Aran Sei

உத்தரகாண்ட் கும்பமேளா : ‘ கொரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லாமல் வரும் பக்தர்கள் ’ – மாவட்ட ஆணையர்

த்தரகாண்ட் கும்பமேளாவுக்கு வருகை தரும் பல பக்தர்கள் தங்களது கொரோனா தொற்று சோதனை சான்றிதழைக் கொண்டு வருவதில்லை என்று உள்ளூர் ரயில் நிலையத்தில் கார்வால் மாவட்ட ஆணையர் ரவிநாத் ராமன் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அண்மை நாட்களில், இந்தியாவில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, சில மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

தொற்று தடுப்பு நடவடிக்கையாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கவுள்ள இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இருபது ஓவர் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஒரே நாளில் 25 ஆயிரம் புதிய கொரோனா தொற்றுகள்; குறையும் இறப்பு விகிதம்’ – அமைச்சகம் தகவல்

மறுபுறம், மார்ச் 15-ம் தேதி, ஹரித்வாரில் நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சி குறித்து பாஜகவை சேர்ந்த உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் ராவத் வெளியிட்ட அறிக்கையில், “உத்தரகாண்ட் கும்பமேளாவுக்கு பக்தர்கள் கலந்து கொள்ளாதீர்கள் என்று நான் தடுக்கமாட்டேன். தங்களின் கொரோனா பரிசோதனை முடிவு நெகட்டிவாக இல்லாவிட்டால், விழாவில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது என பக்தர்கள் அஞ்சுகிறார்கள். உண்மையில், கொரோனா பரிசோதனை சான்றிதழ் ஏதும் கும்பமேளாவில் பங்கேற்பதற்கு தேவையில்லை.” என்று அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, இது தொடர்பாக உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கும்பமேளா விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்களது கொரோனா தொற்று பரிசோதனைச் சான்றிதழை கொண்டு வருவதை உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் கட்டாயமாக்கியிருந்தது. மேலும், அச்சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

ஹரித்வார் நகராட்சி பகுதிகள் – இறைச்சிக் கூடங்கள் அற்ற பகுதிகளாக பாஜக அரசு அறிவிப்பு

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நேற்று (மார்ச் 31) தொடங்கிய கும்பமேளாவுக்கு தினமும் தோராயமாக 10,000 பக்தர்கள் வருவதாக இரயில் நிலைய கண்காணிப்பாளர் எம்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கர்வால் மாவட்ட கமிஷனர் கூறுகையில்,  “பக்தர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற சோதனை சான்றிதழை சமர்ப்பித்த பின்னரே கும்பமேளா விழா நடக்கும் பகுதிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். சோதனை சான்றிதழ் இல்லாமல் வருபவர்களை அந்த இடத்திலேயே வைத்து பரிசோதித்து, அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியான பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.” என்று கூறியுள்ளார்.

இரயில் நிலையத்தில் தங்கள் சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கும் பயணிகளுக்காக, காத்திருக்கும் பகுதியை விரிவுபடுத்தவும், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை அதிகரிக்கவும் கார்வால் மாவட்ட ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

அதிகரிக்கும் கொரோனா தொற்று: ‘கிரிக்கெட்டுக்கு அனுமதியில்லை, லட்சக்கணக்கானோர் கூடும் கும்பமேளாவுக்கும் அனுமதியா?’ – திக்விஜய் சிங் கேள்வி

முன்னதாக,  காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திக்விஜய் சிங், “கொரோனா தொற்று பரவலின் அச்சத்தால் கிரிக்கெட் போட்டியைப் பார்த்து ரசிக்க வரும் ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், லட்சக்கணக்காண மக்கள் குவியும் உத்தரகாண்ட் கும்பமேளா நிகழ்ச்சிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். நன்றி.” என்று விமர்சித்திருந்தார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்