Aran Sei

அதிகரிக்கும் கொரோனா தொற்று: ‘கிரிக்கெட்டுக்கு அனுமதியில்லை, லட்சக்கணக்கானோர் கூடும் கும்பமேளாவுக்கும் அனுமதியா?’ – திக்விஜய் சிங் கேள்வி

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் கிரிக்கெட் போட்டியைக் காண ரசிகர்களுக்குத் தடை விதிக்கப்படும் அதேநேரம், கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் கூட அனுமதிக்கப்படுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திக்விஜய் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அண்மை நாட்களாக, இந்தியாவில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 6-வது நாளாக தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன் வழியாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து, சில மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

‘ஒரே நாளில் 25 ஆயிரம் புதிய கொரோனா தொற்றுகள்; குறையும் இறப்பு விகிதம்’ – அமைச்சகம் தகவல்

தொற்று தடுப்பு நடவடிக்கையாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கவுள்ள இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இருபது ஓவர் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், நேற்று (மார்ச் 15), பாஜகவை சேர்ந்த உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் ராவத் வெளியிட்ட அறிக்கையில், “உத்தரகாண்ட் கும்பமேளாவுக்கு பக்தர்கள் கலந்துக்கொள்ளாதீர்கள் என்று நான் தடுக்கமாட்டேன். ஆனால், கொரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். தங்களின் கொரோனா பரிசோதனை முடிவு நெகட்டிவாக இல்லாவிட்டால், விழாவில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது என பக்தர்கள் அஞ்சுகிறார்கள். உண்மையில், கொரோனா பரிசோதனை சான்றிதழ் ஏதும் கும்பமேளாவில் பங்கேற்பதற்கு தேவையில்லை.” என்று அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்க வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் மனு

இந்நிலையில், இந்த அறிவிப்பு தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் திக்விஜய் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “கொரோனா தொற்று பரவலின் அச்சத்தால் கிரிக்கெட் போட்டியைப் பார்த்து ரசிக்க வரும் ரசிகர்களுக்குப் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், லட்சக்கணக்காண மக்கள் குவியும் உத்தரகாண்ட் கும்பமேளா நிகழ்ச்சிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். நன்றி.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

Source : ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்