Aran Sei

கொரோனா பெருந்தொற்று – ஜிடிபி-யில் 90% ஆக உயர்ந்த இந்தியாவின் கடன் சுமை

image credit : thehindu.com

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவின் கடன் சுமை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 74%-ல் இருந்து 90% ஆக உயர்ந்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) கூறியுள்ளது.

“2019-ன் இறுதியில், பெருந்தொற்றுக்கு முன்னதாக இந்தியாவின் கடன் விகிதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 74% ஆக இருந்தது. 2020-ன் இறுதியில் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 90%-ஐ எட்டி விட்டது” என்று ஐஎம்எஃப் நிதி விவகாரங்கள் துறையின் துணை இயக்குனர் பாவ்லோ மௌரோ கூறியுள்ளார்.

“மத்திய கால நோக்கில் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால், இது 80% அளவுக்குக் குறையும் என்று கணிக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் துறையின் இயக்குனர் விக்டர் கஸ்பார், உலகளாவிய கடன்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 97%-ஐ எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். 2021-ல் அது 99% ஆக அதிகரித்து, பின்னர் 100%-க்குக் கீழே மிக அருகில் நிலைத்தன்மை அடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2020-ல் அரசுகளின் நிதிக் கொள்கை முடங்கி போன்ற பொருளாதார செயல்பாடுகளையும் வேலை வாய்ப்புகளையும் மீட்க உதவியது என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

நிதி ஆதாரங்களை பெறுவதற்கு அதிக வசதி கொண்ட நாடுகளும், வலுவான சேம இருப்பைக் கொண்ட நாடுகளும், வலுவான அடிப்படைகளைக் கொண்ட நாடுகளும் 2020-ல் மீட்பு திட்டங்களுக்கு அதிக நிதி ஆதரவை வழங்க முடிந்தது என்று திரு விக்டர் கஸ்பார் கருத்து தெரிவித்துள்ளார்.

சந்தைகளின் நம்பிக்கையையும், தனது உறுப்பினர்களின் நம்பிக்கையையும் உறுதி செய்வதற்கு ஐஎம்எஃப் செயல்பட தயாராக உள்ளது என்றும், அதற்காக சுமார் $1 லட்சம் கோடி நிதியை வைத்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்