Aran Sei

‘நாங்க இருக்கோம் மாம்ஸ்; பயம் வேண்டாம்’ – பாஜகவினர் மிரட்டுவதாக குற்றஞ்சாட்டிய சித்தார்த்துக்கு சி.எஸ்.அமுதன், பார்வதி ஆதரவு

ன்னுடைய குடும்பத்திற்கு பாஜகவினரால் கொலை மிரட்டல் வருவதாக குற்றஞ்சாட்டியிருந்த நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவாக இயக்குனர் சி.எஸ்.அமுதனும், திரைக்கலைஞர் பார்வதியும் குரல் கொடுத்துள்ளனர்.

நடிகர் சித்தார்த் பல மாதங்களாகவே மத்திய பாஜக அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், சித்தார்த்தின் தொலைபேசி எண்ணைச் சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட நபர், “இது அவன் அலைபேசி எண், யாரும் கால் பண்ணி திட்டக்கூடாது ” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நடிகர் சித்தார்த் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்றைய தினம் பல சமூகவலைதள பதிவுகளில் பாஜகவினர் எனது எண்ணைப் குறிப்பிட்டு, என்னைத் தாக்குமாறும், திட்டுமாறும் பதிவிட்டுள்ளனர். மேலும், ‘இனி இவன் வாய திறக்கக்கூடாது’ என்றும் குறிப்பிட்டுள்ளனர். நாம் கொரோனாவிடம் இருந்துகூட தப்பித்துவிடக்கூடும். ஆனால், இது போன்ற மனிதர்களிடம் இருந்து தப்பிப்போமா?” என்று தெரிவித்திருந்தார்.

தீஷா ரவி கைது: ’டெல்லி காவல்துறையின் அசிங்கமான நடவடிக்கை’ – நடிகர் சித்தார்த் கடும் கண்டனம்

மேலும், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “பாஜகவின் இணையப் பிரிவு, தமிழக பாஜக உறுப்பினர்கள் எனது அலைப்பேசி எண்ணைப் பரப்பி வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் கொலை, கொள்ளை, பாலியல்வன்கொடுமை விடுத்து 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. எல்லா தொலைபேசி அழைப்புகளையும் பதிவு செய்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளேன். நான் ஓயமாட்டேன், தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவாக #IStandWithSiddharth என்ற ஹாஷ்டாக் ட்வீட்டரில் பரவி வருகிறது.

பாஜகவினரால் மிரட்டப்படுகிறேன் – நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டு

இந்நிலையில், இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாசிஸ்டுகளுக்கு எதிரான இப்போராட்டத்தில் பலரும் பல்வேறு பாத்திரங்களில் போராடி வருகிறார்கள். அவ்வகையில், இந்தப் போரில் சித்தார்த் ஒரு குறிப்பிடத் தகுந்த குரல். அவர் தன்னுடைய வாழ்க்கையை ஆபத்தில் நிறுத்தி வைத்துப் போராடிக்கொண்டிருக்கிறார். அவர் நம் எல்லாருடைய  ஆதரவிற்கும் தகுதியானவர். நாங்க இருக்கோம் மாம்ஸ். பயங்கொள்ள வேண்டாம். நல்ல காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.” என்று ஆதரவு அளித்துள்ளார்.

நடிகர் பார்வதி தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்களுடன் இருக்கிறோம் சித்தார்த். பின்வாங்க வேண்டாம். நம்முடைய (சித்தார்த்துக்கு ஆதரவாக இருப்பவர்கள்) ஒரு படையே உங்களுடன் துணை நிற்கிறது. உறுதியுடன் இருங்கள். உங்கள் குடும்பத்திற்கு பேரன்புகள்.” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவாக #IStandWithSiddharth என்ற ஹாஷ்டாக் ட்வீட்டரில் பரவி வருகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்