Aran Sei

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு – திமுக கூட்டணி தடையை மீறி உண்ணாவிரதம்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தோழமைக் கட்சிகள் அறிவித்த உண்ணாவிரதப்போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், சென்னையில் தடையை மீறி உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றுள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து, டெல்லி எல்லையில் விவசாயிகள் 20 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

”போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, மாஃபியாக்கள்” – தமிழக பாஜக

விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும், திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதன் ஒருபகுதியாக, போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக, இன்று (டிசம்பர் 17) உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

விவசாயிகள் நிதி உதவித் திட்டம்: தமிழகத்தில் நடந்த ரூ.110 கோடி ஊழல்

இந்த போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், தடையை மீறி இன்று (டிசம்பர் 17) காலை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. திமுக தலைவர் ஸ்டாலின், கூட்டணிக்கட்சிகளின் தலைவர்கள் வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், தங்கபாலு, ஜவாஹிருல்லா, திமுகவின் முன்னணி தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கொரோனா காலத்தைப் பயன்படுத்தி, மத்தியில் இருக்கும் பா.ஜ.க. அரசு, மக்கள் விரோதச் சட்டங்களை அவசர அவசரமாகக் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

”குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், மூன்று வேளாண் சட்டங்கள், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை, புதிய மின்சார திருத்தச் சட்டம். இந்த நான்கு சட்டங்களும் மக்களுக்கு விரோதமான சட்டங்கள் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் துணை நிற்கும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு கண்மூடித்தனமாக வழங்கிக் கொண்டிருக்கிறது.” என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

அதைத் தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “இந்தியாவில் உள்ள 86 சதவீத சிறுகுறு விவசாயிகளில் 90 சதவீத விவசாயிகள் இந்துக்கள் தான். நாங்கள் இந்துக்களின் காவலர்கள் என்றும் இந்துக்களுக்கான கட்சி என்றும் கூறிக்கொள்ளும் பாஜகவிற்கு, இந்த சட்டங்களினால் இந்துக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரிய வேண்டாமா? இந்துக்களுக்கு எதிரான ஒரே கட்சி பாஜக தான்.” என்று கூறினார்.

 

அதானி, அம்பானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம் : சிபிஎம் புதிய அறிவிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசும்போது, “இந்த சட்டம் உழவர்களுக்கு எதிரான சட்டம்; மாநில சுயாட்சிக்கு எதிரான சட்டம்; 130 கோடி இந்திய மக்களின் உணவு உரிமைக்கு எதிரான சட்டம். அதனால்தான் இந்த சட்டத்தின் மீது விவாதம் நடந்த பொழுது, பதில் வழங்கவேண்டிய மத்திய அமைச்சர், மானமுள்ள ஒரு அமைச்சர் மறுநிமிடமே ராஜினாமா செய்து வெளியேறினார்; மானங்கெட்ட மங்குனிகள் இந்த நிமிடம் வரை முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது” என்று கூறினார்.

மேலும், “பிரிட்டிஷ் ஆட்சியின் போது கூட டெல்லியின் டிசம்பர் மாத கடுங்குளிரில்‌‌, வீடற்ற வழியில் 5 லட்சம் மக்கள் போராட்டத்தை நடத்தியது கிடையாது. அதைவிட ஒரு பேயாட்சி இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது, உழவர்களுக்கு எதிராக; மாநில உரிமைகளுக்கு எதிராக; 130 கோடி மக்களுக்கு எதிராக இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.” என்று சு.வெங்கடேசன் கூறினார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்