Aran Sei

ஜார்ஜ் பிளாய்ட் கொலை – போலீஸ் அதிகாரி குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட அதே நாளில் கருப்பின சிறுமி போலீசால் சுட்டுக் கொலை

Image credit : theguardian.com

மெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகரில், கருப்பினத்தைச் சேர்ந்த 46 வயதான ஜார்ஜ் பிளாய்ட் போலீஸ் அதிகாரிகளால் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்ற மாதம் 29-ம் தேதி தொடங்கிய இந்த வழக்கு விசாரணையின் முடிவில், 12 பேர் கொண்ட தீர்ப்பு குழுவினர், போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என ஒருமனதாக முடிவு செய்திருப்பதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

டெரிக் சாவின்-க்கு 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்றும், தண்டனை தொடர்பான தீர்ப்பு 8 வாரங்களுக்குள் வெளியாகும் என்றும் தி ஹிந்து தெரிவிக்கிறது.

மேலும், ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு உதவி செய்து, தூண்டி விட்டதாக மூன்று போலீஸ் அதிகாரிகள் மீதான வழக்கு விசாரணை இந்த ஆண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ளது.

சென்ற ஆண்டு மே 25-ம் தேதி, ஒரு கடையில் $10 கள்ள நோட்டை கொடுத்ததாக போலீஸ் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு, கைவிலங்கு மாட்டப்பட்ட, கருப்பினத்தவரான 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்டின் கழுத்தில், டெரிக் சாவின், தனது முட்டியை அழுத்தி மூச்சுத் திணற வைக்கும் வீடியோ உலகெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

” கருப்பின உயிர்கள் முக்கியமானவை ” – ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் நீதிமன்ற விசாரணை ஆரம்பம்

இனவெறிக்கு எதிரான “கருப்பின உயிர்கள் முக்கியமானவை” என்ற இயக்கத்தை அது தூண்டியது.

44 வயதான டெரிக் சாவின் மீது கொலை, இறப்பை ஏற்படுத்தவது ஆகிய பிரிவுகளின் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடத்தப்பட்டது.

தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன், நீதிமன்றத்தில் கூடியிருந்த பெருந்திரளான மக்கள் “மூன்று குற்றச்சாட்டுகளிலும்”, “யாருடைய வெற்றி? நமது வெற்றி” என்று முழக்கமிட்டதாக தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

நீதிமன்றத்தில் ஜார்ஜ் பிளாய்டின் சகோதரர் ஃபிலினோய்ஸ், தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பு பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததாகவும், தீர்ப்பு அறிவிக்கப்படும் போது அவரது உடல் வெளிப்படையாக நடுங்கியதை பார்க்க முடிந்தது என்றும் தி கார்டியன் கூறுகிறது.

Image credit : theguardian.com
ஜார்ஜ் பிளாய்டின் சகோதரர் ஃபிலினோய்ஸ் – Image credit : theguardian.com

“அவரை குற்றவாளி என்று முடிவு செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கராக எங்களுக்கு ஒரு போதும் நீதி கிடைப்பதில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

“கருப்பின அமெரிக்காவுக்கான நீதி அனைவருக்குமான நீதி. போலீசின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பு சுமத்துவதில் இந்த வழக்கு அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனை. நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தத் தீர்ப்பு கூறும் செய்தி தெளிவாக கேட்கப்படும் என்று நம்புகிறோம்” என்று பிளாய்ட் குடும்ப வழக்கறிஞர் பெஞ்சமின் கிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், நாட்டின் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோர் பிளாய்ட் குடும்ப உறுப்பினர்களுடன் பேசியுள்ளதாக தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

டெரிக் சாவின் ஜார்ஜ் பிளாய்டைக் கொன்ற தெருவில், எழுப்பப்பட்டுள்ள ஒரு தற்காலிக நினைவுச் சின்னமான ஜார்ஜ் பிளாய்ட் சதுக்கத்தில் மிலீஷா ஸ்மித் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

“இது ஒரு தொடக்கம் மட்டுமே. அவரது இறப்பு வீணாகி போய் விடவில்லை. நாங்கள் எதற்காக போராடி வந்தோமோ அது நடந்திருக்கிறது. நாங்கள் போராடியது சரிதான் என்று இப்போது சொல்கிறீர்கள்” என்று அவர் கூறியுள்ளதாக தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

இதற்கிடையே, இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த, ஒஹையோ மாநிலத்தில் 15 வயதான சிறுமியை போலீஸ் சுட்டுக் கொன்ற சம்பவம், அந்த இடத்தில் திரண்டிருந்த போராட்டக்காரர்கள் மத்தியில் ஆத்திரத்தையும், கையாலாகாத்தன உணர்வையும் ஏற்படுத்தியதாக தி கார்டியன் கூறுகிறது.

“நாங்கள் எதையும் கொண்டாட முடியாது. கடைசியில் பார்க்கும் போது நாங்கள் கருப்பாக இருக்கக் கூடாது” என்று கேசி டய்னர் என்ற போராட்டக்காரர் கூறியதாக கொலம்பஸ் டிஸ்பாட்ச் பத்திரிகை தெரிவிக்கிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்