Aran Sei

`தாலியை நாய்ச் சங்கிலியுடன் ஒப்பீடா?’ – பேராசிரியைத் தரப்பு விளக்கம்

கோவா சட்டக் கல்லூரியின் உதவிப் பேராசிரியரான ஷில்பா சிங் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஷ்டிரிய இந்து யுவா வாகினியின் கோவா பிரிவைச் சேர்ந்த ராஜீவ் ஜா அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. புகாரில், வேண்டுமென்றே மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பனாஜி’ஸ் வி.எம்.சல்கோகர் சட்டக் கல்லூரியில் ஷில்பா சிங் அரசியல் அறிவியல் துறையைச் சேர்ந்தவர். ஏப்ரல் 21 அன்று ஷில்பா தனது முகநூல் பக்கத்தில் ‘மங்கல்சூத்ரா’வை (தாலியை) ‘நாயின் சங்கிலியுடன்’ ஒப்பிட்டதாக ராஜீவ் ஜா புகார் அளித்துள்ளார்.

முன்னதாக ஆர்எஸ்எஸ்-ன் மாணவ அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) ஷில்பா சிங்கைப் பணிநீக்கம் செய்யக் கோரி அவர் பணிபுரியும் கல்லூரிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ‘ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான கருத்துகளை ஷில்பா ஊக்குவிப்பதாக’ அதில் கூறப்பட்டிருந்தது. இதற்குப் பதில் அளித்துள்ள கல்லூரி நிர்வாகம் ஷில்பா கற்பிக்கும் படத்தைக் குறித்து ஆட்சேபனை எழுப்பவோ அவரைப் பணிநீக்கம் செய்யவோ தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளது.

ஷில்பா சிங்கும் ராஜீவ் ஜா மீது புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ராஜீவ்க்கு  எதிராகவும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறான பதிவுகள் மூலம் ராஜீவ் தன்னை மிரட்டியதாக ஷில்பா குற்றம் சாட்டியுள்ளார்.

ஏபிவிபியின் கடிதத்தைப் பற்றித் தனக்குத் தெரியும் என்று ராஜீவ் கூறியுள்ளார். ஆனால், அவர் தந்தது ‘தனிப்பட்ட திறனில்’ இந்தப் புகாரை அளித்ததாகவும் தெரிவித்துள்ளார் என ‘தி வயர்’ செய்தி குறிப்பிட்டுள்ளது.

ராஜீவ் தன்னை ஒரு ‘இந்து பிராமணர்’ என்று அழைத்துக்கொண்டு, ஷில்பாவை ‘இந்து விரோதி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

“அவர் ஒரு பெண் என்பதால் நான் காவல் நிலையத்திற்குச் சென்றேன். அவதூறு செய்ததாகவும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகவும் அவர் என் மீது புகார் தாக்கல் செய்துள்ளார். நான் நேரடியாகக் கல்லூரிக்குச் சென்று நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால், நான் அதைச் செய்யவில்லை” என்று ராஜீவ் தெரிவித்துள்ளார்.

“எனது முகநூல் பதிவுகள் பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்தியிருந்தால் நான் அதற்காக வருந்துகிறேன். மங்கல்சூத்ரா மற்றும் புர்கா பற்றிய எனது தனிப்பட்ட கருத்துகள் முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன. மதத்தையோ பெண்களையோ கேலி செய்வது எனது நோக்கம் இல்லை. அனைத்து மதங்களிலும் திருமணத்துக்குப் பின் பெண்களுக்கு மட்டும் மணமானதைக் குறிக்கும் அடையாளங்கள் வழங்கப்படுகின்றன. ஆண்களுக்கு அது போன்ற எதுவும் இல்லை. சிறு வயதில் இருந்தே இது குறித்து எனக்குக் கேள்விகள் உள்ளன. நான் ஒரு ‘மத விரோதி’ என்றும் ‘கடவுளை வெறுக்கும் நாத்திகர்’ என்றும் எனது எதிர்ப்பாளர்களால் என்னைப் பற்றி ஒரு தவறான கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அது முற்றிலும் தவறு” என்று ஷில்பா விளக்கம் அளித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்