Aran Sei

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் : மக்கள் போராட்டத்தின் எதிரொலி – கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைப்பு

ரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவிருந்த அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைப்படுகிறது என்று திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 330 ஏக்கர் பரப்பளவில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை 6100 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்வதற்காக சுற்றுசூழல் அனுமதி கோரி அதானி குழுமம் விண்ணப்பித்திருந்தது. மேலும், இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதன் மூலம் ஏற்படவிருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையையும் அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது.

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை – பூவுலகின் நண்பர்கள்

இதனைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்திற்கான மக்கள் கருத்து கேட்கும் கூட்டம் ஜனவரி மாதம் 22ஆம் தேதி  நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மக்களுக்கு திட்டத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்கு அதிக காலம் கொடுக்காததாலும், கொரோனா காலமாக இருப்பதாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவது ஆபத்தில் முடிந்துவிடும் என்றும் எல்லாவற்றிருக்கும் மேலாக சென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் இந்த காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

மக்கள் விரோத காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தைக் கைவிடவேண்டும் – அரசியல் தலைவர்கள் கண்டனம்

இந்நிலையில், நேற்று (ஜனவரி 19) இரவு இது தொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், ஜனவரி மாதம் 22ஆம் தேதி  நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கான மக்கள் கருத்து கேட்கும் கூட்டமானது நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “மிக அதிக அளவிலான பொதுமக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பொது மக்களை கோவிட்-19 தொற்று அபாயத்திலிருந்து பாதுகாப்பதன் பொருட்டு, மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எப்போது நடைபெறும் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.பொன்னையா அவர்கள் தெரிவிக்கிறார்.” என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்