விவசாய திருத்தச் சட்டத்திற்கு எதிராக, தலைநகர் தில்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், ”விவசாய திருத்தச்சட்டம் விவசாயிகளுக்குப் பெரும் பயனளிக்கும்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்குக் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின் சட்டமாக்கப்பட்ட மசோதாக்களை எதிர்த்து ‘தில்லி சலோ’ (தில்லிக்குப் போவோம்) எனும் பேராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்புவிடுக்கப்பட்டு, இப்போது தில்லி எல்லையில் விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்களைத் தில்லிக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக முள்வேலி, மணல் மூட்டைகள் , ட்ரோன்கள், நீர் பீரங்கிகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
விவசாய திருத்தச் சட்டம் குறித்து அரண்செய்யிடம் பேசிய பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் ” இப்போது மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் சட்டத்தின் மூலம் எல்லா மாநிலங்களிலும் விவசாய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களுக்கு வெளியிலும் வர்த்தகர்கள் தங்கள் பொருட்களை வாங்க முடியும். ஆனால், இதில் சில பிரச்சனைகள் இருக்கின்றன. விவசாய ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 1-2 சதவீத கட்டணம் விதிக்கப்படுகிறது. வெளியில் இந்தக் கட்டணம் இருக்காது என்பதால், பலரும் வெளியிலேயே விற்பனை செய்ய முயல்வார்கள். சில சமயங்களில் களத்திலேயே பொருட்களை கிடைத்த விலைக்கு விற்கவும் விவசாயிகள் முன்வரக்கூடும். இதன் காரணமாகவே, விவசாய ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களில் இந்தச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது” என்று கூறினார்.
மேலும், ”பெரிய நிறுவனங்களுடன் விவசாயிகள் ஒப்பந்தம் செய்து கொண்டு விவசாயம் செய்வதை ஒரு சட்டம் உறுதிப்படுத்துகிறது. “ஏற்கெனவே கரும்பு இந்த வகையில்தான் விவசாயம் செய்யப்படுகிறது. அருகில் உள்ள சர்க்கரை ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, விவசாயிகள் கரும்பைப் பயிட்டு, ஆலைக்கு அளிக்கிறார்கள். ஆனால், ஆலைகள் பணம் தர தாமதம் செய்வதை பல முறை நாம் பார்த்திருக்கிறோம். அப்படி நடந்தால், சிறிய விவசாயியால் என்ன செய்ய முடியும்? நிறுவனங்களை எதிர்த்து வழக்குத் தொடுக்க முடியுமா?” என ஜெயரஞ்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
போராட்டம் குறித்து, மத்திய அரசின் ‘ஒரு நாடு’ என்ற கொள்கையை கேலி செய்யும் விதமாக, “இந்த ஆர்ப்பாட்டங்கள் ’ஒரே நாடு, ஒரே விவசாயிகள் எதிர்ப்பு ’ என்ற நிலையை தெளிவாகக் காட்டியுள்ளன.” என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அறிக்கை கூறியுள்ளது.
“விவசாய போராட்டங்கள் ஆங்காங்கே உள்ளூர்களில் மட்டுமே நடக்கின்றன என்ற மத்திய அரசின் கட்டுக்கதை உடைக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாடு தொடங்கி பஞ்சாப் வரை, குஜராத் தொடங்கி அசாம் வரை, விவசாயிகள் கூடியுள்ளனர். இதன் மூலம் விவசாயிகளின் எதிர்காலத்தை அழிப்பதற்கான சட்டங்களை உருவாக்கும் மத்திய அரசின் திட்டம் தவிடுப்பொடியாகும். ” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராடும் விவசாயி பிரதிநிதிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. நிபந்தனையோடு பேச்சு வார்த்தைக்கு அழைப்பது முறையில்லை என்றும் சட்டத்தைத் திரும்பப் பெறாமல் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டோம் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், வாரணாசியில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி ” விவசாய திருத்தச்சட்டம் விவசாயிகளுக்கு பெரும் பயனளிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.