Aran Sei

குடியரசு தின விழாவில் தமிழகம் புறக்கணிப்பு – மாநில சுயாட்சிக்கு எதிரானது என கி.வீரமணி கண்டனம்

மிழ்நாட்டின் குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகளை ஒன்றிய அரசு நிராகரித்ததற்கு எதிராகத் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி தலைமையில் சென்னை பெரியார் திடலில் அமைதிப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

போராட்டத்திற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி “டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களின் அணிவகுப்பு வாகனங்கள் மட்டும் ஏற்றுக்கொண்டு , சுதந்திரத்திற்காக உயிரை விட்ட தமிழகத்தின் தியாகச் செம்மல்களின் பெயர்கள் தெரியாது என ஒன்றிய அரசு தெரிவித்திருப்பது இந்திய நாட்டிற்கே அவமானம்” என்று கூறியுள்ளார்.

“குடியரசு தினவிழாவில் தமிழ்நாட்டின் அணிவகுப்பு வாகனத்தை நிராகரித்தது, இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்களை வஞ்சிப்பது எனத் தொடர்ந்து ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குப் பல இடையூறுகள் தந்தாலும் அந்த முள் படுக்கையிலும் பல சாதனைகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்” என்று வீரமணி புகழாரம் சூட்டினார்

மேலும் “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே ரேஷன் அட்டை, ஒரே தேர்தல் எனக் கூறும் ஒன்றிய அரசு, ஏன் ஒரே ஜாதி என்று கூறவில்லை” என்று கேள்வி எழுப்பிய வீரமணி, “இந்த ஆர்ப்பாட்டம் முடிவல்ல உணர்வின் தொடக்கம்” என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

“சென்னை ரிசர்வ் வங்கியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பங்கேற்ற சென்னை ரிசர்வ் வங்கி உயர் அதிகாரிகள் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்காதது கண்டனத்திற்கு உரியது, சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்