Aran Sei

‘ஜனநாயகத்தின் முடிவுகாலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது’ – ‘சாம்னா’ ஏட்டின் தலையங்கம்

நமது பிரதமர் மோடியும் துக்கத்தில் இருக்கிறார், அதை வெளிப்படுத்தி இருக்கிறார். சில சமயங்களில் மோடி உணர்ச்சிவசப் பட்டு கண்ணிமைகளை கண்ணீரால் துடைத்தபடி இருப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம்.  சில சமயங்களில் பேசிக் கொண்டிருக்கும் போதே விசும்புவதையும் கேமரா படம் பிடித்திருக்கிறது. அவ்வகையில். மனித உடலில் அனைத்து உணர்வுகளும் பிரதம மந்திரிக்கு இருக்கிறது. மோடி அவர்கள் ’மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியை செய்து வருகிறார். அந்த வகையில், அவருக்கு மனதும் இருக்கிறது என்பது உறுதியாகிறது. மோடி தற்போது அவரது புதிய துக்கத்தை மக்கள் முன்வைத்திருக்கிறார். ”தில்லியில் சிலர், என்னை தொடர்ந்து கேலி செய்கிறார்கள், என்னை அவமானப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு ஜனநாயகத்தை கற்பிக்க விரும்புகிறேன்“ என்று பிரதமர் மோடி கூறுவது அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. நம்முடைய பிரதமரை யார் அவமதிப்பது?  பிரதமரை அவமானப்படுத்தும் அளவுக்கு வலுவான எதிர்கட்சியை, ஆளுங்கட்சியினர் விட்டு வைத்திருக்கிறார்களா?

காங்கிரஸின் தற்போதையை தலைமையை பொருட்டாகவே கருதவில்லை என்று பாஜக முன்னணி தலைவர்கள் ஒருபுறம் பேசிக் கொண்டே மறுபக்கம் ராகுல் காந்தி எங்களை அவமானப்படுத்தி விட்டார் என்பது கேலிக்குரிய நகைச்சுவையாக இருக்கிறது.

ஆக்கப்பூர்வமன விமர்சனம் செய்வது, அரசாங்கத்தின் பொய்களை அம்பலப்படுத்துவது ஆகியவற்றை ஜனநாயகத்திற்கு அவமானம் என்று சொன்னால், ஜனநாயகத்தின் முடிவு காலம் நெருங்கி கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். விவசாயிகளின் கோபம் வெடித்து மேலே வந்திருக்கிறது. லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லியின் எல்லையில் ஒரு மாதமாக குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர்.  விவசாயிகளின் இந்த கோபாவேசம் ஜனநாயகத்தின் குரல் கிடையாதா? இந்த கேள்விகளுக்கு முதலில் பதில் கூறுங்கள்.

ராகுல் காந்தி என்ன சொன்னாரென்று பாருங்கள். ராகுல் காந்தியின் பேச்சு மோடிக்கு உறுத்தியிருக்கிறது. ராகுல் சொல்கிறார் “ நாட்டில் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பேசுகிற அனைவரும் தேசவிரோதிகளாக முத்திரை குத்தப்படுகிறார்கள்.  தில்லியின் வாசலில் முற்றுகையிட்டிருக்கும் போராடும் விவசாயிகள் பற்றி பிரதமருக்கு கவலையில்லை. அவர்கள் குறித்து பாராமுகமாக இருக்கிறார். இரண்டு-மூன்று முதலாளிகளுக்கு மோடி நாட்டை நடத்தி வருகிறார்” என்று ராகுல் காந்தி குற்றஞ்சுமத்தியதும், மோடிக்கு வேதனையாகி விட்டதாம். ராகுல் காந்தி ”என்னை கேலி செய்கிறார், என்னை அவவமானப் படுத்துகிறார்” என்பது அவரது குற்றச்சாட்டு. அது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், ராகுல் காந்தி சொல்வதில் உண்மையேயில்லை என்று மோடி சொல்ல வருகிறாரா?

தில்லியின் கிண்டல் பேர்வழிகளுக்கு மக்களாட்சியை கற்றுத் தர வேண்டும் என்று கூறி, காஷ்மீரை மேற்கோள் காட்ட விரும்புவதாக மோடி குறிப்பிடுகிறார். காஷ்மீரில் நடந்த மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலின் முடிவுகள் வெளியாகிவுள்ளதை ஜனநாயகத்தின் வெளிப்பாடு என்று மோடி குறிப்பிடுகிறார். ஆனால், போராடுகிற விவசாயிகளை தேச விரோதிகளென சித்தரித்து, அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்த மோடி அரசு விரும்பவில்லை. கொரோனா நெருக்கடி, கடுங்குளிர் ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல், இளைஞர்கள், முதியோர்கள், பெண்கள் என அனைத்து தரப்பும் வாக்குச்சாவடிக்கு வந்ததை, ஜனநாயத்தை வலுப்படுத்த வந்தவர்கள் என்று விதந்தோதி நன்றி கூறுகிறார் மோடி. மறுபுறம், குளிரில் நடுங்கியபடி தில்லியின் எல்லையில் கூடியிருக்கும் விவசாயிகளை, ஜனநாயக சுதந்திரத்தின் கொலைகாரர்கள் என்று, அவர்கள் மீது மோடி  அரசாங்கம் சேற்றை வாரி இறைத்துள்ளது. அரசாங்கத்திற்கு விரோதமாக யாரேனும் பேசுவார்கள் என்பதற்காக அவர்களது குரல்வளையை நெறிப்பது அல்லது அவர்களுடனான பேச்சு வார்த்தையை முறிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் ஜனநாயகமாகாது.

