Aran Sei

பெண்ணின் வீட்டின் முன் சிறுநீர் கழித்து துன்புறுத்திய வழக்கு: மருத்துவர் சுப்பையா சண்முகம் கைது

2 ஆண்டுகளுக்கு முன்பு வயதான பெண் ஒருவரின் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்து துன்புறுத்திய வழக்கில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் மருத்துவர் சுப்பையா சண்முகம் காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை அடுத்த நங்கநல்லூர் ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் புற்று நோய் நிபுணரான மருத்துவர் சுப்பையா சண்முகம் வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் வசித்து வரும் வயதான பெண்ணுக்குச் சொந்தமான கார் பார்க்கிங் இடத்தில் தொடர்ந்து சுப்பையா தனது காரை நிறுத்தி பிரச்சினையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த வயதான பெண்மணிக்கு நிறைய தொந்தரவுகளை அவர் கொடுத்து வந்துள்ளார். அதில் உச்ச பட்சமாக அந்த பெண்ணின் வீட்டில் சிறுநீர் கழித்துள்ளார்.

இந்த பிரச்சினை தொடர்பாக அந்தப் பெண் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு ஆதரவாக அதே குடியிருப்பில் வசித்து வந்த அவரது உறவினர் பாலாஜி விஜயராகவன் ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுலை 17 ஆம் தேதி இது சம்பந்தமாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த நேரத்தில் தான் அந்த பெண்ணின் வீட்டின் முன்பு மருத்துவர் சுப்பையா சண்முகம் சிறுநீர் கழிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொரோனா விதிமுறை மீறல், பொருட்களை சேதப்படுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் ஆதம்பாக்கம் காவல்துறையினர் மருத்துவர் சுப்பையா சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்துள்ளது. இந்நிலையில், அப்போது பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடம் மிரட்டி கையெழுத்து வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மருத்துவர் சுப்பையா சண்முகத்தை காவல்துறையினர் இன்று (மார்ச் 19) கைது செய்தனர்.

மேலும் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீட்டின் முன்பு ஏ.பி.வி.பி அமைப்பினர் போராட்டம் நடத்தத் தூண்டியதாகவும், போராட்டத்தில் கைதானவர்களை சிறையில் சென்று சந்தித்ததாகவும் மருத்துவர் சுப்பையா மீது புகார் எழுந்தது. அரசு வழிகாட்டு விதிமுறைகளை மீறியதாகக் கூறி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு தலைவர் பணியில் இருந்து மருத்துவ கல்வி இயக்குநரகம் இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்