Aran Sei

டெல்லி கலவரம் – பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் கதைகள்

டெல்லி கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு கொடுக்கப்படும் நிவாரணம் தனக்கு கொடுக்கப்படும் எனும் நம்பிக்கையையே முற்றிலும் இழந்து விட்டார் முசாரத். கணவரை இழந்த (கைம்பெண்) முசாரதிற்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். இவருடைய குடும்பம் ஒன்றரை வருடங்களாக வாடகைக்கு குடியிருந்த கட்டிடம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட போது, அதில் முசாரத்தின் மூத்த மகள் புஷ்ராவின் கல்வி ஆவணங்கள் அனைத்தும் நாசமானது.

“என்னுடைய புத்தகங்கள், வீட்டுப் பொருட்கள், ஆவணங்கள், எல்லாமே எரிந்துவிட்டன, அப்பாவின் உழைப்பு அத்தனையும் சாம்பலானது” என்கிறார் புஷ்ரா.

கலவரத்திற்கு முந்தைய தினம் முசாரத்தின் குடும்பம், முசாரத் கருவுற்றிருந்ததால் அவருடைய அம்மாவின் வீட்டிற்கு சென்றிருந்தது. வீடு தாக்கப்பட்டது தெரிந்ததும் மீதம் இருப்பதை எடுத்துப் போக இவர்கள் சென்றபோது, வெறும் சாம்பல் மட்டுமே மிஞ்சியிருப்பது தெரியவந்தது.

வீடு எரிந்ததற்கு நிவாரணம் கோரி, கரவல் நகரில் இருக்கும் துணை மாஜிஸ்திரேட்டிடம் சென்றிருக்கிறார்கள். அங்கு போன போது தான் வீட்டின் உரிமையாளருக்கும், கட்டிடத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் நிவாரணம் ஏற்கனவே கொடுக்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது. இது குறித்து கேள்வியெழுப்பியதும், வீட்டின் உரிமையாளருக்கு ஏற்கனவே நிவாரணப் பணம் கொடுக்கப்பட்டதால், முசாரத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக சொல்லப்பட்டிருக்கிறது.

கரவல் நகரின் துணை மாஜிஸ்திரேட் புனீத் படேல், முசாரத்தின் வீட்டின் உரிமையாளர் நிவாரணப் பணம் பெற்றதாகவும், அதை முசாரத்துடன் பகிர்ந்து கொள்ள மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார். முசாரத் வீட்டின் முகவரி ஆவணத்தை வைத்து, தான் அந்த வீட்டில் வாழ்ந்ததாக நிரூபித்தால் மட்டுமே நிவாரண நிதியை வீட்டின் உரிமையாளரிடம் இருந்து வாங்கி முசாரத்திடம் கொடுக்க முடியும் என்று படேல் கூறியுள்ளார்.

மனிதாபிமான அடிப்படையில், முசாரத் தன்னுடைய வீட்டில் குடியிருந்தார் என்று எழுத்தில் தெரிவித்து, நிவாரண பணத்தை பகிர்ந்து கொள்ள வீட்டின் உரிமையாளர் முன் வருவதை பொறுத்து தான் அடுத்து நடக்கவிருப்பது தெரியும் எனும் படேல், “ஏன் அதிகாரிகளிடம் இருந்து மட்டும் நேர்மை எதிர்பார்க்கப்படுகிறது? ஏன் மக்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுவதில்லை” என்று கேட்கிறார்.

ஷிவ் விஹார் பகுதியில், பல குடும்பங்கள் 2000 முதல் 4000 ரூபாய் வாடகையில் வாழ்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில் வாடகை ஒப்பந்தங்கள் போடப்படுவதில்லை. வீட்டின் உரிமையாளர்கள், பரிந்துரைகளினாலோ, தெரிந்தவர்கள் வழியாகவோ தங்கள் வீடுகளில் ஆட்களை குடி வைக்கிறார்கள். முசாரத்திடமும் வாடகை ஒப்பந்தமோ, அவர் அந்த வீட்டில் வாழ்ந்தார் என்பதற்கு சாட்சியாக ஏந்த ஆவணமோ இல்லை.
கலவரம் நடக்கும் போது முசாரத் அந்த வீட்டில் இல்லாததாலும், நிரூபிக்க ஆவணங்கள் இல்லாததாலும், வீட்டின் உரிமையாளர் முசாரத்திற்கு போய் சேர வேண்டிய நிவாரண பணத்தை எடுத்துக் கொண்டார்.

முசாரத்தின் ஆறு மாத மகன் ரய்யனுக்கு சுவாச பிரச்சினைகள் இருக்கின்றன; பெருந்தொற்று காரணமாக, முசாரத்தின் மற்ற இரண்டு பிள்ளைகளான ஜுனைத்திற்கும் ஷுமைலாவிற்கும் பள்ளிக் கட்டணம் செலுத்துவது போராட்டமாக இருக்கிறது; புஷ்ரா பலமுறை துணை மாஜிஸ்திரேட்டின் அலுவலகத்திற்கு சென்று அவநம்பிக்கையோடு திரும்பிக் கொண்டிருக்கிறார்.எப்போது வேண்டுமானாலும் நிலைமை மோசமாய்விடும் என்பது போல இருக்கும் முசாரத்தின் குடும்பம் இப்போது பாபு நகரில் ஒரு வாடகை வீட்டில் இருக்கின்றனர். வீட்டில் வருவாய்க்கு என ஒரு வழியும் இல்லாததால், வீட்டு வாடகையை சமாளிப்பதே பெரிய சிக்கலாக இருக்கிறது.

