கடந்த ஆண்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான போராட்டத்தில் பங்கேற்று, தற்போது ‘தலைமறைவாக’ இருப்பதாகக் கூறப்படும் 12 பேரின் படங்களுடன் கூடிய சுவரொட்டிகள், லக்னோவில் மீண்டும் ஒட்டப்படுவதாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது,
முன்னதாகச் சில போராட்டக்காரர்கள், பொது சொத்துக்குச் சேதம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டிய உள்ளூர் நிர்வாகம், அவர்களின் புகைப்படங்களைப் பதாகைகளாக வைத்தது. இது ஒரு பெரிய சர்ச்சைக்கு வழிவகுத்தது. தற்போது, அவர்களின் படங்களுடன் கூடிய சுவரொட்டிகள் மீண்டும் ஒட்டப்படுகின்றன.
இவ்வாண்டின் தொடக்கத்தில், அலகாபாத் உயர் நீதிமன்றம், ‘அவமானப்படுத்தும் வகையிலான’ இந்தப் பதாகைகளை அகற்ற லக்னோ நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால், இதை எதிர்த்து உத்தரப்பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்களின், தனிப்பட்ட விவரங்களை வெளிப்படுத்துவதால், அவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து உள்ளது என்று மனித உரிமை ஆர்வலர்களும் தெரிவித்தனர்.
மாநில நிர்வாகத்தின் நடவடிக்கை, அரசியலமைப்பின் 14 வது பிரிவை மீறியதாகவும், அது “மக்களின் தனியுரிமையில் தேவையற்ற தலையீடு” என்றும் நீதிபதிகள் கூறினர்.
இந்நிலையில், புதிய சுவரொட்டிகளில், போராட்டக்காரர்கள் பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.5,000 பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச தலைநகரில் உள்ள பொது இடங்களில் புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகக் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார் என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு சுவரொட்டி, குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தலைமறைவாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட எட்டுப் பேரின் படங்கள் மற்றும் முகவரிகளைக் கொண்டுள்ளது. “மற்றொன்றில், தப்பியோடியவர்களின் படங்கள் உள்ளன. ஆனால், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை” என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
“இவர்கள் அனைவரும் டிசம்பர் 19 அன்று லக்னோவில் சிஏஏ-க்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு ‘வன்முறையைத் தூண்டினர்’. அதில், ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் பொது சொத்துகள் சேதமடைந்தன,” என்று அந்தக் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.