காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் இஷ்ரத் ஜஹான், டெல்லி கலவரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்டார். மண்டோலி சிறையில் அவரது அறையில் உள்ள கைதிகள் அவரை அடித்து துன்புறுத்துவதாக அவரது கணவர் ஃபர்ஹான் ஹாஷ்மி மற்றும் சகோதரி சர்வர் ஜஹான் தி குவிண்ட் இணையதளத்திடம் தெரிவித்துள்ளனர்.
“இது இரண்டாவது முறையாக நடக்கிறது. அவர் அணிந்திருந்த ஆடையை கிழித்து, அவரது தலையை பல முறை சுவற்றில் மோதியுள்ளனர். அவர் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறார், அச்சுறுத்தப்படுகிறார். உயிரை பறித்துவிடுவதாக அச்சுறுத்தி இஷ்ரத்தை பல வேலைகள் செய்ய சொல்கிறார்கள். அப்போது தான் உயிரோடு வாழ விடுவோம் என்று அவர்கள் பயமுறுத்தியுள்ளனர். இஷ்ரத் தினமும் ஒரு லிட்டர் பால் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள்” என ஃபர்ஹான் கூறியுள்ளார்.
நவம்பர் 20 அன்று கடைசியாக இது நடந்துள்ளது என்று இஷ்ரத்தின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். “இஷ்ரத் நன்றாக இல்லை. அவர் பாதுகாப்பாக இல்லை” என்று பதட்டத்துடன் ஃபர்ஹான் கூறியுள்ளார்.
டிசம்பர் 22 ஆம் தேதி, டெல்லி நீதிமன்றத்தில் இஷ்ரத்தின் வழக்கறிஞர் பிரதீப் தியோடியா, அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “டிசம்பர் 22 ஆம் தேதி காலையில், மனுதாரர் (இஷ்ரத்) சக கைதிகளால் மோசமாக தாக்கப்பட்டுள்ளார். அப்போது அவர் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது மற்றும் அவரது ஆடைகளும் கிழிந்தன” என்று கூறப்பட்டுள்ளது. இஷ்ரத்தின் ஆபத்தில் உள்ளார் என்றும் அவரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
கடைசியாக இஷ்ரத் தாக்கப்பட்டபோது, கைதிகளில் ஒருவர் மற்றொரு சிறைக்கு மாற்றப்பட்டார் என்றும் பிரதீப் தியோடியா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நிலைமை அறிக்கை கோரப்பட்டுள்ளது
விசாரணையில், இஷ்ரத்தின் சகோதரி சர்வர் கலந்து கொண்டுள்ளார். கர்கர்டூமா நீதிமன்றத்தைச் சேர்ந்த கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத், இந்த வழக்கை விசாரித்து பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக சர்வர் கூறியுள்ளார்.
“நீதிபதி இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சிறை கண்காணிப்பாளரிடமிருந்து நிலை அறிக்கை கோரியுள்ளார், அப்போது இஷ்ரத்தும் ஆஜராகவுள்ளார். அவர் அதை பெறுவதில் உறுதியாக உள்ளார். ‘அவரது வார்டு மாற்றப்பட்டுள்ளது’ போன்ற சாதாரண பதிலை கொடுக்க வேண்டாம் என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். பெண்களுக்கு (இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு) என்ன தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிய விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று இரவு இஷ்ரத்தின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்” என சர்வர் கூறியதாக தி குவிண்ட் தெரிவித்துள்ளார்.
இஷ்ரத்தின் பாதுகாப்பை குறித்து குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இன்று விசாரணையின்போது இஷ்ரத் அழுதுகொண்டே இருந்தார். “அவளுடைய குரலில் பயத்தை என்னால் உணர முடிகிறது” என்று அமிதாப் ராவத் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணையில் மண்டோலி சிறைச்சாலையின் கூடுதல் கண்காணிப்பாளர் ஆஜராகியுள்ளார். இந்த சம்பவம் நடந்ததை ஒப்புக்கொண்ட அவர், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.