டெல்லி கலவரத்திற்கு பிறகு முசாரத் அவருடைய அம்மாவின் வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்தார்; உறவினர்களும் அரசு சாரா அமைப்புகளும் செய்த உதவியை வைத்து பிழைத்துக் கொண்டிருந்தார்.

ரய்யனுக்கு மருந்துகள் வாங்குவதா, அல்லது ஜுனைத்திற்கு பள்ளிக் கட்டணத்தை செலுத்துவதா என்பது போன்ற குழப்பமான சூழல்கள் அடிக்கடி வரும் என்கிறார். ஒரு குழந்தைக்கு இல்லாமல், இன்னொரு குழந்தையின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்; எது குடும்பத்தின் பசியை நெடு நேரம் போக்குமோ, அந்த உணவை தான் தேர்வு செய்ய வேண்டும் என கூறுகிறார் முசாரத்.

“வீடு எரிந்த பிறகு எங்களிடம் நான் உடுத்தியிருந்த உடை மட்டுமே இருந்தது. பிறப்பு சான்றிதழ்கள், ஆதார் கார்டுகள், புஷ்ராவின் 12ஆம் வகுப்பு சான்றிதழ்கள் எல்லாவற்றையும் கலவரம் தின்று விட்டது” என்கிறார்.

பிப்ரவரி 25 ஆம் தேதி, அம்பிகா விஹாரில் இருக்கும் டோஃபிக் என்பவரின் வீடு இருந்த கட்டிடத்தில் “முல்லோன் கே கர் டூண்டோ” என்று கத்தியபடியே கலவரம் செய்து கொண்டிருந்தவர்கள் ஏறியுள்ளனர். டோஃபீக்கை துரத்திக் கொண்டிருந்தவர்கள், கட்டிடத்தின் மாடிக்கு சென்று, அங்கிருந்து வேறொரு கட்டிடத்தின் மீது விழும்படி அவரை தள்ளிவிட்டனர். அவருக்கு வலது காலில் முறிவு மற்றும் இடது காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

அவர் ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், உடனடியாக 20 ஆயிரம் ரூபாய் அவருக்கு நிவாரணமாக கொடுக்கப்பட்டது. ஆனால், பண வசதி இல்லாததால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள பிறரிடம் இருந்து பணம் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறார் டோஃபிக்.

வடகிழக்கு டெல்லியில் வாரச் சந்தைகளில் நடைபாதையில் உள்ளூர் தயாரிப்புகளை விற்றுக் கொண்டிருந்தவர் டோஃபீக். கடந்த ஒன்பது மாதங்களாக, சாப்பாட்டிற்காக, தன்னுடைய உடமைகளை ஒன்றன் பின் ஒன்றாக விற்றுக் கொண்டிருக்கிறார். “கலவரத்தின் போது தாக்கப்பட்ட பிறகு, இப்போது என்னுடைய கால்கள் செயலிழந்துவிட்டன. என்னுடைய மகள் பள்ளி செல்வதை நிறுத்திவிட்டார், நான் வாங்கும் கடன் எல்லாம் மருத்துவச் செலவுக்கும், வீட்டு செலவுகளுக்குமே சரியாக இருக்கிறது” என்கிறார்.

பிப்ரவரி 25 ஆம் தேதி, சௌகத் அலி, சாமன் பூங்காவின் அக்சா மசூதியை கடந்து கொண்டிருந்த போது, அவருடைய இடது தொடையில் துப்பாக்கியால் சுடப்பட்டது. ஆட்கள் “ஜெய் ஸ்ரீ ராம்” எனக் கத்திக் கொண்டு, எரிந்து கொண்டிருந்த கண்ணாடி பாட்டில்களை அப்பகுதி மக்கள் மீது குறி வைத்து எரிந்தது மட்டுமே நினைவிருப்பதாக அவர் சொல்கிறார்.

மூன்று குழந்தைகளுக்கு தந்தையான சௌகத், மெஷின் ஆப்ரேட்டராக இருந்தவர். துப்பாக்கிச் சூட்டிற்கு முன் ஒருநாள் 16 மணி நேரம் வரை நிற்க முடியும். இப்போது அவ்வளவு நேரம் நிற்க முடியாததால் வேலை பாதிக்கப்படுகிறது என்கிறார்.

சௌகத்திற்கு உடனடியாக அரசு நிவாரணம் அளித்தாலும், அவர் இழந்ததற்கு ஈடுகட்டும் அளவில் அந்த தொகை இருக்கவில்லை. இதனால், சௌகத்தின் 13 வயது பெண், பள்ளி செல்வதை நிறுத்திவிட்டாள். உறவினர்கள், அரசு சாரா அமைப்புகளிடம் இருந்து வரும் உதவியை வைத்தே குடும்பமும் பிழைத்துக் கொண்டிருக்கிறது.

(www.thewire.in இணையதளத்தில் வெளியான செய்தியின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்