Aran Sei

திருநங்கையரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும்- தமிழ்நாடு அரசுக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் வேண்டுகோள்.

னைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதோடு, பெண்களையும், திருநங்கையரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யவேண்டுமென, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைத்துத் தரப்பினரும் வழிபடும் கிராமக்கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள்

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், “1971 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் திரு கலைஞர் அவர்கள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வண்ணம் ’இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டம் 1959 ல்’ திருத்தம் செய்து சட்டமொன்றை இயற்றினார். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அரசியல் சட்ட அமர்வு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. வழக்கு தொடுத்தவர்கள் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் பல்கிவாலா ” சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் மடாதிபதியாக விளங்கும் சங்கராச்சாரியாரின் வாரிசை ஒரு அரசு நியமிக்க முற்பட்டால் அது எப்படி சமய உரிமைக்குள் தலையிடுவதாக இருக்குமோ அப்படித்தான் அர்ச்சகர் நியமனமும்” என்று வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த உச்சநீதிமன்றம் ” அர்ச்சகர் என்பவர் ஒரு சமயத் தலைவர் அல்ல. கோயிலில் பூஜை செய்வதற்கான ஆகமங்களை மந்திரங்களை அவர் அறிந்திருந்தாலும் அவரை ஒரு சமயத் தலைவராகக் கருத முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பட்டியல் வகுப்பில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: மீண்டும் நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி கடிதம்

 

மேலும், “கோயில்களை ஜனநாயகப்படுத்தும் தனது முயற்சியில் மனம் தளராத தலைவர் கலைஞர் 2006 ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு ஏதுவாக சட்டம் ஒன்றை இயற்றினார். 1971 ஆம் ஆண்டு நீதிமன்றத்துக்குப் போனதுபோலவே 2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்துக்குப் போனார்கள்”. என்றும் ரவிக்குமார் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, 2006 ஆம் ஆண்டு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் தமிழக சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது மகளிரையும் அர்ச்சகர்களாக நியமிக்க வகை செய்யவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தான் வலியுறுத்தியதாகவும் ரவிக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூடுதலாக, ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களில்தான் பெண்களை அர்ச்சகர்களாக நியமிக்கமுடியாது. இந்து அறநிலயத் துறையைச் சேர்ந்த பிற கோயில்களில் பெண்களை அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு எந்தவொரு தடையும் இல்லை என்பதையும் நீதிபதி கே.சந்துரு வழங்கியுள்ள தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

‘கொரோனா தொடர்பான உயிரிழப்புகளை துல்லியமாக அறிவிக்க வேண்டும்’ – தமிழக அரசை அறிவுறுத்திய உயர்நீதிமன்றம்

 

நீதிபதி கே.சந்துரு வழங்கிய அந்த தீர்ப்பு குறித்து குறிப்பிட்டுள்ள அவர், ‘‘அதிர்ஷ்ட வசமாக இந்தக் கோயில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட ஒன்று அல்ல. இந்தியாவின் தென் பிராந்தியங்களில் அமைந்துள்ள உப பண்பாடுகளைச் சேர்ந்த தெய்வங்கள் மனு ஸ்மிருதியின் தளைகளிலிருந்து விடுபட்டவையாகும். எனவே பெண்ணை வீட்டு வேலைகளோடு மட்டுமே அடக்கி வைத்திருக்கும் நிலைமை இங்கு எழவில்லை. புகழ் பெற்ற தத்துவ அறிஞர் ஒருவர் குறிப்பிட்டதுபோல பெண்கள்தான் இந்த பிரபஞ்சத்தின் பாதியை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். மனிதகுலம் முன்னேறிச் செல்லவேண்டுமென்றால் அது ஆண், பெண் என்ற இரண்டு கால்களாலும் நடந்தால்தான் சாத்தியம். கடவுளின் சன்னதிகள் ஆண், பெண் பாகுபாடுகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமானவையாக விளங்க வேண்டும்’’ என்று நீதிபதி கே.சந்துரு அந்தத் தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளதாகவும் ரவிக்குமார் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் , உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலும் சமூகநீதியை நிலைநாட்டும் விதத்திலும் கோரிக்கைகளைத் தங்கள் மேலான பரிசீலனைக்கு முன்வைப்பதாகவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் அர்ச்சகர் பயிற்சி பெற்று பல ஆண்டுகளாகக் காத்திருப்போரை உடனடியாக நியமிக்கவேண்டும் எனவும், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் தமிழ்நாடு அரசு துவக்கவேண்டும். அதில் பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படவேண்டும் எனவும் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் நூற்றாண்டுகள் பழமையான மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் – நீதி வேண்டி உயர்நீதிமன்றத்தில் வக்பு வாரியம் மனு

 

மேலும், “2006 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தத்தின் மூலமாகத் திருக்கோயில்களுக்கு நியமிக்கப்படும் அறங்காவலர்களில் பெண் ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என ஆக்கப்பட்டது. அதே சமத்துவ உணர்வின் அடிப்படையில் மாநில , மாவட்ட ஆலோசனைக் குழுக்களில் பெண் ஒருவரை நியமிக்க உரிய திருத்தம் செய்யப்படவேண்டும்” என்றும் அவர் கோரியுள்ளார்.

அதுமட்டுமின்றி, மாநில அளவிலான ஆலோசனைக் குழுவிலும், மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக்களிலும் பெண்களை உறுப்பினர்களாக நியமிக்க ஏதுவாக வழிவகை செய்யப்படவேண்டுமெனவும் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கூறியுள்ளார்.

மேலும்,  ’இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டம் 1959 இன் பிரிவு 55 இல் திருத்தம் செய்து மகளிர் மட்டுமின்றி திருநங்கையரும் அர்ச்சகர்கள் ஆவதற்கு வழிசெய்ய வேண்டுமெனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்