Aran Sei

வலுதுசாரிகள் எதிர்ப்பால் மீண்டும் சர்ச்சை – விளம்பரத்தை நீக்கியது தனிஷ்க் நிறுவனம்

இந்துக்கள் உணர்வைப் புண்படுத்தியதாக தனிஷ்க் நிறுவனத்தின் விளம்பரம் இந்துத்துவ வலதுசாரிகளால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

கடந்த மாதம், ஏகத்வம் (ஒருமைப்பாடு) எனும் பெயரில் தனிஷ்க் நிறுவனம் எடுத்த விளம்பரத்தை இந்துத்துவ வலதுசாரிகள் கடுமையாக எதிர்த்தனர்.

டாடா குழுமத்துக்குச் சொந்தமான டைட்டன் நிறுவனத்தின் நகை அணிகலன்கள் தயாரிக்கும் நிறுவனமான தனிஷ்க், இந்து முஸ்லிம் இணையினர் திருமண வாழ்வை அடிப்படையாக வைத்து எடுத்த ஏகத்வம் என்று பெயரிடப்பட்ட விளம்பரப் படம்,  இந்துத்துவ அமைப்புகளால் எதிர்வினையைச் சந்தித்ததால் அந்நிறுவனத்தின் அதிகாரபூர்வப் பக்கங்களிலிருந்து கடந்த மாத நீக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை குறித்து தனிஷ்க் எடுத்துள்ள விளம்பரமும் சர்ச்சையாக்கப்பட்டுள்ளதால், அந்த நிறுவனம், தன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து அந்த காணொலியை நீக்கியுள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக சயானி குப்தா, ஆலயா, நீனா குப்தா, நிம்ரத் கவுர் ஆகிய நடிகைகள் நடித்துள்ள விளம்பரப்படம் சமீபத்தில் வெளியானது. குடும்ப ஒற்றுமையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த விளம்பரத்தில் தீபாவளி பண்டிகைக்காக ஒன்றிணையும் குடும்பம் தீபாவளி குறித்த தங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் தெரிவிப்பது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதில் நடிகை சயானி குப்தா தீபாவளி குறித்து தன்னுடைய கருத்தாக “வெகு நாட்களுக்குப் பிறகு தீபாவளி பண்டிகையில் எனது அம்மாவைச் சந்திக்க இருக்கிறேன். இந்தத் தீபாவளியில் கண்டிப்பாகப் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாட மாட்டேன், யாரும் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடக் கூடாது எனவும் விரும்புகிறேன்” என்று தெரிவிப்பது போல் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்தக் காட்சி, இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் சிலரால் கருத்துகள் பகிரப்பட்டன.

பாஜகவைச் சேர்ந்த சிலர் இந்துக்களின் பண்டிகையை எப்படி கொண்டாட வேண்டும் என்று யாரும் எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம் எனக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்துக்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரங்களை தனிஷ்க் அழிக்க முற்படுவதாகவும்  குற்றம்சாட்டியுள்ளனர்.

பலர் இந்த விளம்பரத்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துள்ளனர். அந்த விளம்பரத்தில் நடித்த பெண்கள் யாரும் நெற்றியில் பொட்டுகூட வைக்கவில்லை என வலதுசாரிகள் வைத்த குற்றச்சாட்டைக் கடுமையாகச் சாடியுள்ளனர்.

விளம்பரங்களின் தர நிர்ணயம் செய்யும், இந்திய விளம்பர தரக் கவுன்சில் (Advertising standards council of India)  ஒரு விளம்பரம், சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் உட்பட பலவற்றை ஆய்வு செய்தே விளம்பரத்தை வெளியிடுவதற்கான ஒப்புதலை அளிக்கின்றன. ஆனால் கவுன்சிலின் ஒப்புதல் பெற்ற பிறகும், தனிஷ்க் நிறுவனத்தின் விளம்பரம் சமூக வலைதளங்களில் வலதுசாரிகள் கொடுத்த அழுத்தத்தால் இத்துடன் இரண்டாவது முறையாக நீக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்