ஆகஸ்ட் 23 அன்று, இந்தூரில் 25 வயதான ஒரு வளையல் விற்பனையாளரை தாக்கிய நிகழ்வு ஏதோ ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. இந்துத்துவா குழுக்களால் பல்வேறு சமூக ஊடகங்களில், நாட்டில் இஸ்லாமிய விற்பனையாளர்களுக்கு எதிராக பொருளாதார புறக்கணிப்பை நடத்த வேண்டும் என்ற வகுப்புவாத பரப்புரையின் விளைவுதான் அந்தத் தாக்குதல்.
இந்தத் தாக்குதலுக்கு அடுத்த நாள், பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங்கின் ஒரு காணொளி எந்தவித விளக்கமும் இன்றி டெலிகாராமில் தீவிர வலதுசாரி குழுவில் பகிரப்பட்டது. அந்தக் காணொளியில் சிங் இஸ்லாமிய வணிகர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுப்பதைக் காணலாம்.
“உங்கள் மண்டையில் ஏற்றிக் கொள்ளுங்கள், இன்று முதல் நீங்கள் ஏதாவது வாங்க வேண்டும் என்றால் இந்தத் தேசத் துரோகிகளிடமிருந்து (இஸ்லாமியர்) வாங்காதீர்கள். இந்துக்களிடமிருந்தே வாங்குங்கள். 100 கோடி இந்துக்களும் இதனை பின்பற்றினால், மீதமுள்ள 25 கோடி பேரும் (இஸ்லாமியர்கள்) கண்டிப்பாக இந்து மதத்திற்கு மாறி விடுவார்கள்,” என்று ஆரவாரம் செய்யும் கூட்டத்தினரிடையே மேடையில் நின்று அவர் முழங்குகிறார்.
இந்தக் காணொளி ” தேசவிரோதிகள், மத விரோதிகள், இந்திய நாட்டின் விரோதிகள் மீதான முழு பொருளாதார புறக்கணிப்பு” என்ற தலைப்புடன் டெலிகிராம் குழுவில் பகிரப்பட்டது. கிராந்தி சேனா அமைப்பின் உறுப்பினர்கள் முசாபர்நகர் சந்தையில் “திடீர் சோதனை” நடத்தி அங்கு இஸ்லாமிய ஆண்கள் இந்துப் பெண்களின் கைகளில் மருதாணி இடவில்லை என்பதை உறுதி செய்யும் காணொளி அதிவிரைவாக பரவிய சில நாட்களுக்குப் பின் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதேப் போன்ற பதிவுகள் பிற வலதுசாரி குழுக்களின் பல்வேறு சமூக வலைத்தளங்களிலும், இந்து மதத் தலைவர்களுக்கிடையிலும், சுதர்சன் டிவி போன்ற தீவிர இந்து மதவாத தொலைகாட்சி ஒளியலை வரிசைகளிலும் பரவின.
‘இஸ்லாமியர்கள் மீதான பொருளாதாரப் புறக்கணிப்பு, இந்துக்கள் இந்துக்களிடமே வியாபாரம் செய்ய வேண்டும்’ என்ற 6,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட ஒரு முகநூல் பக்கத்தில் தள்ளுவண்டிகளில் அவர்கள் இந்துக்கள் என்பதைக் அடையாளம் காட்ட காவிக் கொடியைக் கட்டிக் கொண்டு வரும் படங்கள் பதியப்பட்டன. இந்து சேனா என்ற அமைப்பின் தலைவனான சுஷில் திவாரி என்பவன் இஸ்லாமியர்களின் வணிகத்தை எவ்வாறு புறக்கணிப்பது என்பது பற்றி நீண்ட தன்னிலைப்பாட்டு (status) விளக்கத்ததை பதிவிட்டான். இஸ்லாமியர்களின் வணிகத்தைப் புறக்கணிக்கக் கோரும் பல முகநூல் பதிவுகளும் காணப்பட்டன.
ஆகஸ்ட் 8 ம் நாள் ஜந்தர் மந்தரில் நடக்கவிருந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு மக்களை அணிதிரட்டுபவர்களைக் கொண்ட குழு உருவாக்கப்பட்டு, ஆத்திரமூட்டும் முழக்கங்கள் எழுப்பப்பட்டதுடன் இஸ்லாமியர்களுக்கு எதிரான பொருளாதார புறக்கணிப்பிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. “இஸ்லாமியர்களிடமிருந்து எந்தப் பொருளையும் வாங்காதீர்கள், அவர்களுடைய மகிழுந்தில் பயணம் செய்யாதீர்கள், அப்போதுதான் அவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஒவ்வொரு தளத்திலும் அவர்களைப் புறக்கணியுங்கள்,” என்று அதில் பகிரப்பட்ட ஒரு செய்தி கூறுகிறது. மற்றொரு செய்தி ஒரு மாதத்திற்குள் இந்தியாவை “இந்து ராஷ்டிரமாக” மாற்ற ‘சனாதன’ விற்பனையாளர்களைக் கொண்ட 24 தொழில்களைப் பட்டியலிட்டது. இதேப் போன்ற முழக்கங்கள் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் உத்தம் மாலிக் எனப்படும் உத்தம் உபாத்தியாய் என்பவனால் முழங்கப்பட்டது.
