன், கொரோனா தொற்றுக்கு ஆளாகி இறப்பவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசிடமிருந்து பெற்று வருகிறோம். அந்தப் பட்டியலைக் கொண்டு இறந்தவரின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு அவர்களை ஆற்றுப்படுத்தி, இறந்தவர் பெயரில் ஏதேனும் பாலிசி இருக்கிறதா என விசாரிக்கிறோம். அப்படி அவர் பாலிசி எடுத்திருந்தார் என்றால் அதற்கான பாலிசி எண்ணைப் பெற்றுக் கொண்டு பாலிசிக்கேற்ற காப்பீட்டுத் தொகையை உடனே வழங்குகிறோம். அது குறித்த விபரம் குடும்பத்தினருக்கு தெரியவில்லை என்றால், இறந்தவரது பெயர் மற்றும் பிறந்த தேதி, முகவரி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாங்களே தேடி எடுத்து உரிய காப்பீட்டுத் தொகையை வழங்குகிறோம். இந்த நெருக்கடியான காலத்திலும் பாலிசிதாரர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கி வருகிறோம். வேறெந்த காப்பீட்டு நிறுவனத்துக்கும் இப்படியான பெருமை கிடையாது” என்றவரிடம் எல்.ஐ.சி நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடும் மத்திய அரசின் நடவடிக்கை தனியார்மயத்துக்கான முயற்சிதான் என்று எழும் குற்றச்சாட்டுகள் பற்றிக் கேட்டோம்.

“நிச்சயமாக இது தனியார்மயத்துக்கு அடிகோலிடும் செயல் என்பதை மறுப்பதற்கில்லை. எல்.ஐ.சி ஊழியர் சங்கங்கள் சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடத்தி வருகிறோம். எல்.ஐ.சியை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கு அரசு தரப்பில் முன் வைக்கப்பட்ட எந்த வாதங்களும் ஏற்புடையதாக இல்லை. 2001ம் ஆண்டு நிதி நிறுவனங்களில் தனியார்மயத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட பிறகு 24 காப்பீட்டு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இந்தியாவில் எல்.ஐ.சியுடன் சேர்த்து மொத்தம் 25 காப்பீட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த 19 ஆண்டுகளில் கடும் போட்டிகளுக்கு மத்தியிலும் 70 சதவிகித சந்தைப் பங்குகள் எல்.ஐ.சியிடம்தான் இருக்கின்றன. மற்ற 24 நிறுவனங்களும் ஒற்றை இலக்கத்தில்தான் சந்தைப்பங்குகளைக் கொண்டிருக்கிறார்கள். 40 கோடி பாலிசிதாரர்களைக் கொண்டிருக்கும் ஒரே நிறுவனமும் எல்.ஐ.சிதான். ‘மக்கள் சேமிப்பு மக்கள் நலனுக்கே’ என்கிற நோக்கின் அடிப்படையில் மக்கள் நலத்திட்டங்களுக்காக மட்டும் இதுவரை 30 லட்சம் கோடி ரூபாயை எல்.ஐ.சி வழங்கியிருக்கிறது.

இந்நிறுவனத்தைத் தொடங்க அரசு கொடுத்த 5 கோடி ரூபாய்க்கு ஈவுத்தொகையாக இதுவரை 26ஆயிரம் கோடி ரூபாயை அரசுக்கு எல்.ஐ.சி வழங்கியிருக்கிறது. 2019-2020 நிதியாண்டில் மட்டும் 2600கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இப்படியான நிலையில் எல்.ஐ.சியை பங்குச்சந்தையில்  பட்டியலிடுவதற்கான எந்தத் தேவையும் இல்லை.

