Aran Sei

சிங்கு எல்லையில் விவசாயிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – ஹிந்து சேனா அமைப்பு பின்னணியில் இருந்ததாக தகவல்

னவரி 28 ஆம் தேதி,  சிங்கு எல்லையில் உள்ளூர்வாசிகள் கூடி  விவசாயிகளுக்கு எதிராக மேற்கொண்ட ஆர்பாட்டத்தின் பின்னணியில் ஹிந்து சேனா என்ற அமைப்பு இருந்ததாக ஊடகங்களின்  அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சிங்கு எல்லையில் பகுதியில் உள்ளூர்வாசிகள் கூடி, விவசாயிகளுக்கு எதிராக முழக்கமிட்டும், விவசாயிகளை இடத்தைக் காலி செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக, ஜனவரி 28 ஆம் தேதி என்டிடிவி  தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற கோரி கடந்த மூன்று மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டதின் ஒரு பகுதியாக ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இதைச் எதிர்த்துச் சிங்கு எல்லை பகுதியில், அந்தப் பகுதியின்  உள்ளூர் வாசிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

உள்ளூர்வாசிகள் என்று சொல்லப்படும் மக்கள், சிங்கு எல்லையில் கூடி அந்த இடத்தைக் காலி செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டது.

இதே போன்ற செய்தி அறிக்கைகளை, தி ஹிந்து, டைம்ஸ் நவ், ஹிந்துஸ்தான் டைம்ஸ், சிஎன்என், இந்தியா டுடே, டைம்ஸ் ஆப் இந்தியா, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் டிவி9தெலுங்கு, ஹிந்துஸ்தான் ஆகிய ஊடகங்கள் வெளியிட்டு இருந்தன.

போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் விவசாயிகளை, அந்தப் பகுதியிலிருந்து அகற்ற வேண்டும் எனச் சிங்கு எல்லையில் உள்ளுர்வாசிகள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகச் சொல்லப்படுவதில் முழுவதும் உண்மையில்லை.

போராட்டம்  ‘உள்ளுர்வாசிகளால்’ ஏற்பாடு செய்யப்படவில்லை. ஹிந்து சேனா அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ”டெல்லி : சிங்கு எல்லையில், விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக இந்து சேனா  அமைப்பினர் மற்றும் உள்ளூர்வாசிகள் ஊர்வலம் நடத்தினர்” என ஆஜ் தக் ட்வீட் செய்திருந்ததை, ஹிந்து சேனா அமைப்பின் நிறுவனரும், தலைவருமான விஷ்ணு குப்தா மறு ட்வீட் செய்திருந்தார்.

இதுபற்றித் தனது  ட்விட்டரில் பதிவிட்டிருந்த விஷ்ணு குப்தா ”இன்று (28.01.21), ஹிந்து சேனா ஆர்வலர்கள், உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து காலிஸ்தான் ஆதரவு விவசாயிகளுக்கு எதிராக முழக்கமிட்டு இடத்தைக் காலி செய்யுமாறு கூறினர்” என்றார்.

அரசாங்கத்துடன் பேசிப் பிரச்னைகளைத் தீர்த்துக்கொண்டு, அடுத்த 24 மணிநேரத்தில் சிங்கு எல்லையைக் காலி செய்யுமாறு காலிஸ்தான் சார்புப் போராட்டக்காரர்களை ஹிந்து சேனா அமைப்பினர் எச்சரித்தனர்” எனக் கூறியிருந்தார்.

விவசாய போராட்டங்களில் இருக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தியதாகக் கூறும் விஷ்ணு குப்தாவை ஆல்ட் நியூஸ் தொடர்புகொண்டு கேட்டபோது ”ஹிந்து சேனா அமைப்பினர் விவசாயிகளுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்க நினைத்தோம், ஆனால், சாலையில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்திருந்ததால், எங்களால் விவசாயிகளுடன் பேச முடியவில்லை”. உள்ளூர் மக்களைக் இணைத்துக்கொண்டு மேற்கண்ட ஆர்ப்பாட்டம், ஹிந்து சேனா அமைப்பினரால் நடத்தப்பட்டது. “இது போன்ற நேரங்களில் உதவி செய்ய நாங்கள் உள்ளூர் குழுக்களை வைத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

ஹிந்து சேனா என்ற பிரிவினைவாத அமைப்பு இதற்கு முன்பு  காதலர் தினத்தன்று காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஜோடிகளை மிரட்டியது, சாகீன் பாக் போராட்டக்காரர்களை மிரட்டியது,  இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்திற்கு எதிராகப் போஸ்டர்கள் ஒட்டியது போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்ட செய்திகள் வந்தது நினைவுகூரத்தக்கது.

ஒரு தீவிர வலது சாரி அமைப்பு நடத்திய போராட்டம்குறித்து ஊடகங்கள் தவறாகச் செய்தி வெளியிட்டு விட்டன. விவசாயிகளுக்கு எதிராகச் சிங்கு எல்லையில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது, ஹிந்து சேனா அமைப்பினர் என்பதை ஊடகங்கள் குறிப்பிட தவறிவிட்டன.

ஆல்ட் நியூஸ் இணையதளத்தில் வெளியான செய்தியின் தமிழாக்கம்.

மொழியாக்கம்: நந்தகுமார் ஜகன்நாதன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்