நியூஸ் லாண்டரிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் அவன்,” இந்த நாட்டைக் காப்பாற்ற இஸ்லாமியர்கள் மீதான பொருளாதாரப் புறக்கணிப்பு நடத்தப்பட வேண்டும். அவர்களிடமிருந்துப் பொருட்களை வாங்குவதை நிறுத்துங்கள். அப்போதுதான் அவர்களை நாம் வீழ்த்த முடியும்,” என்று கூறினான். சுவாமி ஆனந்த் ஸ்வரூப் என்ற இந்து மதத் தலைவர் ” இஸ்லாமியர்களைப் பொருளாதார, சமூகப் புறக்கணிப்பு செய்ய வேண்டும்” என்று கூறியதற்காக மீரட் காவல்துறையினரால் புலன் விசாரணைக்கு ஆளானார். சவுத்ரி சவான் சிங் பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஸ்வரூப்,” இஸ்லாமியர்களிடமிருந்து எதையும் வாங்குவதில்லை என நீங்கள் முடிவு செய்யுங்கள். அவர்களை சமூக ரீதியாக, அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக புறக்கணித்தால் அவர்கள் இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறத் துவங்கி விடுவார்கள்,” என்று கூறினார்.
இதேப் போன்ற இஸ்லாமியர்ளுக்கு எதிரான ஒரு ஒருங்கிணைந்த பரப்புரை, ஒரு முஸ்லீம் பழ விற்பனையாளர் தில்லி உத்தம் நகரில் கடந்த ஜூன் மாதத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட போதும் நடந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த நிகழ்விற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, உத்தம் நகர் பகுதியில் இந்துத்துவா தீவிரவாதிகள் சாலைகளை மறித்து இஸ்லாமியர்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்புவதையும், சாலையின் நடுவே ‘அனுமன் சாலிசா’வை பாடியதையும் காட்டும் காணொளிகளைக் குழுவில் பகிர்ந்துக் கொண்டனர். இதனை ஏற்பாடு சேர்ந்தவர்களில் வினோத் சர்மாவும் ஒருவர். ஆசாத் வினோத் என்றும் அழைக்கப்படும் இவர், ஜந்தர் மந்தர் கூட்டத்தில் நடந்த வெறுப்புப் பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டவர்.
தி வயர் இதழில் வந்த கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது போல, ‘ரெஹ்தி ஜிகாத்’ (சாலையோர விற்பனையாளர்கள் ஜிகாத்) என இந்தப் போராட்டத்தை அழைக்கும் இந்தக் குழுவின் பல்வேறு சமூக தளங்களிலும் காணப்படும் இந்த முக்கியச் சொல் உத்தம் நகர் தாக்குதலுக்கு முன்னும் பின்னும் இந்துத்துவா தீவிரவாதிகளை ஒன்றிணைக்கப் பயன்படுத்தும் சொல்லாக உள்ளது.
சென்ற ஆண்டு சுதர்சன் டிவியின் செய்தி ஆசிரியர் சுரேஷ் சாவன்கி முன்னிலைப்படுத்திய “ஹலால் பொருட்களைப் புறக்கணியுங்கள்” என்ற பரப்புரையில் பொருளாதார புறக்கணிப்பிற்கான கடுமையான அடிப்படைகளைக் கொண்டிருந்தது. மார்ச் 4 ம் தேதி இந்தியா கேட் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது சாவன்கி வெளியிட்ட காணொளி “கலவரக் காரர்களுக்கு” எதிராக பொருளாதாரப் புறக்கணிப்பிற்கு அழைப்பு விடுத்ததைக் காட்டியது. அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பதை அவர் கூறாவிட்டாலும், அவர் இஸ்லாமிய சமூகத்தினர் குறித்துதான் பேசுகிறார் என்பதை ஒருவர் புரிந்துக் கொள்ளப் போதுமான குறிப்புகளை அவர் பயன்படுத்துகிறார். “அவர்கள் உங்கள் கழுத்தை அறுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் நீங்கள் அந்த “பச்சைத் தொப்பிக்காரர்களுக்கு” (green chadar) நன்கொடை தருவதை இப்போதே நிறுத்துங்கள்,” என்று சாவன்கி அதில் கூறுகிறார். இந்தப் பரப்புரை அவரது சமூக ஊடக ஒளியலை வரிசைகளிலும் தொடர்ந்தது. அவர் “கலவரக்காரர்களை”,” முடி திருத்துவோர், பஞ்சர் ஓட்டுபவர்கள், பழ வியாபாரிகள் மற்றும் மிக முக்கியமாக இறைச்சி வியாபாரம் செய்பவர்கள் என்றும், ” கலவரங்களை நிறுத்த வேண்டும் என்றால் பொருளாதார புறக்கணிப்பு நமக்குத் தேவை,” என்றும் கூறுகிறார்.
