Aran Sei

சட்டத்தை மீறும் வகையில் விளம்பரங்களை ஒளிபரப்ப கூடாது – மத்திய அரசு

னியார் தொலைக்காட்சிகளில் விளம்பரங்களை ஒளிபரப்புவது குறித்த ஆலோசனையைத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சிகள், சட்டத்தையோ விதியையோ மீறும் வகையிலான விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது என்று அது அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து, தனியார் தொலைக்காட்சிகளுக்கு அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், அணைத்து ஒளிபரப்பாளர்களும் இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் விளம்பரங்கள் இந்த வழிகாட்டுதலை மீறவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, சட்டத்தையோ விதியையோ மீறும் வகையிலான விளம்பரங்கள் ஒளிபரப்பாகவில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரங்களை ஒளிபரப்புவது தொடர்பாக இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் நவம்பர் 24 அன்று புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இது, டிசம்பர் 15 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனைய சூதாட்டத்தில் பணத்தை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதே போல, ஆந்திர மாநிலத்திலும் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இணையவழி சூதாட்ட விளையாட்டுகள் மற்றும் ஃபேண்டசி விளையாட்டுகளை (fantasy gaming ads) விளம்பரப்படுத்துவதற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, 18 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்களை போலத் தோன்றுவோரை ஆன்லைன் விளையாட்டுகளுக்கான விளம்பரங்களில் நடிக்க வைக்கக் கூடாது என்று கூறியுள்ளது.

“இந்த விளையாட்டுகளை விளையாடுவதில் பணத்தை இழக்கக்கூடிய அபாயம் உள்ளது என அனைத்து விளம்பரங்களிலும் டிஸ்கிளைமர் (disclaimer) போட வேண்டும். இதனை தெளிவுபடுத்த குறைந்தபட்சம் 20% இடத்தை ஒதுக்க வேண்டும்” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம், இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில், செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம், இந்திய ஒலிபரப்பு அறக்கட்டளை, அகில இந்திய கேமிங் கூட்டமைப்பு, இந்திய ஃபேண்டசி விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் ஆன்லைன் ரம்மி கூட்டமைப்பு ஆகியவைச் சந்தித்து ஆலோசித்தன. இந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்