Aran Sei

விவசாயிகள்மீது மோதிய பாஜக எம்.பி.யின் கார் – இன்னொரு லக்கீம்பூராக ஹரியானாவை மாற்றும் முயற்சி என விவசாயிகள் குற்றச்சாட்டு

ரியானா மாநிலம் அம்பாலா பகுதியில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நயாப் சைனியில் கார் மோதியதில் ஒரு விவசாயி காயமடைந்ததை அடுத்து அந்தப் பகுதியில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் பவான் ப்ரீத் என்ற விவசாயி காயமடைந்திருப்பதாக விவசாயிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுகுறித்து காவல்துறை மற்றும் நயாப் சைனி தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இது தொடர்பாக ஹரியானா காவல்துறையிடம் பவான் ப்ரீத் அளித்திருக்கும் புகாரில், “அம்பாலாவின் நாராயண்கார்க் பகுதியில் உள்ள சைனி பவனில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்வதற்காக குருக்சேத்திரா நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நயாப் சைனி, ஹரியானா விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் மற்றும் பாஜக தலைவர்கள் சென்றனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

”மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை ஹரியானாவில் பாஜக தலைவர்களை பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிப்பதில்லை என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக சைனி மற்றும் பாஜக தலைவர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாராயண்கார்க்-சாதௌரா சாலையில் தர்மசாலாவில் 11 மணிக்கு விவசாயிகள் திரண்டனர்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

“சாலையின் ஒருபுறத்தில் கூடி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தபோது, HR 04 F 0976 என்ற பதிவு எண் கொண்ட இன்னோவா கார் விவசாயிகள் இருந்த பகுதிக்குள் தறிக்கெட்டு நுழைந்தது” என விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

”கார் மோதியதில் ஒரு விவசாயி நூலிழையில் உயிர் தப்பனார். மற்றொரு விவசாயி பவன் பிரீத் மீது கார் மோதியதில் சாலையில் எதிர்புறத்திற்கு தூக்கி வீசப்பட்டார்.” என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தைப் பெர்கெரி கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ் என்பவரை ஒட்டியதாக கூறும் விவசாயிகள், இதை இன்னொரு ’லக்கிம்பூராக மாற்ற’ பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சைனியின் சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்து வேண்டுமென்றே காரை விவசாயிகள் கூட்டத்திற்கு ஓட்டியுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

Source : The Wire

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்