இஸ்லாமியர்களுக்கு எதிரான வகுப்புவாத பேச்சுக்களும், பொருளாதார புறக்கணிப்புக்கான அழைப்பு விடுப்பதும் இந்துத்துவா வட்டாரத்திற்கு புதியதல்ல எனினும், 2020 தப்ளிகி ஜமாத் ஊடக விசாரணைக்குப் பின் இது போன்ற நிகழ்வுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இஸ்லாமிய விற்பனையாளர்களைக் குறிவைத்துத் தாக்கும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பிரிபூஷன் ராஜ்புட் மற்றும் சுரேஷ் திவாரி ஆகியோரின் காணொளிகள் அதிவிரைவாக பரவின. ராஜ்புட் தனது வீட்டிற்கு வெளியில் ஒரு விற்பனையாளரையும், ஒரு சிறுவனையும் கொடுமைப் படுத்தும் காட்சியையும் அதில் காணலாம்.
இதற்கு சில நாட்களுக்கு முன் சுரேஷ் திவாரி இஸ்லாமிய விற்பனையாளர்களிடம் காய்கறிகளை வாங்காதீர்கள் என மக்களைக் கேட்டுக் கொள்ளும் காணொளி வெளியானது. “இஸ்லாமியர்களிடம் காய்கறி வாங்காதீர்கள் என நான் வெளிப்படையாகக் கூறுகிறேன்,” என்று அந்த சட்டமன்ற உறுப்பினர் கூறுவதை நீங்கள் கேட்கலாம். இது போன்ற பல சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தப் பிறகு இஸ்லாமிய அமைப்புகளின் உச்ச அமைப்பான அகில இந்திய முஸ்லீம் மஜ்லிஸ்-இ- முஷாவரத், ஏப்ரல் 2020 ல், இஸ்லாமியர்கள் மீதான பொருளாதார புறக்கணிப்பை நிறுத்துமாறு தனது ஆதரவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியது. தேசிய தள்ளுவண்டி விற்பனையாளர்கள் கூட்டமைப்பும் கோவிட் 19 ஊரடங்கு சமயத்தில் “இஸ்லாமிய விற்பனையாளர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும்” நிகழ்வுகளை கண்டனம் செய்துள்ளது.
எனினும் தீவிர வலதுசாரி குழுவினர் வாடிக்கையாளர்கள் இந்து விற்பனையாளர்களை அடையாளம் காண விற்பனையாளர்களுக்குக் காவிக் கொடிகளை விநியோகித்து வரும் வேளையில் பாகுபாடு அதிகரித்துள்ளது. பீகாரில் நாளந்தா மாவட்டத்தில், பிகார்ஷெரீஃபில், பஜ்ரங்தள் அமைப்பினர் இந்துக் கடைகளில் காவிக் கொடி கட்டியதற்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக தேசிய தலைமை கோவிட் 19 ஊரடங்கு சமயத்தில் இஸ்லாமிய விற்பனையாளர்களை இலக்கு வைப்பதை கண்டும்காணாமல் விட்டுள்ளனர். பிரதமர் மோடியும் நோயை எதிர்த்து ஒன்றிணைந்து, சகோதரத்துவத்துடன் போராட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இருப்பினும் அண்மை நிகழ்வுகள், களத்தில் வெகு சிறிய அளவு மாற்றங்களே ஏற்பட்டுள்ளதைக் காட்டுகின்றன. கோவிட் 19 தொற்று பரவலிலிருந்து தற்போது தங்கள் இடைவிடாத கோரிக்கையான” இந்து ராஷ்டிரம்” நோக்கி இந்த சாக்கு மீண்டும் திரும்பி உள்ளது.
www.thequint.com இணைய தளத்தில் அபிலாஷ் மாலிக் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.