Aran Sei

‘தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படலாம்; ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு ஆக்சிஜன் தயாரிக்க வேண்டும்’: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

கொரோனாவை கட்டுப்படுத்துவது, ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் மருந்துகள் தட்டுப்பாடு குறித்து விவாதிக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை கொரோனா முடியும் வரை ஆக்சிஜன் தயாரிக்கவும் ஆலோசித்து உரிய முடிவுகளை எடுத்திட அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்டிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து, இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை, “கோவேக்சின் தடுப்பூசியை தமிழக அரசே சென்னை கிண்டியில் உள்ள ‘கிங்ஸ் நிறுவனம்’ மூலமும், செங்கல்பட்டிலுள்ள எச்எல்எல் பயோ டெக் நிறுவனம் மூலமும் உற்பத்தி செய்தால், குறைந்த விலையில் உற்பத்தி செய்வதோடு, தேவையான மருந்தை குறுகிய காலத்திற்குள் உற்பத்தி செய்திட முடியும்.” என்று ஆலோசனை வழங்கியுள்ளார்

“எச்எல்எல் பயோ டெக் நிறுவனத்தில் முதலீடு செய்ய மத்திய அரசு தயங்குகிறது. அங்கு தடுப்பூசி உற்பத்தி செய்து கொள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட ஒப்பந்தப் புள்ளியை 26.03.2021 அன்று கோரியுள்ளது. இது வரை எந்த நிறுவனமும் அங்கு உற்பத்தியை தொடங்கிட முன்வரவில்லை. இதனால் உற்பத்தி தாமதமாகிறது. எனவே,தமிழக அரசே அந்நிறுவனத்தை ஒப்பந்த அடிப்படையில் மத்திய அரசிடம் இருந்து ஏற்று கோவேக்சின் தடுப்பூசியை, மத்திய அரசின் அனுமதியுடன் உற்பத்தி செய்ய முன் வர வேண்டும். இதன் மூலம் அந்தப் பொதுத்துறை நிறுவனத்தைக் காப்பதுடன், மக்களுக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகள் மற்றும் இதர தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்திட முடியும். இதன் மூலம் தமிழக மக்களின் தேவையை நிறைவேற்றுவதோடு, வணிக அடிப்படையில் விற்கவும் முடியும்.” என்று ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வேண்டும் – தமிழக அரசுக்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் கடிதம்

“மருத்துவ உபகரண உற்பத்திக்காக, செங்கல்பட்டில் எச்எல்எல் மெடி பார்க்( HLL MEDI PARK) என்ற நிறுவனத்தில் தமிழக அரசின் தொழில் வளர்ச்சிக் கழகம் மத்திய அரசுடன் ஒப்பந்தமிட்டு இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு கரோனா நோயாளிக்கும் சிகிச்சைக்காகத் தேவைப்படும் ஆக்சிஜன், கரோனா அல்லாத மற்ற நோயாளிகளைவிட அதிக அளவில் பல நாட்களுக்குத் தேவைப்படுகிறது. கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் மிக அதிக வேகத்தில் அதிகரித்துவருகிறது. இதனால் ஆக்சிஜன் தேவையும் மிக அதிக அளவில் அதிகரித்து வருகிறது.” என்று அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலை வரலாம். ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கிட, பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளின் மூலம் உற்பத்தியை பெருக்கிட வேண்டும் என்றும் தொழில்துறைக்கு ஆக்சிஜன் பயன் படுத்தப்படுவதை உடனடியாக நிறுத்திட வேண்டும் என்றும் என்று ஜி.ஆர்.ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.

“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஒவ்வொரு நாளும் 1050 மெட்டிரிக் டன் அளவிற்கு மருத்துவ ஆக்சிஜனை உற்பத்திச் செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது. இது ஒட்டு மொத்த தமிழகத்தின் உற்பத்தித் திறனான 400 மெட்ரிக் டன்னைவிட இரண்டரை மடங்கு அதிகமாகும். உச்ச நீதிமன்றமும் அந்த ஆலையை தமிழக அரசே ஏற்று ஆக்சிஜனை உற்பத்தி செய்ய ஏன் முன்வரக்கூடாது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.” என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்வியை அவர் நினைவூட்டியுள்ளார்.

ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதியளிக்கலாம் – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

உச்ச நீதிமன்றத்தின் இந்த வேண்டுகோளின் அடிப்படையில், மூடப்பட்டுள்ள அந்த ஆலையில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு முடிகின்ற வரை, கொரோனா நோயாளிகளுக்காக மருத்துவ ஆக்சிஜினை மட்டும் உற்பத்தி செய்யலாம் என்றும் மக்களின் உயிரை காத்திட மருத்துவ ஆக்சிஜன் மிக மிக முக்கியமான தேவையாக மாறியுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஜி.ஆர்.ரவீந்திரநாத் குறிப்பிட்டுள்ளார்.

“கொள்ளை நோய் தடுப்புச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் போன்றவற்றின் அடிப்படையில் அந்நிறுவனத்தை உடனடியாக தமிழக அரசே கையகப்படுத்தி, தமிழக அரசே நேரடியாக, அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஒப்புதலுடன் நியமிக்கப்படும் நடுநிலையான நிபுணர்கள் குழு, மற்றும் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்படும் நிபுணர்கள் குழு மற்றும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டக்குழு பிரதிநிதிகளின் கூட்டு மேற்பார்வையில், முழுமையான பாதுகாப்புடன் மருத்துவ ஆக்சிஜனை மட்டும் உற்பத்தி செய்யலாம்.” என்று அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

“இதன் மூலம் தமிழகம் உட்பட பல மாநிலங்களின் ஆக்சிஜன் தேவையை உடனடியாக நிறைவு செய்திட முடியும். ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கிட முடியும். ஆயிரக்கணக்கான கரோனா நோயாளிகளின் உயிர்களை காத்திட முடியும். கரோனா நோயாளிகளின் நலன் கருதி, மனித நேய அடிப்படையில் இதை உடனடியாகச் செய்யலாம். இது போன்ற அவசர அவசிய கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்திடவும், மருந்துகள், தடுப்பூசிகள், ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றி பேசி முடிவெடுத்திடவும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்டிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.” என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்