Aran Sei

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசுக்கு விருப்பமில்லையா? – உயர் நீதிமன்றம் கேள்வி

Image Credits: DNA India

ந்தியாவில் தமிழகத்தோடு அடிக்கல் நாட்டப்பட்ட மற்ற மாநில எய்ம்ஸ் மருத்துவமனைகளின் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது தமிழகத்தில் மட்டும் காலதாமதம் ஏன்? என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டியது. ஆனால் மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் தென்தமிழகம் மற்றும் கேரளா மாநில மக்கள் பெரும் பயன்அடைவார்கள். மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் மாணவர்களுக்குக் கூடுதல் ஒதுக்கீடு கிடைக்கவும் வாய்ப்புள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

“தற்போது கொரோனா தொற்று காரணமாகப் பல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக, அளவுக்கு அதிகமாகப் பணம் வசூல் செய்யும் சூழலில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்திருந்தால் ஒரே நேரத்தில் பல ஆயிரம் மக்கள் சிகிச்சை பெற்று பயன்பெற்றிருப்பார்கள். ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. ஆகவே, மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதியை ஒதுக்கி, பணியைத் துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும்” என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று (18.12.2020) மதியம் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால் கால அவகாசம் கோரப்பட்டது.

அப்போது, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் கொடுப்பதில் காலதாமதம் ஏன்? என்றும் மருத்துவமனை அமைவதில் அரசுக்கு விருப்பம் இல்லையா? என்றும் கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை மாலைக்கு ஒத்திவைத்தனர்.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், தமிழக அரசு எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக 223 ஏக்கர் நிலத்தை மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டதாகக் கூறி அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.

இதனை கேட்ட நீதிபதிகள், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, தமிழக அரசு இன்னும் இடம் ஒப்படைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினர்.

“தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இது போன்ற தவறான தகவலை வழங்கிய அந்த அதிகாரி யார்? அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது?” என்றும் “தமிழக அரசு இடத்தை முழுமையாக ஒப்படைத்துள்ளதா?” என்றும் மத்திய அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மத்திய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், “தமிழக அரசு எய்மஸ் மருத்துவமனை அமைப்பதற்காக முழுமையான இடத்தை ஒப்படைத்துவிட்டது. தற்போது கட்டுமான பணிகளுக்கான கடன் ஒப்பந்தம் ஜப்பானிய நிறுவனத்துடன் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணி 2021-ம் ஆண்டு, மார்ச் மாதத்திற்குள் முடிவடைந்துவிடும். அதிலிருந்து 45 மாதங்களுக்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு விடும்” என்று தெரிவித்தார்.

“இந்தியாவில், தமிழகத்தோடு அடிக்கல் நாட்டப்பட்ட மற்ற மாநில எய்ம்ஸ் மருத்துவமனைகளின் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் இந்தப் பணிகள் தொடங்கவில்லை” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

“மதுரை எய்ம்ஸ் கட்டுமான ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள ஜப்பானிய நிறுவனம், கொரோனா காலத்திலும் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் எய்ம்ஸ் பணிகளில் மட்டும் கால தாமதம் ஏன்?” எனவும் கேள்வி நீதிபதிகள் கேட்டனர்.

இதை அடுத்து, கட்டுமான பணிகள் குறித்து விரிவான உத்தரவைப் பிறப்பிக்க உள்ளதாகக் கூறிய நீதிபதிகள், வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்