பிரதமர் மோடி அவர்கள் இந்த நாட்டின் ஜனநாயகத்தை காக்க வேண்டிய கடமையுள்ளவர். அவருடைய மொழியில் சொல்வதானால் முதன்மை சேவகர் அல்லது சௌக்கிதார். அரசாங்கமானது விவசாயிகளுக்கு அநேக திட்டங்களை கொண்டு வந்தது, அவை நல்ல திட்டங்களும் கூட. விவசாயிகளின் வங்கி கணக்கில் 18000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், தில்லியின் எல்லையில் உள்ள விவசாயிகள் வெளிப்படுத்துகிற கவலை வேறுபட்டது.

உண்மையை சொல்ல வேண்டுமானால், நம்முடைய பிரதமருக்கு விவசாயிகளின்  காயமும், அதற்கான மருந்தும் என்னவென்று தெரியும். ஆனால், மோடியின் பாணி வயிற்று வலிக்கு காலில் ப்ளாஸ்டர் போடுவதாக இருக்கிறது.

அரசாங்கம்  அல்லது அரசன் எது செய்தாலும் அது சரி என்ற கண்ணோட்டத்தோடு தற்போதைய அரசாங்கம் இருக்கிறது. தற்போதைய ஆட்சியில் மக்கள் ஆட்டு மந்தையாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். மந்தையில் , ‘மேய்ப்பன் நல்ல ஏற்பாட்டை செய்திருக்கிறான்’ என்று பரஸ்பரம்  ஆடுகள் சொல்லிக் கொள்கின்றன. இப்படியான ஏற்பாடு என்பதுதான் ஆனந்தம், மகிழ்ச்சி என்று ஏற்றுக் கொள்வதற்கில்லை.

அரசாங்கத்திற்கு மந்தைகளை ஒழுங்குப்படுத்துவதும், அந்த ஏற்பாட்டால் மந்தைகளால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் போது பிறர் ஏன் மந்தையில் இணைந்து கொள்ளகூடாது என்பதுதான் அவர்கள் நம் முன் வைக்கும் கேள்வி. புலி, ஓநாய் , யானை, சிங்கம் என அனைத்தும் ஆடுகளை போலவே கத்த வேண்டும், இதில் யாரேனும் தவறி கர்ஜித்தால் அது அவமானம் என்று சொல்வது ஜனநாயகம் இல்லை.  இதை மக்களாட்சி என ஒத்துக் கொள்ள நிர்பந்திப்பவர்களுக்கு ஜனநாயகத்தை கற்பிக்க வேண்டியது தேவையாகிறது.

எதிர்கட்சியினர் சீன அத்துமீறலை குறித்து கேள்வி எழுப்பினால், உடனே ஆள்பவர்களுக்கு கேலியாகவும், கிண்டலாகவும் படுகிறது. பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை யார் எதற்கு கிண்டல் செய்யப் போகிறார்கள். அவர்களிடம்தான் பெரும்பான்மை இருக்கிறதே? அவர்களுக்கு ஆட்சி பெரும்பான்மை பலத்தோடு நடக்கிறது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என எல்லா துறைகளும் அவர்களுடைய பெரும்பான்மையை காக்கும் வாட்ச்மேன்களாக இருக்கும்வரை, அவர்களுக்கு கவலைப்பட என்ன இருக்கிறது. அதனால் கிண்டல், கேலி குறித்தெல்லாம் ஏன் கவலைப்படுகிறார்கள்?

மோடி உலகளவில் பெரிய தலைவர். ஆகையால், ராகுல்காந்தியின் கிண்டலால் வருத்தப்படும் அளவுக்கு தேவையில்லை. ராகுல் காந்தி கடந்த ஆறு ஆண்டுகளில் இவர்களை செய்த விமர்சனங்களை தொகுத்தால் பெரிய நூலே உருவாகிவிடும்.

ராகுல்காந்தியை ’பப்பு’ கேலி செய்கிறவர்கள், பிறரின் கிண்டலுக்கு ஏன் அஞ்ச வேண்டும். மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தொடர்பாக பிரயோகப்படுத்தப்படும் வார்த்தைகளை என்னவென்று சொல்வது? சரத் பவார் போன்ற தலைவர்களையே அவ்வப்போது கிண்டல் செய்வது தொடரத்தான் செய்கிறது.

அரசியலில் இரண்டை கொடுத்தால், இரண்டை பெறத்தான் வேண்டும். பாஜகவின் பலம் அதிகமாக இருப்பதால் நீங்கள் நான்காக கொடுக்கத்தான் வேண்டும். அதேபோல, எப்பொழுதேனும் இரண்டை வாங்கி கொள்ளத்தான் வேண்டும். ஆகவே, ஆள்பவர்கள் இதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். மோடி அரசாங்கத்தில் நல்வாய்ப்பு என்னவென்றால், இன்றைக்கு எதிர்முகாமில் மது லிம்யே, மது தண்ட்வதே, லோகியா, ஜனேஷ்வர் மிஸ்ரா இல்லை. சந்திரசேகர் மட்டுமல்ல லாலு யாத், எச்சூரிகூட இல்லை.  இல்லையெனில், அவர்களின் உள்ளும், புறமும் வெளிவந்திருக்கும். ஆட்சி கிடைத்திருக்கிறது என்றால் ஒழுங்காக நடத்த வேண்டும். ஆட்சி நடத்துவது எளிதில்லை.

(சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான ‘சாம்னா’-வில் வெளியாகியுள்ள தலையங்கத்தின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்