Aran Sei

‘தமிழ்நாடு முன்னிலை என்றால் மற்ற மாநிலங்களின் நிலை’ – துரைமுருகன்

Image Credits: Deccan Chronicle

ரசு விழா மேடையை அரசியல் மேடையாக மாற்ற கூடாது என்று திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

2021-ம் ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் பல்வேறு மாநிலங்களுக்குப் பாஜகவின் முன்னாள் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில், நேற்று மாலை நடந்த விழாவில் அவர் கலந்துகொண்டார்.

விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட மற்ற அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

அமித் ஷா மீது வீசப்பட்ட பதாகை – எதிர்ப்பின் அடையாளமா?

விழா குறித்து வேலூரில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய துரைமுருகன், “அமிதா ஷாவும் தமிழக அமைச்சர்களும், மக்களுடைய வரி பணத்தில் நடத்தப்படுகிற அரசு விழா மேடையை அரசியல் மேடையாக்கிவிட்டு, அங்கே அரசியல் கூட்டணியையும் உருவாக்கிவிட்டு எதிர் காட்சிகளை எல்லாம், குறிப்பாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) ஏகவசனத்தில் வசைமாரி பொழிந்துவிட்டுப் போயிருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

“இச்செயல் ஜனநாயகத்துடைய நெறிமுறையை அழிகின்ற செயல். அரசியல் கட்சிக்கும் அரசியலுக்கும் வித்யாசம் தெரியாமல் போனால் அங்கே ஜனநாயகம் செத்து சர்வாதிகாரம் தழைகின்றது என்று பொருள். எனவே, அரசு விழாக்களில், அரசு சம்பந்தப்பட்டதைதான் பேச வேண்டும். அரசியல் பேசக் கூடாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“ஆனால், மக்களுடைய வரி பணம் கோடி கணக்கில் செலவழித்த அந்த விழாவில், முதலமைச்சரும் அமைச்சர் பெருமக்களும் இருக்க, இது நடைபெற்றுள்ளது. அவர்கள்தான் விவரம் தெரியாத அமைச்சர்கள், அரசு விழாக்களில் அரசியலைக் கலக்குகிறார்கள் என்றால் அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இவ்வாறு செய்கிறார். விழாவில் கலந்துகொண்டு அமித் ஷாவும் எதிர் கருத்தால் சாடியிருப்பது மிக வருத்தத்திற்குரியது” என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

“அரசு விழாவில் மத்திய அமைச்சரும் மாநில அமைச்சர்களும் போட்டிபோட்டுக்கொண்டு அரசியல் பேசி இருப்பதை திமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் ” என்று கூறியுள்ளார்.

”இந்திய திருநாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கின்ற அமித் ஷா போன்றோருக்கு இது அழகல்ல என்பதையும் நான் இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“இந்த மேடையிலே அவர் இரண்டு மூன்று கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார். முதலிலே இந்த ஆட்சிக்கு நற்சான்றிதழை வழங்கி இருக்கிறார். வேறு மாநிலங்களை விட தமிழகம் முன்னாள் இருப்பதாகக் கூறியுள்ளார். தமிழ்நாடு தான் இந்தியாவிலே முன்னிலையில் இருக்கிறது என்றால் மற்ற மாநிலங்கள் எவ்வாறு இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்” என்று துறைமுருகன் விமர்சித்துள்ளார்.

“நம் மாநிலமே கேடுகெட்ட நிலையில் உள்ளது. இதுவே முதல் இடம் என்று சொன்னால் மற்ற மாநிலங்கள் எவ்வளவு மோசமாக இருக்கும்? 100/10 மதிப்பெண் பெற்றவன் தான் வகுப்பிலேயே முதல் மாணவன் என்றல் மற்ற மாணவர்களின் கதி என்னவாக இருக்கும்? அதை தான் அமித் ஷா மேடையில் சொல்லி இருக்கிறார்” என்று அவர் கூறியுள்ளார்.

“இதே அமித் ஷா அவர்கள் முன்பொரு முறை தமிழகம் வந்தபோது, இந்த ஆட்சியைப் பற்றி, அமைச்சர்களை பற்றி, லஞ்ச லாவண்யங்களை பற்றித் தோலுரித்து கட்டிவிட்டு போனார். அவை எல்லாம் இன்றைக்கு நிவர்த்தி செய்யப்படாத என்பதை அமித் ஷா தெரிவிக்கவில்லை” எனவும் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்