Aran Sei

தேவேந்திர குல வேளாளர் : சாதி திரட்சிக்கு வழிவகுக்கும் – ஜெ.பாலசுப்ரமணியம்

தேவேந்திரகுல வேளாளர் என்று அழைத்திட மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியத்தைத் தொடர்ந்து, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி விடுத்துள்ள அறிக்கையில் தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் என்பது ஒரு மைல்கல்; ஆனால் பட்டியல் வெளியேற்றமே எங்கள் இலக்கு என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் பட்டியலினப் பிரிவிலுள்ள 7 உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பொதுப் பெயரில் அழைத்திடவும், பட்டியல் பிரிவிலிருந்து விலக்கிடவும் வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சியினர், கடந்த 30 ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். மாநாடுகள், பேரணிகள், உண்ணாவிரதங்கள், கூட்டங்கள் என்று போராட்டங்கள் வலுப்பெற்றன.

பட்டியல் வெளியேற்றம் குறித்து  மத்திய மாநில அரசுகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையின் விளைவாக ’குடும்பர், பண்ணாடி, பள்ளர், கடையர், காலாடி, தேவேந்திரகுலத்தார், வாதிரியார் ஆகிய 7 உட்பிரிவுகளையும் உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என்று அழைத்திட மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார் .

இது குறித்து அறிக்கை வெளியிட்ட மருத்துவர் கிருஷ்ணசாமி “பெயர் மாற்றம் முக்கியம் என்றாலும், பட்டியல் மாற்றம் இல்லாத பெயர் மாற்றம் தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு முழு பலனைத் தராது.” என்று கூறியுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் “அரசின் முயற்சி  முழு நிலவாக இருக்க வேண்டும், மூன்றாம் பிறையாக இருந்துவிடக்கூடாது ” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக் குறித்து விழுப்புரம் மக்களவை உறுப்பினர் முனைவர் ரவிக்குமார் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” ஏழு சாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரில் அழைப்பதற்கு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும் போது, எஸ்சி பட்டியலில் மீதமுள்ள 60 சாதிகளையும் தற்போதுள்ள ஆதிதிராவிடர் என்ற பொதுப்பெயரில் அழைப்பதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து எழுத்தாளர் ஜெ. பாலசுப்ரமணியம்  அரண்செய் யிடம் கருத்து  தெரிவித்தார் ” மருத்துவர் கிருஷ்ணசாமி எஸ்.சி பட்டியலில் இருப்பதால் இழிவு என்று கூறி, பட்டியல் வெளியேற்றம் கேட்கிறார். இதன் மூலம் பட்டியலில் இருக்கும்  சாதிகள் இழிவானவர் என்று சொல்லவருகிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ” நிகழ்காலத்தில் ஒரு புனைவைச் சொல்வதன் வழியாக கடந்த கால வரலாற்றை மறைக்க முயற்சி செய்வது அப்பட்டமான சாதி பெருமை பேசத்தான் வழிவகுக்கும்” என்றார்.

ரவிக்குமாரின் பதிவுக்கு பதிலளித்த அவர் ”  ஆதிதிராவிடன் என்பது வரலாற்று ரீதியாக இந்து சனாதனத்திற்கு எதிரானது. ஆதி திராவிடன் என்பது புராணங்களில் இருந்து உருவானது இல்லை அது வரலாற்றுப் பூர்வமானது. ஆதி திராவிடர் அடையாளம், பறையர்களின் சாதி அணித்திரட்சிக்கு வழிவகுக்கும் என்று சொல்வது நியமற்றது. ஒரே கூருள்ள சாதியை ஒன்றிணைப்பபதுதான் சாதியம். பல சாதிகளை ஒன்றிணைத்து ஒரு தொகுப்பாக்குவது சாதி ஒழிப்பின் தொடக்கமாகப் பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கைகள் குறித்து  அரண்செய்-யிடம் பேசிய தேவேந்திர சமூக பாதுகாப்பு  கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் முருகன் கண்ணா ” ஏழு சாதிகளை ஒன்றிணைத்து ஒரே பெயரின் கீழ் கொண்டுவருவது சாதி ஒழிப்பு அரசியலின் ஒரு அங்கமாகப் பார்க்க முடியும். ஆனால், மருத்துவர் கிருஷ்ணசாமியின் நோக்கம்  தனித்தனியாக இருக்கும் சாதியை ஒன்றிணைத்து ஒரே சாதியாக மாற்றி, சாதிய அணி திரட்சிக்குதான் வழிவகுக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும், ரவிக்குமாரின் பதிவுக்கு பதிலளித்த அவர் ” கோட்பாடு ரீதியாக ஆதி திராவிடராய் ஒன்றிணைவோம் என்பது சனாதானத்திற்கு எதிரானதுதான். ஆனால், நடைமுறையில் பறையர்களின் அணி திரட்சிக்கு வழிவகுக்கிறதோ என்றும் சமூகத்தில் பார்க்கப் படுகிறது. மேலும், இதைத் தேர்தலுக்கான உத்தியாகவும் இதைப் பார்க்கலாம்” என்று முருகன் கண்ணா தெரிவித்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்