எல்.ஐ.சிக்கு மூலதனத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கோடுதான் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகிறது என்கிற வாதம் அரசு தரப்பில் முன் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தர்க்கப்பூர்வமாக அணுகினால் எல்.ஐ.சி நிறுவனத்துக்கு மூலதனம் எதுவும் தேவையில்லை.ஏனென்றால் அது எதனையும் உற்பத்தி செய்யவில்லை. மக்களிடமிருந்து பணம் பெற்று, அதனை காப்பீட்டுத் தொகையாகவும், மக்கள் நலத்திட்டங்கள் வழியாகவும் மக்களுக்கே திரும்ப அளித்து வரும் நிறுவனத்துக்கு எதற்கு மூலதனம்?

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கிற அனைத்து நிறுவனங்களிலும் எல்.ஐ.சியின் முதலீடு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 3 – 4 லட்சம் கோடி ரூபாய் எல்.ஐ.சி சார்பில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. சொல்லப்போனால் தேவைக்கும் அதிகமாகவே எல்.ஐ.சியிடம் நிதி இருக்கிறது. ஐடிபிஐ நிறுவனம் மோசமான நிலைக்குச் சென்ற போது அதன் 51 சதவிகித பங்குகளை எல்.ஐ.சி நிறுவனம் வாங்கியது. எல்.ஐ.சி நிறுவனத்தின் இந்நடவடிக்கையால் மோசமான விளைவுகளை சந்திக்கக்கூடும் என ஊடகங்கள் அதனை விமர்சித்தன. ஆனால், அக்கருத்தை பொய்யாக்கி இன்றைக்கு ஐடிபிஐ நிறுவனத்தை லாபகரமான நிறுவனமாக மாற்றியிருக்கிறது எல்.ஐ.சி.

பங்குச்சந்தைக்கு வரும்போதுதான் வெளிப்படைத் தன்மை இருக்கும் என்று அரசு சொல்கிறது.ஆனால், இதுகாலம் வரையிலும் எல்.ஐ.சி வெளிப்படைத் தன்மையுடன்தான் இயங்கி வருகிறது. Insurance regulatory and development authority -யிடம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எல்.ஐ.சி தனது கணக்கு விபங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், செபி (securities and exchange board of india)-யிடம் எல்.ஐ.சியின் முதலீடுகள் பற்றிய விபரங்களை அளிக்க வேண்டும். அது மட்டுமின்றி இந்நிறுவனம் LIC ACT 1956 –ன் படி நாடாளுமன்றத்தின் மூலம் நிறுவப்பட்டதால் ஆண்டுதோறும் எல்.ஐ.சியின் மொத்த விபரங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வளவு வெளிப்படைத்தன்மையுடன் இயங்கிவரும் நிறுவனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று சொல்வது ஏற்புடையது அல்ல.

central information committee மூலம்  உலகிலேயே சிறந்த கணக்குப்பதிவு கொண்ட நிதி நிறுவனம் என்று சான்றளிக்கப்பட்டு, அதன் தர வரிசைப்படுத்துதலில் உச்சமான க்ரேட்- ஏ வை பெற்றிருக்கிறது எல்.ஐ.சி. இப்படியான நிலையில் எல்.ஐ.சி இயங்கிக் கொண்டிருக்க, அரசு முன் வைக்கும் எந்த வாதங்களும் ஏற்புடையதல்ல. வெளிப்படையாகச் சொல்வதென்றால் அரசுக்கு பண நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. எல்.ஐ.சியின் பங்குகளை விற்று அதை ஈடுகட்ட முயற்சி செய்கிறது என்பதுதான் உண்மை” என்கிறார் செந்தில்குமார்.

ஏற்பில்லாத வாதங்களை முன் வைத்து எல்.ஐ.சியை பங்குச் சந்தையில் பட்டியலிடுவது தனியார்மயத்துக்கான வாசலைத் திறந்து விடும் நடவடிக்கை என்பதே துறை சார்ந்தவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆலமரமாய் கிளைபரப்பி, அனைத்து நிறுவனங்களுக்கும் முன்மாதிரிகயாக திகழும் எல்.ஐ.சி போன்ற பொதுத்துறை நிறுவனத்தில் தனியாரின் தலையீடு கூடாது என்பதே எல்.ஐ.சி ஊழியர் சங்கங்களின் கோரிக்கை.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்