Aran Sei

‘ஏமாற்றம், வெட்கக்கேடு, முற்றிலும் நியாயமற்றது’ – வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்றது குறித்து கங்கனா ரனாவத்

ன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறும் பிரதமர் மோடி தெரிவித்ததற்கு , சர்வாதிகாரம் மட்டுமே ஒரே தீர்வு  என திரைக்கலைஞர் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவி்ததார். “விவசாயிகளின் நலனுக்காகவே மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. ஆனால், விவசாயிகளின் ஒருபகுதியினர் இந்தச் சட்டத்தை எதிர்த்தனர். வேளாண் சட்டங்களின் நன்மைகளை விவசாயிகளிடம் விளக்கி எடுத்துச் செல்ல முயற்சித்தோம்.

ஜனநாயகத்தில் மக்களின் விருப்பங்களே மேலோங்கும் – மு.க.ஸ்டாலின்

போராடிய விவசாயிகளுடன் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தினோம். சில திருத்தங்களைக் கூட மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினோம். விவசாயிகள் நீதிமன்றம் சென்றனர். மூன்று வேளாண் சட்டங்களுக்காக போராடிய விவசாயிகளிடம் ஆதரவைப் பெற முடியவில்லை. இந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான நடவடிக்கைகள் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும். இதனால், விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு களப் பணிகளுக்குத் திரும்ப வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடியின் அறிவிப்பிற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மாநில முதலமைச்சர்கள் மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமாவளவன், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்றது குறித்து பாலிவுட் திரைக்கலைஞர் கங்கனா ரனாவத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘‘ ஏமாற்றம், வெட்கக்கேடு, முற்றிலும் நியாயமற்றது” எனக் கூறியுள்ளார்.

அவர் டேக் செய்திருந்த மற்றொருவரின் பதிவில் ‘‘ நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்லாமல், தெருக்களில் இருப்பவர்கள் சட்டங்களை இயற்ற ஆரம்பித்துவிட்டார்கள் என்றால், இதுவும் ஜிஹாதி தேசம்தான். இப்படி விரும்பிய அனைவருக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்து இருந்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது ஒரு பதிவையும் அவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படத்தைப் பகிர்ந்துள்ளார். “தேசத்தின் மனசாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, சர்வாதிகாரம் மட்டுமே ஒரே தீர்வு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடம்” என்று திரைக்கலைஞர் கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்