Aran Sei

அரசு அலுவலகங்களில் ஆடைக் கட்டுப்பாடு : தனிமனிதச் சுதந்திரத்தில் தலையிடும் அரசு

அரசு அலுவலகங்களில் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணியக் கூடாது என மஹாராஷ்டிரா ஆணையிட்டிருப்பதாக ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.

அரசு அலுவலகங்களில், செயலகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் பார்ப்பதற்கு மிடுக்காக இருக்க வேண்டுமென இதுகுறித்து வெளியிட்டிருக்கும் அரசாணையில் மஹாராஷ்டிரா அரசு சொல்கிறது. “சில அரசு ஊழியர்கள் அணிந்து வரும் ஆடைகள், அலுவலகத்திற்கு ஏற்றதாக இல்லை என்பது எங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. நாம் உடுத்தும் உடையின் நேரடித் தாக்கம் வேலையில் தெரியும். எனவே, அடர்ந்த நிற ஆடைகள், எம்பிராய்டரி செய்திருக்கும் ஆடைகளை ஊழியர்கள் அணியக் கூடாது. ஜீன்ஸ், டி-ஷர்டுகள் அணியக் கூடாது. அரசு அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் பார்க்க மிடுக்காக இருக்க வேண்டும்” எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு, பீஹார் அரசு, ராஜஸ்தான் தொழிலாளர் துறை, கர்நாடகா அரசு ஆகியவையும் அரசு அதிகாரிகள் ஆடை விதிகளைப் பின்பற்ற வேண்டும் என இதற்கு முன் சுற்றறிக்கைகள் வெளியிட்டிருக்கின்றன.  “பெண்கள் சேலையும், துப்பட்டாவோடு சுடிதாரும் அணியலாம். ஆண்கள் வேஷ்டியும், ஃபார்மல் பேன்ட்களுடன் சட்டையும் அணியலாம்” எனத் தமிழக அரசு முன்னர் தெரிவித்திருந்தது.

மஹாராஷ்டிரா அரசின் இந்தப் புதிய ஆடைக் கட்டுப்பாடு குறித்த செய்தி வெளியானதும், பலர் முனைப்பாக ட்விட்டரில் மஹாராஷ்டிரா அரசைப் பகடி செய்யத் தொடங்கினர். ஒரு பயனர், “என்னதான் ப்ரொஃபெஷனலாக ஆடை உடுத்திக்கொண்டாலும், அவர்கள் ப்ரொஃபெஷனலாகவா நடந்துகொள்ளப் போகிறார்கள்?” என்று ட்விட்டர் செய்தியின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். வேறொருவர் உத்தவ் தாக்கரே ஜீன்ஸ் அணிந்திருக்கும் புகைப்படத்தை “யெஸ் சார்” என்று தலைப்பிட்டுப் பகிர்ந்திருந்தார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்