Aran Sei

‘மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் பாஜகவினரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும்’ – டி.ஆர்.பாலு

பிகள் நாயகம் பற்றி அவதூறு பரப்பி மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் பாஜகவினரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும் என்று  டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று (பிப்பிரவரி 2) நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசி- தமிழகத்தில் உள்ள மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டும் என்பது ஒன்றையே இலக்காகக் கொண்டு பாஜகவில் உள்ள மாநிலச் செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் போன்றவர்கள் பேசி வருவதும், அவர்களுக்கு அனைத்துவித ஊக்கமும் அளித்து பாஜக தலைமை காப்பாற்றி வருவதும் கடும் கண்டனத்திற்குரியது என்று அவர் விமர்சித்துள்ளார்.

நபிகளை இழிவுப்படுத்தி பாஜக கல்யாண ராமன் பேச்சு: இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்தை தொடர்ந்து கைது

இதுபோன்ற நபர்களை தன் மனம் போன போக்கில் பேசவிட்டு- பிறகு கண்டனங்கள் எழுந்த பிறகு கண்துடைப்பிற்காக கைது செய்கிறது அதிமுக அரசு என்று டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டியுள்ளார்.

“ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்து கருத்துச் சொன்னால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது, ஒரு துண்டுப் பிரசுரம் வழங்கிய மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தின் கீழ் கைது என்றெல்லாம் பாஜகவின் மனம் குளிர காவல்துறையைப் பயன்படுத்தும் அதிமுக அரசுக்கு மதவெறிப் பேச்சுகளை வழக்கமாகத் தொடர்ந்து வெளியிட்டு வரும் பாஜகவில் உள்ள கல்யாணராமன் போன்றவர்களையோ சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்களையோ கண்டு தமிழக காவல்துறையும் அஞ்சுகிறது. அதிமுக அரசும் அப்படிப் பேசும்- அல்லது கருத்துத் தெரிவிக்கும் பாஜகவினரை எதுவும் செய்து விடாதீர்கள் என்று கைகட்டி எட்டி நிற்கிறது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘மதக்கலவரம் நடக்கும்…’ இஸ்லாமியர்களை மிரட்டிய நபர் – வேடிக்கை பார்த்த போலீஸ்

மேலும், “திருவாரூரில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு, பாஜகவினர் மீது ஏதாவது பொதுவான கருத்தைக் கூறிவிட்டாலே கைது- சிறையிலடைப்பு. தேசியக் கொடியை அவமதித்தாலும் அவர்களுக்கு காவல்துறையே மனமுவந்து மன்னிப்பு வழங்குகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கொச்சைப்படுத்தி பேசினாலும் உயர் நீதிமன்றத்தின் மீதே அவதூறு பரப்பினாலும் அது பாஜகவினர் என்றாலோ அல்லது பாஜக ஆதரவு பெற்றவர்கள் என்றாலோ அதிமுக அரசு அஞ்சி நடுங்கி ஒதுங்கி நிற்கிறது.” என்று டி.ஆர்.பாலு விமர்சித்துள்ளார்.

அதிமுக அரசின் கையாலாகாத தனத்தைப் பயன்படுத்தி மத நல்லிணக்கத்திற்கு எதிராக நபிகள் நாயகம் பற்றிப் பேசிவருவதை அதிமுக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ரோஹிங்கியா இஸ்லாமியர்களை நாடு கடத்திய வங்கதேசம் – மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

மேட்டுப்பாளையத்தில் அவதூறாகப் பேசிய கல்யாணராமனைத் தாமதமாக கைது செய்தது மட்டும் போதாது என்றும் அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்றும் டி.ஆர்.பாலு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்