”97 விழுக்காடு மதிப்பெண் பெற்றும், என் மகனுக்கு கர்நாடகாவில் மருத்துவ இடம் கிடைக்கவில்லை. மருத்துவ சீட் பெற கோடிக்கணக்கில் பணம் தேவைப்பட்டது” என உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீனின் தந்தை கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்களில் 90 விழுக்காட்டினர் இந்தியாவில் தகுதித் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் என ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்திருந்தார்.
இந்திய மாணவர்கள் ஏன் அதிகளவில் உக்ரைன் செல்கிறார்கள் என்ற விவாதத்தின் தொடர்ச்சியாக அமைச்சர், இவ்வாறு தெரிவித்திருந்தார்.
உக்ரைனில் இந்திய மருத்துவ மாணவர் மரணம் – கர்நாடகாவில் நீட் தேர்வுக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு
அமைச்சரின் கருத்து பதிலளித்துள்ள உயிரிழந்த மாணவர் நவீன் தந்தை சேகரப்பா ஞானகவுடா, “நவீன் அவரது பள்ளித் தேர்வில் 97 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருந்தார். இருந்தும் அவரால், கர்நாடகாவில் மருத்துவ சீட் பெற முடியவில்லை. அதனால் தான் அவர் உக்ரைன் செல்லும் நிலை ஏற்பட்டது. இந்தியாவை ஒப்பிடும்போது வெளிநாடுகளில் குறைந்த செலவில் மருத்துவம் படிக்க முடிகிறது. இந்தியாவில் மருத்துவ சீட் பெற நன்கொடையாக மட்டுமே கோடிகளில் பணம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நவீனின் தாயார் விஜயலட்சுமி கூறுகையில், “நம் நாட்டில் திறமையானவன் ஏழை குடும்பத்தில் பிறக்க கூடாது. இங்குத் திறமைக்கு மதிப்பில்லை… இங்கே மருத்துவம் படிக்க, கோடிக்கணக்கில் நன்கொடை கேட்கிறார்கள். ஆனால், உக்ரைனில் 50 முதல் 60 லட்சம்வரை தான் செலவாகிறது. அந்த நம்பிக்கையில் நான் அவனை உக்ரைனிற்கு அனுப்பினோம். நவீனிற்கு திறமை இருக்கிறது அதனால் தான் அவனை உக்ரைன் அனுப்பினோம் இல்லையென்றால், நாங்கள் ஏன் அவனை உக்ரைன் அனுப்ப போகிறோம்” என கூறியுள்ளார்.
நவீனின் உறவினர் கூறுகையில், “நவீனின் குடும்பத்தில் நிதி நெருக்கடிகள் இருப்பதால், இந்தியாவை விட உக்ரைன் அவர்களுக்கு ஏதுவாக இருந்தது. மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சீட் வாங்க நாங்கள் விரும்பவில்லை. இதனால், நவீனை உக்ரைனுக்கு அனுப்ப குடும்ப உறுப்பினர்கள் பணம் சேர்த்தோம். இது தான், நவீன் மருத்துவ கனவை நினைவாக்க எங்களுக்குத் தோன்றிய ஒரே வழி” என குறிப்பிட்டுள்ளார்.
Source : Hindu Tamil
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.